Sep 29, 2017

இனவாதிகளுக்கு துணைபோகும் அரசாக நல்லாட்சி மாறிவருகிறது; முஜீப் கவலை
இலங்கையில் இருக்கும் ரோஹிங்யா அகதிகளை அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி வேறு நாடுகளுக்கு மாற்றுவது குறித்து அவசரமான தீர்மானமொன்றுக்கு அரசாங்கம் வரவேண்டுமென கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவராண்மையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
அத்தோடு இனவாத ரீதியில் செயற்படும் பிக்குகள் சிலர் ரொஹிங்கியா  அகதிகள் விடயத்தில் நடந்துகொண்ட காட்டுமிராண்டித்தனமான முறையினால் சர்வதேச ரீதியில் கட்டியெழுப்பப்பட்டு வரும் இலங்கைக்கான நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த மனிதநேயமற்ற செயலினால் இலங்கை அரசு சர்வதேச ரீதியில் பாரிய சவாலைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.   

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில்,

கல்கிஸ்ஸையில் தங்கவைக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவராண்மையின் பொறுப்பில் பராமரிக்கப்பட்டு வந்த மியன்மார் ரோஹிங்ய அகதிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் கடலில் தத்தளித்தவர்களாவர். இவர்களை மனிதாபிமான ரீதியில் இலங்கை கடப்படையினர் மீட்டு காங்கேசன் துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு அவர்கள் யூ.என்.எச்.சீ.ஆர் இடம் ஒப்படைக்கப்பட்டனர்.  
கடந்த பல மாதங்களாக மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இவர்களில் ஒரு பெண், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதையடுத்து இவர்களை கல்கிஸ்ஸை பகுதியொன்றிலுள்ள வீட்டில் தங்கவைத்து பராமரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. யூஎன்எச்சிஆர் அமைப்பின் பொறுப்போடு ஒரு அரச சார்பற்ற நிறுவனம் மேற்படி கல்கிஸ்ஸ முகாமை நடாத்தி வந்த நிலையில் அவர்களை பயங்கரவாதிகள் என்றும் அவர்களை  நாட்டை விட்டு வெளியேறுமாறும் பிக்குகள் தலைமையிலான கடும்போக்குவாத சிங்கள இனவாதிகள்  போராட்டத்தை நடாத்தினர்.

மியன்மாரில் உருவாகியிருக்கும் மிக மோசமான சூழ்நிலை காரணமாக அங்கிருந்து தப்பித்து வந்திருக்கும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு இலங்கையில் பாதுகாப்பான சூழல் இல்லை என்பதே உண்மையாகும்.  எனவே இவர்களை வேறு ஒரு பாதுகாப்பான நாடொன்றுக்கு அழைத்து செல்ல ஐக்கி நாடுகளின் அகதிகளுக்கான முகவராண்மை நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை ரோஹிங்கிய அகதிகளின் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக அமைவதோடு அவர்களை வைத்து இனவாதிகள் பொய்யான ஆதாரமில்லாத தகவல்களை பிரசாரம் செய்து இலங்கை முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதிலிருந்தும் தவிர்ந்துகொள்ள வழிவகுக்கும்.

இன்று இந்த கடும்போக்கு பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினால் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயருக்குக் கலங்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ரோஹிங்ய அகதிகள் குறித்து நாடுமுழுவதும் தவறான பொய்யான  பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ரோஹிங்ய அகதிகளின் விடயத்தை வைத்துக்கொண்டு நாட்டில் அமைதியற்ற சூ10ழல் ஒன்றை தோற்றுவிக்கும் முயற்சியில் இந்த கடும்போக்கு அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இந்த அமைப்பினர் 2007 ஆம் ஆண்டு முதல் தெஹிவளை பகுதியில் பெரும் கலவரமொன்றை ஏற்படுத்த முனைந்து வருகின்றனர். காலத்துக்கு காலம் வௌ;வேறு பெயர்களுடன் இவர்கள் இனவாத செயற்பாடுகளை கட்டவிழ்த்துவிடுகின்றனர். இது நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்து நாட்டில்  மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் முயற்சியாகவே கருதவேண்டியிருக்கிறது.

நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் இந்த இனவாதக் குழுக்களின்  செயற்பாடு குறித்து நாம் பல்வேறு முறைப்பாடுகளை வழங்கியிருக்கிறோம். ஆனால் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதையும் வேதனையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அரசாங்கத்திலிருந்த  அமைச்சர் ஒருவர் இவ்வாறான இனவாத சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் அந்த அமைச்சர் தற்போது பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது இந்த இனவாதிகளுக்கு அரசாங்கத்திற்குள் இருந்து இப்போது உதவுகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. 

இவ்வாறான நிலையில் நாட்டில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகளை கண்டும் காணாததுபோல் நல்லாட்சி அரசாங்கம் இருக்குமாயின் இனங்களுக்கிடையிலான மற்றுமொரு வன்முறை தவிர்க்கமுடியாததாய் அமைந்துவிடும். 
இதனால் நாடு இன்னும் பாதாளத்துக்கு தள்ளப்படும். எனவே நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசாங்கம் இனவாதிகளை கட்டுப்படுத்தும் விடயத்திலும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதிலும் உடனடி நடவக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post