மதங்களின் பெயரிலான அரசியல் நிறுத்தப்பட வேண்டும்; ஆளுனர் ரெஜினோல்ட்


மதங்களின் பெயரை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார்.

கட்டுகுருந்தை பௌத்த பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இலங்கையில் ஏராளமான அரசியல் கட்சிகள், மதங்கள் மற்றும் இனங்களின் பெயர்களில் அமைந்துள்ளன.

அவ்வாறான கட்சிகள் இலங்கையை ஒன்றுபடுத்த உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக கருத முடியாது.

என்னைப் பொறுத்தவரை நாட்டில் எந்தவொரு பிரதேசத்தையும் எந்தவொரு இனத்துக்குமான தனிப்பட்ட பிரதேசமாக கருத இடமளிக்கக் கூடாது.
அதே போன்று பாடசாலைகளிலும் சகல இனத்தவர்களும் ஒன்றாக சேர்ந்து கல்வி கற்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.
அதன் மூலமாக மட்டுமே இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு பிரஜையும் தம்மாலான வகையில் நல்லிணக்கத்துக்காக பாடுபட முன்வர ​வேண்டும் என்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.