Oct 17, 2017

வட, கிழக்கு இணைப்பு விடயத்தில் மு.கா அலட்டிக் கொள்ளாது; ரவூப் ஹக்கீம் திடம்


வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக் கொள்ளாது என, அக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வட, கிழக்கு இணைக்கப்பட வேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள விடுதியொன்றில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே ஹக்கீம் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிப்லி பாறுக்கின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையால் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா, முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் காலத்தில் வரவுள்ள உள்ளுராட்சி தேர்தலின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளதாவது,

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்.

சில உள்ளுராட்சி மன்றங்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக காங்கிரஸ் விளங்கும்.

இதற்கான செயற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

கட்சிக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். அவற்றினை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியினை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு கட்சி போராளிகளுக்கு உள்ளது.

காத்தான்குடியை பொறுத்த வரையில் கடந்த ஒன்றரை வருடத்தில் வரலாறு காணாத அபிவிருத்திகளை எமது கட்சி செய்துள்ளது.

45 கோடிக்கு மேல் நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. கழிவுநீர் முகாமைத்துவ திட்டத்திற்கு 100 மில்லியன் டொலருக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான வேலைத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

வட, கிழக்கு இணைப்பு தொடர்பில் சிலர் தேவையற்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை எழுதிக் கொடுத்தது போன்று சிலர் கதைக்கின்றனர்.

சிலர் அதனை வைத்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முனைகின்றனர். முதலில் அரசியல் என்பது என்ன என்பது தொடர்பான புரிதல் இருக்க வேண்டும்.

சாத்தியமானவற்றை சாதித்துக் கொள்கின்ற கலைதான் அரசியலாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கின்ற தரப்புகளின் தலைமைகளுக்கு வட, கிழக்கு இணைப்பு என்கின்ற விடயத்தின் சாத்தியப்பாடு சம்பந்தமாக என்ன தெரியும் என்கின்ற விடயம் எனக்குத் தெரியாது.

ஆனால் இந்த நாட்டிலே இருக்கின்ற தெளிவான அரசியல் ஞானம் இருக்கின்ற எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். அரசியல் யாப்பு சொல்கின்ற விடயம். முஸ்லிம் காங்கிரஸினுடைய நிலைப்பாடு என்னவெனில் நாங்கள் இணைப்பு, பிரிப்பைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

நாங்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்பவர்கள் என்பதை காட்டப் போவதுமில்லை.

சிங்களவர்கள் மத்தியில் சில விடயங்களுக்கு கூஜா தூக்கிகளாக பார்க்கப்பட வேண்டிய அவசியமுமில்லை.

எங்களை பாவித்து சிங்கள சமூகம் தமிழர்களுக்கு எதனையும் செய்வதை தடுப்பதற்கு நாங்கள் உடந்தையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஒரு நடுநிலையான சமூகம்.

ஒரு மாகாணம் இன்னுமொரு மாகாணத்துடன் இணைவது என்றால் அந்த மாகாணத்தில் உள்ள மக்களின் அபிப்பிராயங்களை கேட்காமல் செய்ய முடியாது.

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையில்லாமல் மாகாணங்கள் இணைய முடியாது. இது அரசியல் யாப்பில் உள்ள விடயம். இவ்வாறு இருக்க அதனை வேறு வகையில் சொல்லி பீதியை கிளப்ப சிலர் முயல்கின்றனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ள பாரம்பரிய கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து பேணி வருகின்றோம்.

வட, கிழக்கு இணைப்பு என்றால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் என்பது எமது கோரிக்கையும் கொள்கையும்.

அதில் இருந்து நாங்கள் மாறவில்லை. இணைவுக்கு என்ன தேவையென்பதை யாப்பும் சட்டமும் சொல்கின்றது.

அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு இந்த யதார்த்தம் தெளிவாக தெரியும்.

சர்வதேசம் வந்து வலுக்கட்டாயமாக வட, கிழக்கினை இணைத்துவிட்டு எங்களை நட்டாற்றில் விட்டுவிடும் என சிலர் கருதுகின்றனர். தமிழ் தேசிய தலைமைகளுக்கும் தெரியும் முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் அது சாத்தியமில்லையென்று. அதனை அவர்கள் மிக தெளிவாக கூறுகின்றனர்.

வட, கிழக்கு பிரிப்பு நடந்ததும் காகம் உட்கார பணம் பழம் வீழ்ந்த கதையாகவே உள்ளது. அதனையும் நாங்கள்தான் செய்தோம் என சிலர் கூறித்திரிகின்றனர். பாராளுமன்றம் செல்வதற்கு வாக்கு பற்றாக்குறையாகவுள்ள சிலர் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே இவற்றினை கூறுகின்றனர்.

நான் கண்டி மாவட்டத்தில் தேர்தல் கேட்டு வெற்றி பெறுகின்றவன். 20 ஆயிரத்திற்கும் குறையாத வாக்கினை சிங்கள மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். நான் வட, கிழக்கினை பிரியென்றும் இணையென்றும் எங்கும் பேசியது கிடையாது. அதனை கதைத்திருந்தால் ஒரு பத்தாயிரம் வாக்கினை அதிகரித்திருக்க முடியும். அது எனக்கு தேவையில்லை.

நான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர். எனக்கு பொறுப்புணர்ச்சியிருக்கின்றது. தேவையற்ற கருத்துகளை தெரிவிப்பதினால் அர்த்தமில்லை. சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுக்க முடியாது.

தமிழ் -முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள உறவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றாவது ஒரு நியாய பூர்வமான இணக்கப்பாட்டை அடையலாம் என்ற நம்பிக்கையில் கொஞ்சமாவது எஞ்சியிருக்கின்றது என்பது எமக்கு பிரயோசனமாக இருக்கும். அவ்வளவு தான். அதனைவிட பல பிரச்சினைகளை நாங்கள் தீர்க்க வேண்டியுள்ளது, என்றார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network