ரோஹிங்யா மக்களை இஸ்லாமியர்களாக அல்ல, அகதிகளாக பாருங்கள்: ஒவைஸிரோஹிங்யா மக்களை இஸ்லாமியர்களாக பார்க்காமல், அகதிகளாக பாருங்கள் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைஸி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அசாதுதீன் ஒவைஸி, “திபேத், வங்கதேசம் மற்றும் இலங்கை நாடுகளின் அகதிகள் இந்தியாவில் வசிக்கலாம், ஏன் ரோஹிங்யா மக்களை அனுமதிக்கக் கூடாது. ரோஹிங்யா மக்கள் குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். மியான்மரில் தங்களது அனைத்து உடைமைகளையும் இழந்தவர்களை, மீண்டும் அங்கேயே அனுப்பச் சொல்வது மனிதத் தன்மையற்றது. இது மத்திய அரசின் தவறான முடிவு. வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இந்தியர்களின் சகோதரியாகலாம், ஏன் ரோஹிங்யா மக்கள் ஆகக் கூடாது?” என்றார்.

மேலும், “மத்திய பாஜக அரசு, ரோஹிங்யா மக்களை அகதிகளாக பார்க்க வேண்டுமே தவிர, இஸ்லாமியர்களாக அல்ல. திபேத், இலங்கை மற்றும் வங்கதேச அகதிகளுக்கு பாதுகாப்பான இடமளிக்கு இந்தியா, ரோஹிங்யா மக்களுக்கு மறுப்பது ஏன்? இந்திய அரசமைப்புச்சட்டம் இந்திய குடிமக்களுக்கு என்ன உரிமைகளை வழங்கியுள்ளதோ, அதே உரிமைகளை அகதிகளாக வருபவர்களுக்கும் வழங்கியுள்ளது. மத்திய பாஜக அரசு, ரோஹிங்யா மக்களை மியான்மருக்கே திருப்பி அனுப்ப உள்ளதாக கூறியுள்ளது. அவர்களை எந்த சட்டத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்புகிறார்கள் என்பதை கூற முடியுமா?” என்று ஒவைஸி கூறினார்.