கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடல் #Kalmunaiஅகமட் எஸ். முகைடீன்

புதிய அரசியல் அமைப்பில் கல்முனை கரையோர மாவட்டத்தை உள்வாங்குவது தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பிரதமருடன் பாராளுமன்றத்தில் வைத்து விரிவாக பேசினர். 
 
இதன்போது கரையோர மாவட்டம் தொடர்பாக விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறி புதிய உத்தேச அரசியல் யாப்பு கல்முனை கரையோர மாவட்டத்தை உள்ளடக்கியதாக நிறைவேற்றப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தினார்.  

இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க கூறுகையில் அரசியலமைப்பில் 3இல் 2 பெரும்பான்மை இல்லாமலேயே நிர்வாக மாவட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் உருவாக்க முடியுமென்றும் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டார். 

ஆனால் 1978 ஆம் ஆண்டு யாப்பின் படி  3இல் 2 பெரும்பான்மையுடன் மாவட்டம் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் அரசியல் அமைப்பில் உள்ளடக்கியதாகவே கல்முனை கரையோர மாவட்டத்தை உருவாக்க முடியுமென பிரதி அமைச்சர் ஹரீஸ் சுட்டிக்காட்னார். இதனை பிரதமர் ஏற்றுக்கொண்டதோடு பிரதி அமைச்சர் ஹரீஸ் கூறுவதுபோன்று ஜே.ஆர். ஜயவர்தனவின் சட்ட ஏற்பாடுகளின் படி 3இல் 2 பெரும்பான்மை வேண்டுமெனத் தெரிவித்தார்.        

பிரதமர் மேலும் தெரிவிக்கையில் கல்முனை கரையோர மாவட்டத்தை உருவாக்குவது சம்பந்தமாக அதை அரசியல் அமைப்பில் நிச்சயமாக உள்ளடக்குவதாக தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு 3இல் 2  பெரும்பான்மை என்பது மிகவும் அவசியமான விடயமாகும், பெரும்பான்மையை பெறுவதில் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளின் வாக்கு தீர்மானிக்கின்ற ஒரு விடயமாக காணப்படுகிறது. எனவே எந்தத் தடைவந்தாலும் அதனை முறியடித்து கல்முனை கரையோர மாவட்டத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கை எடுப்பேன் என்று பிரதமர் கூறினார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2002ம் ஆண்டு பிரதமராக இருந்தபோது அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாவட்டத்தையும் குருணாகல் மாவட்டத்தில் நிகவரெடிய மாவட்டத்தையும் உருவாக்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றிருந்தமையினை பிரதி அமைச்சர் ஹரீஸ் இங்கு ஞாபகப்படுத்தியதோடு அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மொழி தெரியாதவர்களாக பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்கள் காணப்படுவதனால் ஏற்படுகின்ற நிர்வாக சிக்கலை தீர்க்கும்வகையில் குறித்த கரையோர மாவட்டம் அமையும் எனத் தெரிவித்ததோடு நல்லாட்சி அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில் கல்முனை கரையோர மாவட்டம் என்பது எமது கட்சியின் பிரதான கோரிக்கையாக காணப்படுகின்றது. அரசுக்குத் தேவையான 3இல் 2  பெரும்பான்மைக்கு எமது கட்சி ஆதரவு வழங்குகின்ற விடயம் கல்முனை கரையோர மாவட்டத்தை மையமாக வைத்தே அமையுமென தெரிவித்தார். 

அதற்கமைவாக கல்முனை கரையோர மாவட்டம் சம்பந்தமான நகல் ஆவணங்களை தயார்படுத்துவதில் பிரதி அமைச்சர் ஹரீசும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும் செயற்பட்டுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.