Oct 30, 2017

விவரணம் (சித்திரிப்பு எழுத்துக்கள்)

மென்வாசிப்புக்காக (for light reading) எழுதப்படுவதே விவரணம். ஆகையினால் கடினமான செய்திகளின் ஆய்விலிருந்து இது வேறுபடுகிறது. விவரணம் அல்லது சித்திரிப்பு எழுத்துக்கள் வசனநடையில் பாடல்கள் போன்ற மொழியோட்டம் உள்ளது. விவரணத்துக்கான மொழிநடை விரைவும் உற்சாகமும் சுவையும் மிக்கதாக இருக்க வேண்டும். ஒரு பிறந்தநாள் வைபவத்தில் ஆற்றப்படும் ஆர்வத்தைத் தூண்டும் உரைபோல அது அமையவேண்டும். அது ஒரு உரையாடல் பாணியில் அமையவேண்டும்.
வழங்கப்படும் விவரணம் முழுவதிலும் வாசகருக்கு ஆர்வத்தைக் கொடுப்பதாக அமையவேண்டும். எந்த மக்களைப் பற்றி எழுதப்படுகிறதோ விவரணம், அது அவர்களுக்குத் தொடர்பை வழங்க வேண்டும். ஒரு செய்தித் தெரிவிப்பு போலல்லாமல் விவரண எழுத்துக்களில் பெயர்ச்சொற்களை விபரிக்கும் சொற்கள் (adjectives) அனுமதிக்கப்படுகின்றன. உணருதல் (feelings), உணர்வுப் பெறுமானங்கள் (Sentiments), உணர்ச்சிகள் (emotions) மற்றும் நகைச்சுவை (humour) ஆகியவற்றை வெளியிடுவதாக ஒரு விவரணம் அமையும்.
விவரணம் எழுதுதல் என்பது செய்தி எழுதுதல் அல்லாத ஒரு விடயமாகும். ஒரு செய்திக்கதை தகவல்களையும் உண்மைகளையும் வழங்குகிறது. ஆனால் விவரணம் அவற்றை விருத்தி செய்துவிடுகிறது. அது செய்தித் தெரிவிப்போ அன்றேல் செய்தி ஆய்வோ அல்ல. விவரண எழுத்து என்பது அவதானிப்பையே பிரதான தளமாகக் கொண்டது. அதேவேளை தீவிரமான ஆய்வு ஆக்கங்கள் தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
உதாரணமாக வேலையில்லாப் பிரச்சனையை, புள்ளிவிபரங்கள் கொண்ட செய்தி ஆய்வினூடாக வெளிக் கொண்டுவருவதை விட நேர்காணல்கள்மூலம் வெளிக்கொண்டுவரமுடியும். சாதாரண செய்தி அறிக்கைகளில், தத்தமது பெயர்களோடு மட்டுமே செய்தியாகும். மனிதர்களை, வெளிச்சத்துக்குக் கொண்டுவர விவரணம் எழுதப்பட முடியும். உதாரணமாக தனது பதினொரு வயதில் B.Sc முடித்த ஒரு சிறுமி பற்றி எழுதப்படக்கூடிய விவரணத்தைக் கூறலாம்.
ஒரு விவரண எழுத்து மரபுவழியான தொடக்கத்தைக் கொண்டிருக்காது. ‘திடீரெனத் தொடங்குதல்’ போலவும் விவரணத்தின் தொடக்கம் இருக்கமுடியும். சிறுகதைகளின் பல நுட்பங்களில் எதையாவது அது பின்பற்ற முடியும். விவரணத்தின் கருத்தோட்டம் படிப்படியாக விருத்திசெய்யப்படுவதோடு ஒவ்வொரு பந்தியும் அடுத்ததுடன் தொடுக்கப்பட்டதாகவே இருக்கும்.
ஒரு விவரணம் தொடக்கம், மத்தி, முடிவு என்பனவற்றைக் கொண்டிருக்கவேண்டும். ஆர்வத்தைத் தூண்டுதல் அல்லது காட்சியை உருவாக்குதல், கருத்துக்களின் உச்சத்தில் போதிய விளக்கம் கொடுத்தல் அல்லது எழுதப்படும் விடயம் தொடர்பாக விரிவாக விளக்குதல் அத்துடன் பிரவாகமான முடிவுப்பகுதி அல்லது சாராம்சம் என்பன உடையதாக விவரணம் இருக்கவேண்டும்.
விவரணம் ஒரு நல்ல வீடுபோல இருக்கவேண்டும். முடிவு தெளிவானதாகவும் உறுதியானதாகவும் அமைக்கப்பட வேண்டும். விவரணத்தை ஒரு வீட்டுக்கு ஒப்பிட்டால் அதன் முடிவுப்பகுதி வீட்டின் கூரைக்கு ஒப்பிடப்படலாம். முடிவாகிய கூரைப்பகுதி வசதியாக ஏனைய பாகங்களில் உட்கார்ந்திருக்க வேண்டும்.
அக்காலத்துக்குப் பொருத்தமான எந்த விடயத்தையிட்டும் விவரணம் எழுதப்படமுடியும். தீபாவளி, கிறிஸ்மஸ், ஹோலி, பெருந்தலைவர்களின் ஆண்டு நிறைவுகள் முதலிய கொண்டாட்டங்களாகக்கூட விவரண விடயங்கள் அமையலாம்.
விவரணம் என்பது காலவரையறைக்கு உட்படக்கூடியதல்ல. ஆனால் ஒரு செய்தி ஆய்வானது அது எழுதப்படும் காலத்திற்கு மட்டும் பொருந்துவதாகவும் அர்த்தம் தருவதாகவும் அமையும்.
விவரணங்களின் வகைகள்
ஒரு விவரணம் என்பது ஒரு நீடித்த செய்திக் கதையாகவோ ஒரு சொந்தக் கருத்தாகவோ யாரோ ஒருவருடைய சொந்தக் கருத்தாகவோ நழுவல்பாங்கான எழுத்துக்களாகவோ ஒரு விளங்கப்படுத்துகையாகவோ மனித ஆர்வத்தைத் தூண்டும் கதைகளாகவோ விடயங்களின் பின்னணியாகவோ அமையலாம். தெருவோரச் சிறுவர்களின் அவலம், தொழில் பார்க்கும் பெண்களின் நிலை முதலிய சமூக விடயங்கள் நல்ல விவரணங்களை உருவாக்கப் பயன்படலாம். அதே போல குப்பைத் தொட்டிகளிலிருந்து கழிவுப்பொருட்களைச் சேகரித்தல், நச்சுப்பாம்புகளை சேகரித்தல் போன்ற வினோத பழக்கங்கள் முதலியனவும் விவரணத்துக்குகந்தன.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post