கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மாயம்! சபை ஒத்திவைப்பு


20ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நடைபெறவிருந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னோடியாக அனைத்து மாகாண சபைகளிலும் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.


இதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண சபையில் இது குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கடந்த வாரம் நடைபெறவிருந்த நிலையில், ஏற்பட்ட களேபரம் காரணமாக இன்றைய திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்றைய சபை அமர்வுகளுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஒருவர் கூட சமூகமளிக்காத நிலையில் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன், குறித்த சட்ட மூலம் தொடர்பில் மாகாண சபையின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துவதை விடுத்து இவ்வாறு கண்ணாமூச்சி ஆடுவது கேலிக்கூத்துக்கு ஒப்பானது என்று விமர்சித்துள்ளார்.
மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பையும் ஆளுங்கட்சியின் இச்செயற்பாட்டை வன்மையாக கண்டித்துள்ளார்.