Oct 20, 2017

பொதுபலசேனாவின் பின்புலத்தில் ஆசாத் சாலி; மனம் திறக்கிறார் நாமல் ராஜபக்ஷநேர்கண்டடவர் - ஆதில் அலி சப்ரி

புதிய தேர்தல் முறை மாற்றத்தால் முஸ்லிம்களுக்கு அநியாயம் நிகழ்ந்துள்ளது. முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்துகொண்டும் முஸ்லிம் தலைவர்கள் ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதுவரை காலமும் கிழக்கில் இருந்த முஸ்லிம் தலைமைத்துவத்தை இல்லாதொழிக்கவே முஸ்லிம் தலைவர்கள் வாக்களித்தனர். இனியும் கிழக்குக்கு முஸ்லிம் முதலமைச்சரொருவர் வேண்டாமென்று முஸ்லிம் தலைவர்கள் புதிய தேர்தல் முறையை ஆதரித்து வாக்களித்துள்ளதாக பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 
நடப்பு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர்  அளித்த முழுமையான செவ்வியை இங்கு தருகின்றோம்.

கேள்வி: மத்தளை விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது நாட்டுக்கு எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும்? 
பதில்: மத்தளை விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்றன அனைத்துமே இந்நாட்டின் தேசிய சொத்துக்களாகும். துறைமுகங்களும், விமான நிலையங்களும் முன்னேற்றமடையும்போது தான் நாடு அபிவிருத்திப் பாதையில் செல்லும். ஆனால் இன்று அவற்றை தனியாருக்கு வழங்குவதாகக் கூறிக்கொண்டு வேறு நாடுகளுக்கு வழங்குகின்றனர். கொழும்பு துறைமுக நகர் வேலைத் திட்டத்தை நிறுத்தினர். அதனால் சீனாவின் நன்மதிப்பை இலங்கை இழந்தது. இதனால், சீனாவுடன் மீண்டும் நட்பு பாராட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கொடுத்தனர். சீனாவுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கியதால் இந்தியா வருத்தமடைந்தது. இந்தியாவுடன் இழந்த நட்பைப் புதுப்பித்துக்கொள்ள மத்தளை விமான நிலையத்தை வழங்குகின்றனர்.   
நாட்டின் தேசிய சொத்துக்களை பொருளாதார ரீதியில் கையாளக்கூடிய திட்டங்களோ சிந்தனையோ இவர்களிடம் இல்லை என்பதே எமக்குள்ள பிரச்சினை. அரசியல் ரீதியாக இந்த நாடுகள் அனைத்தையும் திருப்திப்படுத்துவதும், சந்தோஷப்படுத்துவதுமே இவர்களிடமுள்ள ஒரே திட்டம். அதற்கு முதன்மைக் காரணமாக அமைவது இந்த அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கை மேற்கை சார்ந்துள்ளதே. அமெரிக்கா மற்றும்     ஐரோப்பாவை மையப்படுத்திய, அவர்களை திருப்திப்படுத்தும் வெளியுறவுக் கொள்கையொன்றையே கடைப்பிடிக்கின்றது. ஆசிய நாடுகளை தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றது. ஆசிய நாடுகளை நாட்டின் தேசய வளங்களை வழங்கி, விற்று திருப்திப்படுத்த முடியும் என்று நினைத்துகொண்டு செயற்படுகின்றதை அவதானிக்கமுடிகின்றது. 
    மத்தளை விமான நிலையத்தை முன்னேற்றுவது இலகுவான காரியமே. இலங்கையின் சுற்றுலாத்துறையை எடுத்துக்கொண்டால், 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹோட்டல் அறைகள் இருக்கின்றன. அவற்ைறை இணையதளத்தில் பதிவுசெய்யலாம். தனியார் தவிர அரசாங்கத்தில் 30 ஆயிரம் ஹோட்டல் அறைகள் அளவில்  பதியப்பட்டுள்ளன. மூன்று, நான்கு, ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் 10ஆயிரமளவிலே இருக்கின்றன. ஏனைய 80 ஆயிரம் வெளிநாட்டுப் பயணிகளும் பட்ஜட் அமைப்பில் குறைந்த செலவில் வருகின்றவர்களே. குறைந்த செலவில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்த செலவில் விமான சேவைகள் வழங்கப்பட வேண்டும். நாம் ஆட்சியில் இருக்கும்போது மத்தளை விமான நிலையத்தை ஸ்ரீலங்கன் விமான சேவைகளுடன் தொடர்புடைய விலை குறைந்த பட்ஜட் விமான சேவைகளே கையாண்டன. அதனால், தெற்கு, கிழக்கு, மேற்கு, பாசிக்குடா போன்ற கடற்கரையோர பகுதிகளில் அபிவிருத்தியேற்பட்டது. இந்த அரசாங்கத்திற்கு இவற்றை கையாள முடியாத காரணத்தினால் விற்கின்றனர். 

