Sep 28, 2017

ரோஹிங்ய அகதிகள் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் கொள்ள வேண்டிய நிதானங்கள்


உலகின் எங்கோ ஒரு மூலையில் மனிதனாகப்பிறந்த ஒரு ஜீவன் அநியாயமாக இறந்தாலும் அல்லது துன்பப்பட்டாலும் எமக்கும் அது வலியைக்கொடுக்கும். இது மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் உணர்வாகும். அவ்வாறு பாதிக்கப்படுவது ஒரு முஸ்லிம் என்கின்ற போது மனிதாபிமானம் என்பதையும் தாண்டி எமக்குள் இன்னோர் உணர்வு ஏற்படும்.
அந்த அடிப்படையில் எமது நாட்டுக்கு அகதிகளாக வந்து ஐ.நா வின் அகதிகள் தொடர்பான கிளையான UNHCR இனால் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள  ரோஹிங்ய மக்களுக்கு நேற்று சில பௌத்த கடும்போக்காளார்களால் ஏற்பட்ட இடையூறானது எமது உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடிய விடயமாகும். அவ்வாறு எமக்கு ஏற்படும் ஆதங்கமானது, இங்குள்ள பெரும்பான்மை மக்களையும் அரசாங்கத்தையும் பகிரங்கமா எதிர்ப்பதாக அமையும் போது அது மதிநுட்பமான செயலாகாது. மாற்றமாக அவர்களது இனவாத பிரசாரத்தை இன்னுமின்னும் வேகமாக முடுக்கி விடவே வழி சமைத்து விடும்.
எனவே இன்னொரு நாட்டு மக்களுக்காக எமது நாட்டுக்குள் பிரச்சினையைத் தோற்றுவிக்காமல் எமது தேவைகள் அனைத்தையும் எமது அகிம்சைக்குணங்களாலே சாதிக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனமும் ஆகும்.
அந்த வகையில், இங்கு எமது உணர்வுகளை கட்டுப்படுத்தி, உணர்வுகளை விட சிந்தனைக்கு முக்கியம் கொடுக்கும் அறிவுசார் சமூகமாக மாறவேண்டியுள்ளது. அதுவே காலத்தின் தேவையுமாகும். அந்தவகையில் பின்வரும் விடயங்களை நாம் எமது சிந்தனைக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது.
அதில் பிரதானமாக ஒரு அரசுக்குச் சொந்தமான அகதிகளை இன்னொரு அரசு பொறுப்பெடுக்க வேண்டும் என்று சர்வதேச சட்டத்தில் எந்த நியதியும் இல்லை. இருந்த போதிலும் மனிதாபிமான அடிப்படையில் இவ்வாறான விடயங்கள் உலகெங்கிலும் இடம்பெற்று வருகின்றது. இதற்கு நல்லதொரு உதாரணம்தான் இலங்கையின் உள்நாட்டு யுத்த காலப்பகுதியில் இங்கிருந்து இலட்சக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய வெளிநாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புகுந்து இன்றுவரை அங்கு வாழ்ந்தும் வருகிறார்கள்.
அடுத்தது, எமது இலங்கையைப்பொறுத்த வரையில் வளங்கள் குன்றிய மற்றும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வரும் ஒரு நாடு. அந்த வகையில் இன்னோர் நாட்டு அகதிகளையும் இலங்கை அரசு பொறுப்பெடுக்க வேண்டும் அவர்களுக்கு வாழ்வாதாரங்களை செய்து கொடுக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இங்குள்ள தேவைகளை நிவர்த்தி செய்யவே எமது பொருளாதாரம் இடம் கொடுப்பதாய் இல்லை. இதிலே எப்படி மேல்மிச்சமாக செலவழிப்பது ??
