Oct 1, 2017

ரோஹிங்யா எதிர்ப்பின் பின்னணி்; ஏன் இனவாதிகள் இவர்களை தாக்க முற்பட வேண்டு்ம்?தற்போதைய அரசாங்கம் கூட, பௌத்த அடிப்படைவாதக் கருத்துக்களை வலியுறுத்தும், அடிப்படைவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் பௌத்த பிக்குகளின் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கிக் கொண்டிருக்கின்றமை ஒன்றும் இரகசியமான விடயமல்ல.

பொது பலசேனா போன்ற அடிப்படைவாத அமைப்புகள் அண்மைக்காலங்களில் இனவாத, மதவாத வெறுப்புணர்வைத் தூண்டும் நோக்கில் செயற்பட்ட போதும், நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் செயற்பட்ட போதும், அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்த சரியாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிட்டது.
அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் தீவிரமடைந்த ஒரு கட்டத்தில் தான் வேறு வழியின்றி, பொது பலசேனா போன்ற அமைப்புகளை கட்டுப்படுத்தும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. அதற்குப் பின்னர் கொஞ்சம் அடங்கிக் கிடந்த பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் இப்போது மீண்டும் கிளர்ந்தெழத் தொடங்கியிருக்கின்றன.
மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரி பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் மெல்ல மெல்ல போராட்டங்களை நடத் தத் தொடங்கியுள்ளன.
இந்தப் போராட்டங்களுக்கு நாட்டின் இறையாண்மை போன்ற காரணங்களை பௌத்த பிக்குகள் முன்வைக்க முயன்றாலும், இதன் அடிப்படை நோக்கம், பௌத்த அடிப்படைவாதமும், முஸ்லிம்களுக்கு எதிரான விரோதப்போக்கும் தான்.

ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிரான சில நடவடிக்கைகள் , போராட்டங்களை முன்னெடுத்து வந்த பௌத்த அடிப்படைவாத அமைப்புகள், அரசாங்கத்தின் அண்மைய கொள்கைகளால் சற்று அடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தன.
ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு பௌத்த அடிப்படைவாதம் இப்போது, புதியதொரு வழியில் தலையெடுக்க முனைகிறது. இந்தநிலையில், ரோஹிங்யா அகதிகளுக்கு எதிரான போக்கும் அதன் பின்னணித் தொடர்புகளும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியவை.
அதாவது, மியன்மாரில் இருந்து பௌத்த அடிப்படைவாதிகளின் இன அழிப்பு நடவடிக்கைக்குப் பயந்தே, ரோஹிங்யா முஸ்லிம்கள் தமது நாட்டை விட்டுத் தப்பியோடி வருகின்றனர்.

ரோஹிங்யா அகதிகளுக்கு பங்களாதேஷ் அடைக்கலம் கொடுத்தாலும், இந்தியா அடைக்கலம் கொடுக்க மறுத்து வருகிறது. அகதிகள் என்ற போர்வைக்குள் இஸ்லாமிய தீவிரவாதிகள் அடைக்கலம் தேடிக்கொள்ளும் ஆபத்து இருப்பதாக இந்தியா நியாயம் கூறுகிறது.
இந்திய அரசாங்கத்தின் இந்த முடிவு, இந்தியாவுக்குள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுவதாயின், இந்தியாவை விட்டு திபெத் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகளை வெளியேற்ற அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்று காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா குரல் எழுப்புகின்ற அளவுக்கு அங்கு நிலைமைகள் உள்ளன.
ரோஹிங்யா அகதிகள் விவகாரம் ஒரு பிராந்தியப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதனைக் கையாள்வதற்கு விரும்பாமல் இந்தியா ஒதுங்கிக் கொள்ளப் பார்க்கிறது.

பிராந்தியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமது ஈடுபாட்டை உறுதிப்படுத்திக் கொள்வது தான் பிராந்திய வல்லரசுகளின் பண்பு. ஆனால், இந்தியா இந்த விடயத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ளவே முனைகிறது.

