முஸ்லீம் இந்துவை திருமணம் செய்து கொண்டால் லவ் ஜிஹாத் என அழைப்பதா?அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இந்தியாவில் இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மனமொன்றி திருமணம் செய்து கொள்வதை ஒன்று லவ் ஜிஹாத் அல்லது கர் வாப்ஸி என்று அழைக்கும் போக்குக்கு கேரள உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தள்ளுபடி செய்த நீதிமன்ற அமர்வு, “மதக்கலப்புத் திருமணங்களை ஒன்று லவ் ஜிஹாத் அல்லது கர்வாப்ஸி என்று அழைத்து பரபரப்பாக்கும் போக்கு இந்த மாநிலத்தில் அதிகரித்துள்ளது. இதயங்கள் இணந்து திருமணம் செய்து கொண்டாலும் இப்படி அழைக்கும் போக்கு நிலவுகிறது” என்று கண்டித்தது.

மதக்கலப்பு திருமணத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இவ்வாறு சித்தரித்து சமூகத்தில் நிலவும் மதஒற்றுமையில் பிளவு ஏற்படுத்துதல் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
அதே போல் கட்டாய மதமாற்றம் பற்றி நீதிமன்ற அமர்வு கருத்துக் கூறும்போது, “கட்டாய மதமாற்றத்தை போலீஸ் தடுத்து நிறுத்த வேண்டும். அது இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி, கிறித்துவமாக இருந்தாலும் சரி” என்று கூறியதோடு, அரசியல் சாசன சட்டப்பிரிவு 25(1)-ன் கீழ் எந்த ஒரு குடிமகனும் எந்த ஒரு மதத்தையும் செயல்முறையாகக் கொள்ளலாம், பரப்பலாம், ஆனால் மதநிறுவனங்கள் மற்றும் பிரச்சினை ஏற்படுத்தும் குழுக்கள் இதில் தங்கள் முரட்டுத் தனத்தைக் கட்டவிழ்த்து விடக்கூடாது” என்று கூறியது.

கண்ணூரைச் சேர்ந்த அனீஸ் ஹமீது என்பவர் தனது இந்து மனைவி ஸ்ருதி என்பவரை அவரது தந்தையின் சட்டவிரோதப் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மனு செய்திருந்தார். இந்த வழக்கில் சுருதி, அனீஸுடன் காதல்வயப்பட்டிருந்தார் என்றும் இந்த நீண்ட காலக் காதல் திருமண உறவாக மலர்ந்துள்ளது, இது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள சான்றிதழே இவர்கள் இருவரும் சட்டரீதியான தம்பதிகள் என்பதற்கான ஆதாரம் எனவே ஸ்ருதியை பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தம்பதியினர் தங்கள் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் ஸ்ருதி தன் விருப்பப்படியே தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளார் எனவே அவரது விருப்பத்துக்கு எதிராக அவரை தடுத்து நிறுத்துதல் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இவர்கள் விருப்பத்துக்கு எந்த ஒரு வடிவத்திலும் இடையூறு ஏற்படாமல் போலீஸ் உறுதி செய்ய வேண்டும் என்று கோர்ட் தெரிவித்தது