அதே போன்று இலங்கையில் அண்மைக்காலமாக சிங்கள பேரினவாதிகளினால் முன்வைக்கப்பட்டு வரும் ஒரு பொய்யான குற்றச்சாட்டு 2050ம் ஆண்டளவில் இலங்கை முஸ்லிம் பெரும்பான்மை  கொண்ட நாடாக மாறிவிடும் என்பதாகும். எந்தவித லொஜிக் உம் இல்லாத இந்த பிரசாரத்தை சிங்கள மக்களும் உண்மையென நம்பி அச்சப்படுகிறார்கள். நிலமை இவ்வாறிருக்கும் போது ஏற்கனவே முஸ்லிம் பெரும்பான்மை அதிகரிப்பதாக சந்தேகம் கொண்டுள்ள ஒரு சமூகம் இன்னும் புதிதாக வேறு நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் இலங்கை அரசுக்குள் வருவதையோ வாழ்வதையோ விரும்புவார்களா…?? இதை நாமனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
மேற்படி பௌத்தர்களின் அச்சத்துக்கு காரணம் உலகில் பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகள் மிகச்சொற்பம், அதிலொன்றுதான் இலங்கை அந்த வகையில் இலங்கையும் அவர்களது கையை விட்டுப்போய்விடும் என்பதாகும்.
உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமிய நாடுகள் 56 உள்ளன. அந்த நாடுகளே இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எதுவுமின்றி இருக்கும் இந்த நிலையில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மட்டும் ஏன் இதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டும் என்றே இந்த பௌத்த பேரினவாதிகள் நினைக்கிறார்கள்.
உலக இஸ்லாமிய நாடுகளில் பங்களாதேஷ் மட்டும் இப்போதைக்கு கிட்டதட்ட ஆறு இலட்சம் ரோஹிங்ய அகதிகளுக்கு தங்குமிடம் வழங்கியுள்ளது. அதுவும் நிரந்தரமாகத் தங்கிவிட முடியாது என்ற நிபந்தனையுடன். அதே போன்று
துருக்கியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகளின் மூலம் அறியக்கிடைக்கிறது. இதைத்தவிர வேறெந்த முஸ்லிம் நாடுகளும் இது தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. இஸ்லாமிய நாடுகளே இவ்வாறிருக்கும்போது பௌத்த நாடான இலங்கைக்கு இவர்களை பொறுப்பேற்பதற்கு என்ன தேவையிருக்கிறது என்றே அவர்கள் சிந்திக்கிறார்கள்.
இது ஒரு புறமிருக்கு உலகளாவிய ரீதியில் உள்ள 196 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிற 56 நாடுகள் தவிர்த்து முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளிலே இலங்கை முஸ்லிம்களே ஒப்பீட்டளவில் சிறந்த கல்வி மற்றும் ஒழுங்கமைப்பை பெற்ற சமூகமாகத் திகழ்கின்றார்கள். இந்த கௌரவம் எமக்கு கிடைத்தமைக்கான காரணம் எமது முன்னோர்களது தேசிய பங்களிப்பு மற்றும் அவர்களது முன்மாதிரியான வாழ்க்கை முறை என்றால் அது மிகையாகாது.
எனவே தான் நாம் இவ்வாறான நிலமைகள் ஏற்படுகின்ற போது
யாரும் பொறுமையிழந்து  கையிலெடுத்து விடக்கூடாது. ஏனெனில் அதைக் காரணமாக வைத்து எம்மீது பாய்வதற்கும் எம்மை நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் இனமாகமும் பயங்கரவாதிகளாகவும் காட்டுவதற்கும் ஒரு கூட்டம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. மேலும் அரசியல்வாதிகளை ஏசுவதும், உலமா சபையை விமர்சிப்பதையும் விட்டு விட்டு, உலகின் எல்லா பாகங்களிலும் ஆட்சி புரிகிற அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் மனிதாபிமானம் என்ற உயர்ந்த பண்பை வழங்குமாறும், குறிப்பாக ரோஹிங்ய மக்களுக்கு நிம்மதியான வாழ்வை வழங்குமாறும் அல்லாஹ் தஆலா விடம் இரு கரமேந்துவோமாக…..
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post