Oct 3, 2017

ரோஹிங்ய படகு விபத்தில் மீட்கப்பட்ட ராஷிதாவின் அழுகுரல்; முழுமையான பதிவு


“எனது கைக்­கு­ழந்தை என் கைகளில் இருந்து வழுக்கி, தவறி கட­லினுள் விழுந்­தது....”  கடந்த வியா­ழக்­கி­ழமை மியன்­மா­ரி­லி­ருந்து பங்­க­ளாதேஷ் கடல் வழி­யாக தப்பிச் செல்­லும்­போது படகு கவிழ்ந்து 60 ரோஹிங்ய அக­திகள் பலி­யா­கி­யி­ருக்­கலாம் என கூறப்­பட்ட சம்­ப­வத்தில் உயிர் தப்­பி­யுள்ள 23 வயது நிரம்­பிய ராஷிதா எனும் ரோஹிங்ய அகதிப் பெண் தனது 7 மாதக் ஆண்­கு­ழந்தை தனது கைகளில் இருந்து வழுக்கிச் சென்று கட­லினுள் விழுந்து கண்­முன்னே இறந்­த­மையை விவ­ரிக்­கும்­போதே இவ்­வாறு கூறி­யுள்ளார்.
கடல் கொந்­த­ளிப்பு கார­ண­மா­கவும் அதி­க­ரித்த பய­ணி­களின் எடை கார­ண­மா­கவும்  இவர்கள் பயணம் செய்­துள்ள படகு இரண்டு துண்­டங்­க­ளாக உடைந்து போனதும் ஒரு துண்டம் கட­லினுள் மூழ்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதன்­போது தன் கைகளில் ஏந்­தி­யி­ருந்த தனது கைக்­கு­ழந்தை கடல் நீரினுள் விழுந்து சுழி­யினால் கட­ல­டிக்கு இழுத்துச் செல்­லப்­பட்ட கொடூரம் கண்­முன்னே நிகழ்ந்த அவ­லத்தை ராஷிதா அனு­ப­வித்­துள்ளார். தற்­போது பங்­க­ளாதேஷ் கொக்ஸ் பஸார் பகு­தியில் அமைந்­துள்ள வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வரும் ராஷிதா படகு கவிழ்ந்து அக­திகள் பலி­யான கோரச் சம்­ப­வத்தில் தனது குழந்தை கட­லினுள் இழுத்துச் செல்­லப்­பட்ட கொடூ­ரத்தை தனது சகோ­த­ரியின் கைகளை இறுகப் பற்­றி­ய­வாறு விவ­ரித்தார். 
இந்தச் சம்­ப­வத்தில் ராஷி­தாவின் தாயாரும் 8 வயது நிரம்­பிய சகோ­த­ரியும் பலி­யா­கி­யுள்­ளனர். ராஷி­தாவின் தந்­தையும் ஏனைய சகோ­த­ரி­களும் பாது­காப்­பாக மீட்­கப்­பட்­டுள்­ளனர்.
இப்­ப­டகில் 50 சிறு­வர்கள் உட்­பட 80 அக­திகள் பய­ணித்­த­தா­கவும், கரை சேர்­வ­தற்கு சில மீற்­றர்­களே இருக்கும் நிலையில் கடல் கொந்­த­ளிப்பு கார­ண­மாக அனர்த்தம் நிகழ்ந்­த­தா­கவும் விபத்தில் மீட்­கப்­பட்ட ரோஹிங்ய அக­திகள் தெரி­விக்­கின்­றனர். மியன்மார் ராக்கைன் பிர­தே­சத்தின் இரா­ணு­வத்தின் கொடு­மைகள் தாளாது பங்­க­ளா­தேஷில் அடைக்­கலம் புகு­வ­தற்­காக நாட்­க­ணக்கில் அடர்ந்த காடுகள் ஊடாக கால்­ந­டை­யாக நடந்து, பின்னர் கடல்­வ­ழி­யாக பங்­க­ளாதேஷ் நோக்கி தப்பிச் சென்ற வேளை­யி­லேயே இவ்­வி­பத்து நிகழ்ந்­த­தாக அவர்கள் மேலும் தெரி­விக்­கின்­றனர்.
இவ்­வி­பத்தில் 23 ரோஹிங்ய அக­திகள் பலி­யா­கி­யுள்­ளமை உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், மேலும் 40 பேர் காணாமல் போயுள்­ள­தா­கவும் புலம்­பெ­யர்­த­லுக்­கான சர்­வ­தேச அமைப்பின் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார். இவர்கள் கடலில் மூழ்கி இறந்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.
இவ்­வி­பத்தில் மீட்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வரும் இன்­னொரு ரோஹிங்ய அகதி மொஹமத் ஹாசிம் விபத்தில் தனது மனை­வி­யையும் இரு பெண் குழந்­தை­க­ளையும் பலி­கொ­டுத்­துள்ளார். மீட்­கப்­பட்ட அவ­ரது மகன் தந்­தையின் கால்­களை இறுகப் பற்றிப் பிடித்­த­வாறும், மகள் அதிர்ச்­சியில் உறைந்­த­வாறும் இருக்­கின்­றனர். விபத்து தொடர்பில் ஹாசிம் விவ­ரிக்­கையில், “நாம் படகில் பய­ணித்த வேளை கடல் மிகவும் கொந்­த­ளிப்­பாக காணப்­பட்­டது. பாரிய அலைகள் தொடர்ச்­சி­யாக ஆர்ப்­ப­ரித்த வண்ணம் இருந்­தன... இதனால் படகு உடைந்து கவிழ்ந்­தது” என்­கிறார்.
புதன்­கி­ழமை இரவு எட்டு மணிக்கு படகில் ரோஹிங்ய அகதி குழு, இரண்டு மணித்­தி­யா­லங்­களில் பங்­க­ளாதேஷ் கரை­யோ­ரத்தை அடைந்துவிடக் கூடிய பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளனர். எனினும் பட­கோட்­டு­நர்­களின் அச­மந்தம் கார­ண­மாக 24 மணி­நேரம் படகு கடலில் தத்­த­ளித்­துள்­ளது. எதிர்­பா­ராத வித­மாக கரை­சேர சில மீற்­றர்­களே இருக்கும் நிலையில் படகு உடைந்­ததில் அக­திகள் கடலில் மூழ்கினர். 
வெள்ளிக்கிழமை அன்று பங்களாதேஷ் கடற்கரையில் சிறுவர்கள், கைக்குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. “எங்கள் கண்முன்னே படகு கவிழ்ந்து அவர்கள் மூழ்கினர்... பின்னர் அலைகளால் அடித்து வரப்பட்டு சடலங்கள் கரையொதுங்கின.....” என கரையோர கடை வியாபாரி சுஹைல் இது தொடர்பில் விவரிக்கின்றார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post