அதேவேளை, இன்னொரு பக்கத்தில் ரோஹிங்யா அகதிகளை புனிதப் போருக்குத் தயார்படுத்தும் உத்தியை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பயன்படுத்திக் கொள்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
ரோஹிங்யா மக்கள் விடயத்தில் அடிப்படை வாதம், தீவிரவாதம் என்பனவற்றுக்கிடையில், மனிதாபிமானம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இலங்கையிலும் கூட இந்தப் பின்னணிகளின் ஊடாகத் தான் ரோஹிங்யா அகதிகள் விவகாரம் கையாளப்படுகிறது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இலங்கையில் புகுத்த முனையும் முயற்சிகளும், பௌத்த அடிப்படைவாதத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளும் இடம்பெற்று வரும் சூழலில், தான் ரோஹிங்யா அகதிகள் அதற்குள் சிக்கியுள்ளனர்.

ரோஹிங்யா இனப்படுகொலைக்கு எதிராக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும், போராட்டங்கள் நடத்தப்பட்ட போது, ரோஹிங்யா அகதிகளுக்கு இலங்கையில் இடமளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் அரசாங்கம் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது.

இது பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மியன்மாரில் இருந்து வரும் ரோஹிங்யா அகதிகளுக்கு மாத்திரமன்றி, எந்தவொரு நாட்டில் இருந்து வரும் அகதிகளுக்கும் இலங்கையில் இடமளிக்கப்படமாட்டாது என்று கூறியிருந்தார்.
ரோஹிங்யா அகதிகள், தாய்லாந்து, பங்களாதேஷ் நாடுகளில் தஞ்சம் பெறும் வாய்ப்புகள் இருந்தும், மறைமுக நோக்கங்களுடன், திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை இலங்கையில் குடியமர்த்தும் சூழ்ச்சிகள் நடப்பதாகவும், அதனை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தை மறைமுகமாக கையாளுகின்ற இரகசிய நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இந்த இரகசிய நிகழ்ச்சி நிரல், மேலும் பூசல்களைத் தீவிரப்படுத்தலாம் என்ற அச்சத்தை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியிருக்கலாம்.
அதேவேளை, அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை, பௌத்த அடிப்படைவாத சக்திகள் தமக்குச் சாதகமான விடயமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைந்திருக்கின்றன.

அதன் அடிப்படையில் தான்,ரோஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்டதுடன், அவர்களை வெளியேற்றக் கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும், பௌத்த அடிப்படைவாத சக்திகளுக்கு தலைமை தாங்கும் விராது பிக்கு போன்றவர்கள், இலங்கையின் அடிப்படைவாத பௌத்த பிக்குகளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இந்தத் தொடர்புகளின் ஊடாக விராது பிக்கு இலங்கைக்கும் வந்து சென்றிருந்தார்.

இப்படியான சூழலில் மியன்மாரில் இருந்து பௌத்த பிக்குகளால் விரட்டப்பட்ட ரொஹிங்யாக்களுக்கு, இலங்கையில் அடைக்கலம் கொடுக்கப்படுவதை, இங்குள்ள பௌத்த பிக்குகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இங்கிருந்து தான், ரோஹிங்யாக்களுக்கு எதிரான போராட்டங்கள் வீரியப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிரான விரோதப் போக்கை வெளிப்படுத்தி வந்த பௌத்த அடிப்படைவாத சக்திகள், உள்நாட்டில் அதனை வெளிப்படுத்துவதற்கு சிக்கல்கள் எழுந்துள்ளதால், ரோஹிங்யா அகதிகளை அவர்கள் பகடைக்காயாக்கியுள்ளனர்.
என்றாலும் இதன் அடிப்படை நோக்கம், முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் விரிவுபடுத்துவது தான். அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பௌத்த மதம் ஒருபோதும், வன்முறைகளையோ பிற மதத்தினர் மீதான காழ்ப்புணர்வுகளையோ போதிக்கவில்லை.

ஆனால் பௌத்தத்தின் வழி ஆட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும், அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றைக்காலில் நிற்கும் தரப்பினர், பௌத்தத்துக்கு மாறான வழிமுறைகளையே கையாளுகின்றனர்.
இது பௌத்த மதத்தின் மீதான நம்பிக்கைகளையும், மரியாதையையும் குறைத்து விடும் என்பதை பௌத்த அடிப்படைவாதிகள் யாரும் சிந்திப்பதாகவே தெரியவில்லை.

ஹரிஹரன்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post