ஜனாசா அறிவித்தல்; ஏறாவூரின் பன்முக ஆளுமை ஜெமீல் சேர் மறைந்தார்கடந்த மூன்று மாதங்களாகக் கடுமையாகச் சுகவீனமுற்றிருந்த ஜெமீல் சேர் தனது 73 ஆவது வயதில் இன்று அதிகாலை உயிர் நீத்தார்.

விளையாட்டு வீரராக, சாரணராக, கூட்டுறவு முகாமையாளராக, ஆசிரியராக, கல்லூரி அதிபராக, ஏறாவூர் நகரப் பிரதேச சபையின் தலைவராக எல்லாம் இருந்து தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர்.

நகைச்சுவை ததும்பப் பேசுகிற சிறந்த மேடைப் பேச்சாளர், பல தடவைகள் துப்பாக்கிகள் அவரைக் குறி வைத்த போதும் தப்பித்து வாழ்ந்தவர். அக்கால அவசியம் கருதி சிறு ஆயுதங்களைக் கையாளும் பயிற்சியை அவரது 46 ஆவது வயதில் பெற்றுக் கொண்டவர், அஞ்சா நெஞ்சன்.

60 களில் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் உயர்தரம் கற்கும் மாணவனாக இருந்த காலம் தொட்டு கடந்த 56 ஆண்டுகளாக பல தேசியப் பெருந்தலைவர்களோடும், இடதுசாரித் தலைவர்களோடும், முஸ்லிம் தலைவர்களோடும் அரசியல் செய்து அனுபவப்பட்டவர். சமூகத்தின் மீதும், சாதாரணமான மனிதர்களிடமும் அபரிமிதமான நேசத்தைச் செலுத்திய மனிதா் இவர்.

என் அரசியல் வாழ்வில் 32 ஆண்டுகள் எனக்குத் தூணாகத் துணை நின்ற பெரியார். தலைமறைவு வாழ்வுக் காலத்தில் என்னைப் பாதுகாப்பதில் கரிசனை காட்டிய கவசம்.

1980 களின் நடுப்பகுதிகளில் படையினர் என்னை வேட்டையாடக் குறி வைத்து அலைந்த காலத்தில் சமூகத்தின் அங்கத்தினர் பெரும்பாலோர் ஒதுங்கிக் கொண்ட போதும், தயக்கமோ, அச்சமோ இன்றி ஆலமரமாக நின்று எனக்கு அடைக்கலம் தந்த ஜெமீல் சேர் இன்று வீழ்ந்து கிடப்பதைக் காணுகையில் நெஞ்சு விம்முகிறது.

2008 ஆம் ஆண்டு நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட போதுதான் இவர் இறுதியாக மேடைகளில் பேசினார். மாகாண சபையில் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஒரு நாள் மட்டக்களப்பில் இருந்து என்னோடு திருமலைக்கு வந்தார். அவ்வேளை மிகவும் களைப்படைந்து காணப்பட்ட அவர், சபை அமர்வைக் காண பார்வையாளர் அரங்குக்கு வர மறுத்து வண்டிக்குள்ளே தூங்கிவிட்டார். அன்றிலிருந்து அவரை ஆட்கொண்ட நோய் மெல்ல மெல்லச் சாய்த்து இன்று வீழ்த்தியே விட்டது.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

பதிவு - முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத்