நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன்! – டாக்டர் ஹதியாஇந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறிய நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன் டாக்டர் ஹதியா

கடந்த மே மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவர் ஹதியா இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறினார். பின்பு செபின் ஜகான் என்ற முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹதியா குடும்பத்தினர் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹதியா-செபின் ஆகியோரின் திருமணத்தை செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு குழுவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி ஹதியா, செபின் இடமிருந்து வலுகட்டாயமாக பிரித்து கடந்த இரண்டு மாதங்களாக காவல்துறையின் மேற்பார்வையில் வீட்டுக்காவலில் வைக்கபட்டுள்ளார். இந்த கண்காணிப்பில் ஹதியா அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்ப வேண்டும் என்று காவல்துறையின் பல்வேறுபட்ட ஆலோசனைகள், குடும்ப உறுப்பினர்களின் சமாதான பேச்சுகள் என்று தொடர்ந்து ஹதியா அவர்களுக்கு கொடுக்கபட்டது.

இதற்கு மத்தியில் சபரிமலை கோவில் பூசாரியின் குடும்பத்தை சார்ந்த ராகுல் ஈஸ்வர்  என்பவர் ஹதியாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ராகுல் அவர்களிடம் ஹதியா கூறியது இவைதான் “நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன், இதற்காக நான் இவ்வாறாக பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். இதற்காக தான் தற்போது நான் வீட்டு காவலில் வைக்கபட்டிருக்கிறேன்.” என்றார்.

மேலும் “நான் தொழுகையில் ஈடுபடும்போது என்னுடைய அம்மா என்னை கடுமையாக ஏசுகிறார். என்னுடைய விருப்பத்தின்படி தான் நான் மதம் மாறினேன். நான் விரும்பிய வாழ்கை எனக்கு வேண்டும்” என்று உறுதியாக கூறினார்.