நாட்டின் தேசிய வளங்கை விற்று, இன்னுமோர் நாட்டிலிருந்து கப்பல்களை கொள்வனவுசெய்ய முயற்சிக்கின்றது. கடனை திருப்பிச் செலுத்தமுடியாத அரசாங்கம் எவ்வாறு கப்பல்களை கொள்வனவுசெய்யும்? இவர்களை முழுமையான பொய்களையே பரப்பிவருகின்றனர். இவை அபிவிருத்தி திட்டங்களல்ல. தேசிய சொத்துக்களை தனியாருக்கு விற்றுத் தீர்க்கும் திட்டத்தின் பகுதியொன்றே.

கேள்வி: அண்மையில் கைதுசெய்யப்பட்டு, (நேற்றே) பிணை பெற்று வந்துள்ளீர். கைது நடவடிக்கையை எவ்வாறு காண்கின்றீர்? 
பதில்: நாம் தேசிய வளங்களை பாதுகாக்கக் கூறியே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால், தேசிய சொத்துக்கள், வளங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாகக் கூறியே    சிறையிலடைத்தனர். உண்மையாக, தேசிய சொத்துக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, விற்றவர்கள் இன்னும் வெளியில். 
கேள்வி: நீங்கள் ஓர் சட்டத்தரணியும்கூட. நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காகவே குற்றம்சாட்டப்பட்டீர். நீதிமன்ற உத்தரவை அவமதிக்கலாமா?
பதில்: நாம் நீதிமன்ற உத்தரவுகளை எங்கும் மீறவில்லை. அவமதிக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. நாம் நீதிமன்ற உத்தரவை மீறினோமா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த பொலிஸாருக்கும் முடியாமல் போயுள்ளது. அதன் விளக்கம், நாம் நீதிமன்ற உத்தரவுகளை மீறவில்லை என்பதே. வடக்கில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ள வேண்டாமென்ற நீதிமன்ற உத்தரவுள்ளது. ஆனால் இங்கு அவ்வாறில்லை. வடக்கில் சிவாஜிலிங்கம் நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதுவே மீறல். எங்களுக்கு அமைதி ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாம் அவ்வாறே செய்தோம். 
அமைதி ஆர்ப்பாட்டத்தை அமைதியிழக்கச் செய்தது பொலிஸாரே. ஊடகவியலாளர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தது பொலிஸார். கண்ணீர்ப் புகை, நீர்த்தாரைகள் அடித்ததும் அவர்களே. பெட்டன் கம்பால் மற்றும் கற்களால் அடித்ததும் பொலிஸாரே. எமது பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தாக்கப்பட்டனர். நாம் தாக்குதல் நடத்தினால் எமது பாதுகாப்பு துறையினர் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. 

கேள்வி: சட்ட கல்லூரிக்கு முதல்தர மாணவராக தெரிவானவரே நீதிமன்ற தடையுத்தரவை அவமதித்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க டுவீட் செய்திருந்தார். இதுகுறித்து...?
பதில்: இல்லை. அமைச்சர் ரஞ்சன் எல்லா விடயங்களுக்கு சத்தமிடுவார். அது அவருக்கு கொள்கையொன்றோ, போதிய விளக்கமோ இல்லாத காரணத்தினாலாகும். அவரைப் பற்றி பேச விரும்பவில்லை. அவர் தெளிவாக நீதிமன்றை அவமதித்து பேசியவர். நீதிமன்றத்தை அவமதித்ததாக என்மீது கைநீட்ட அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. அவர் தெளிவாக நீதிமன்றத்தை அவமதித்தவர். என்மீது ஒரு விரலை நீட்டினால் ஏனைய நான்கு விரல்களும் அவர் பக்கம் உள்ளதை மறந்துவிட்டார். 

கேள்வி: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மீண்டும் அரசியலில் குதிக்கப்போவதாக தெரிகின்றதா? இதனை எவ்வாறு காண்கின்றீர்?
பதில்: அது நல்லதே. அவர் அரசியலுக்கு வந்தால் தான், அவர் இருக்கும் இடம், நிலைப்பாடு அவருக்கு புரியும். அவர் மீண்டும் அரசியலில் குதிப்பதையே நான் விரும்புகின்றேன். அவருக்கு அரசியலில் குதிப்பதற்கான உரிமையும் உள்ளது. அவர் கட்டாயம் வரவேண்டும். 

கேள்வி: தந்தையின் அரசியல் பயணத்தை பஷில் ராஜபக்ஷவே வீணடித்ததாக குற்றச்சாட்டொன்றுள்ளது. அது உண்மையானதா? 
பதில்: இல்லை. அவ்வாறு கூறமுடியாது. மஹிந்த ராஹபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும்போது, அபிவிருத்தித் திட்டங்களில் அரைவாசிக்கு மேலானவற்றை அவரே தலைமை தாங்கி நடத்திச் சென்றார். வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தி திட்டங்களுக்கு அதிகமாக பாடுபட்டவர் பஸில் ராஜபக்ஷ என்றே கூறவேண்டும். அதனை நான் தனிப்பட்ட ரீதியிலும் அறிந்துள்ளேன். நான் வடக்கில் தங்கியிருந்து பணியாற்றினேன். அதன்போது அவர் எனக்கும் உதவினார். வடக்கும் கிழக்கும் அனுபவிக்கும் அபிவிருத்திகள் பஸில் ராஜபக்ஷவின் முயற்சிகளின் விளைவேயாகும். பஸில் ராஜபக்ஷ கம்பஹா மாவட்டத்திற்கு மாத்திரம் செய்திருக்க இன்று வடக்கும் கிழக்கும் அவ்வாறே இருந்திருக்கும். 

கேள்வி: 2020 ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவை களமிறக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. இதன் உண்மைத் தன்மைகள் எவ்வாறு?
பதில்: இல்லை. அவர் இன்னும் அவ்வாறான தீர்மானமொன்றுக்கு வரவில்லை. 2020ஆம் ஆண்டுக்கான தேர்வுகளை நாம் இப்போதே மேற்கொள்ளப்போவதும் இல்லை. 2020க்கு தேவையானவை நாம் அன்று தருவோம். 

கேள்வி: வில்பத்துவை அழித்து மக்கள் குடியேற்றப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். வவுனியாவின் கருவலங்காலிகுளம் பகுதியில் உங்கள் தலையீட்டில் குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அங்கும் காடழிக்கப்பட்டுள்ளது உறுதி. நாட்டில் பல காடழிப்புகள் இடம்பெற்றாலும் வில்பத்துவை மாத்திரம் தூக்கிப்பிடிப்பது ஏன்?
பதில்: வில்பத்து மாத்திரமல்ல. வில்பத்து வனப் பகுதியின் பாதுகாப்பு வலயம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அது தவறானதாகும். காட்டின் பாதுகாப்பு வலயத்தை சுத்தப்படுத்தவோ, அழிக்கவோ முடியாதென்பதே சட்டம். அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிடவேண்டும். அரசியல்வாதிகளுக்கு வேண்டியவற்றை செய்ய விட்டுவிட்டு, மூன்றில் இரண்டு பலத்தைத் தக்கவைத்துக்கொள்ள முற்பட்டால் அது தவறானதாகும். அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டு, முறைப்படி மேற்கொண்டால் இப்பிரச்சினை தொடர வாய்ப்பில்லை. 
எமது ஆட்சிக் காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் 3இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டன. கிளிநொச்சி முல்லைத்தீவு என அனைத்து பகுதிக்கும் சென்றோம். எனினும் நாம் மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளும்போது அரசாங்கமே தலையிட்டது. நாமல் ராஜபக்ஷ தலையிடவில்லை. இன்று அரசியல்வாதி தலையிட்டாலும் அரசாங்கம் தலையிடுவதில்லை. அரசாங்கத்தின் தலையீட்டுடன் அரசியல்வாதியின் உதவி பெறப்படல் வேண்டும். அதுவே தீர்வாகும். அதுதவிர, அரசியல்வாதிகளுக்கு நினைத்ததையெல்லாம் செய்யவிட்டுவிட்டு அரசாங்கம் ஒதுங்கும்போதே இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன. 

கேள்வி: யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கையெடுக்கும்போது, அதனை தெற்கில் உள்ளவர்கள் இனவாத கண்டுகொண்டு பார்ப்பதேன்?
பதில்: யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்குடியேற்ற பணிகள் பூரணமாகிவிட்டது. அது மக்களை விட அரசியல்வாதிகளே இனவாத பார்வைகொண்டு நோக்குகின்றனர். கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே பிரச்சினையுள்ளது. றிஷாத் பதியுதீனுடன் பிரச்சினையிருப்பது எமக்கல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே. றிஷாத் பதியுதீன் முஸ்லிம் தலைவராக அங்கிருந்து வருவாரென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அஞ்சுகின்றது. மன்னார் வடக்குக்குரியது. கிழக்குக்கல்ல. வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலம் குறையும் என்ற பயம். அது வடக்கில் முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகளிடையே உள்ள அதிகாரப் போட்டியாகும். நாட்டின் பெரும்பான்மை மக்கள் இதனை அவ்வாறு நோக்குவதிலை. தமிழ் தேசிய கூட்டமைப்பே அவ்வாறு நோக்குகின்றது. 

கேள்வி: ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறிக்கொண்டு, ஊழலற்ற நாட்டை உருவாக்குவதாகக் கூறிக்கொண்டு வந்த நல்லாட்சி ஊழல் ஒழிப்பு விடயத்தில் வெற்றிபெற்றுள்ளதா?
பதில்: இந்த அரசாங்கம் வந்ததும் ஊழல் அதிகரித்துள்ளது. இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, மத்தளை விமான நிலையத்தை விற்பனை செய்யும்போது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதன் காரணமும் அதுவே. 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான துறைமுகத்தை ஒரு பில்லியனுக்கு விற்கிறார்கள். 2 பில்லியன்கள் பெருமதியான துறைமுகத்தை 255 மில்லியன் டொலர்களுக்கு விற்கிறார்கள். இதுவே பெரும் ஊழல். 
ரஷ்யாவிலிருந்து யுத்த கப்பல்களை கொள்வனவு செய்யவுள்ளனர். யுத்தம் முடிவடைந்துள்ளபோது யுத்த கப்பல்கள் எதற்கு? ஏன் யுத்த விமானங்கள்? இவையனைத்தும் ஊழலைத் தவிர வேறில்லை. இதற்கு தலையசைக்காத பாதுகாப்பு செயலாளரை, ஜனாதிபதி செயலாளரை பதவியில் இருந்து நீக்கினர். இந்த அரசாங்கத்தின் மிகப் பெரிய ஊழல் பிணைமுறி விடயத்தில் வெளியானது. மைத்திரிபால ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியாக உதவி செய்தவர் லிட்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார். ஊழலில் ஈடுபட்டு பிடிபட்டார். இலங்கை  வரலாற்றில் ஊழல் நிறைந்த, பூச்சியம் அபிவிருத்தியுடைய அரசாங்கமே இது. 

கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியிலும், உங்களுக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றதே...?
பதில்: அவை அனைத்துமே பொய்க் கதைகள். எங்களைப் பற்றி இரண்டரை வருடங்கள் தேடினார்கள். ஆனால் ஒன்றும் செய்துகொள்ள முடியாது போயுள்ளது. இரண்டரை வருடங்கள்    தேடியும், இன்றளவில் எவற்றையுமே நிரூபித்துக்கொள்ள முடியாமல் இன்னும் எங்களுக்கு விரல் நீட்டுகின்றனர். அப்போது அரசியல் இலாபங்கள் ஈட்டிக்கொள்ள மக்களை ஏமாற்றினர். இவர்கள் எங்களை விற்று விற்று ஊழலில் ஈடுபடுகின்றனர். எங்களைத் திருடர்கள் என்று கூறிக்கொண்டு திருட்டில் ஈடுபடுகின்றனர்.                    

கேள்வி: முஸ்லிம் மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் விரக்தியடைந்திருந்தனர். இனியும் முஸ்லிம்களின் ஆதரவைப் பெறமுடியுமென்ற நம்பிக்கையுள்ளதா?
பதில்: முஸ்லிம்களின் கையிலிருந்த வியாபார முயற்சிகள் இன்று பறியோயுள்ளன. பொருளாதார ரீதியாக வீழ்ச்சி. அடுத்த பக்கம் பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புகள் மேற்கின் நிதியுதவியுடன் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். பொதுபல    சேனாவும், ஞானசார தேரரும் மைத்திரி, ரணில், ராஜித்தவின் அரசியல் நாடகத்தின் பகுதியொன்று என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை ஞானசார தேரர் பலமுறையும் மீறினார். ஆனால் இந்த அரசாங்கம் கைதுசெய்யவில்லை. ஆனால், நாமலை கைதுசெய்தனர். யானையொன்றை வைத்திருந்ததாக தேரரொருவை கைதுசெய்தனர். எனினும் ஞானசார தேரரை கைதுசெய்யவில்லை. இந்த அரசாங்கம் பொதுபலசேனாவை பாதுகாக்கின்றது என்பதற்கு இதனைத் தவிர வேறு உதாரணங்கள் தேவைப்படாது.
இந்த அரசாங்கம் பொதுபல சேனாவின் பின்னால் இருப்பது தெளிவு. ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் சமயத் தலைவர்களுக்கான கூட்டத்தில் ஞானசார தேரரையும் இணைத்துக்கொண்டிருந்தனர். அவர் எவ்வாறு அங்கு செல்வார். அவர் பௌத்த தலைவரொருவர் அல்ல. மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர போன்ற மகாநாயக்க தேரர்களே பௌத்த தலைவர்கள். இந்த அரசு அவரை சமய தலைவராக மதிக்கின்றது. முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து தூரமாக்க உருவாக்கப்பட்டவரே அவர். 

கேள்வி: பொதுபல சேனாவின் ஆரம்பம் உங்கள் ஆட்சிக் காலத்தில் ஆகும். அதற்கு பொறுப்புக்கூறவேண்டியது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலானவர்கள் இல்லையா?

பதில்: பொதுபல சேனாவை தாபித்தது நாம் அல்ல. அதனை உருவாக்கியது மேற்கு நாடுகள். மேற்கின் தலையீடே இன்றுவரை உள்ளது. மேற்கு நாடுகளே நிதியுதவியும் மேற்கொண்டன. அதன் பின்னால் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிரிசேன, அசாத் சாலி போன்றோரும் உள்ளனர். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கோத்தாபய ராஜபக்ஷ கலந்துகொண்டதை வைத்து நாம் ஞானசார தேரரை உருவாக்கியதாக கூறுகின்றனர். அந்நிகழ்வுக்கு அழைப்பு விடுத்ததே ராஜித சேனாரத்ன என்பதை மறந்துவிடாதீர்கள்.   கேள்வி: ஞானசார தேரர் மீதான வழக்குகளை அரசாங்கம் நீக்கிக்கொள்ளப் போகின்றதா?பதில்: கட்டாயம் இல்லாது செய்துகொள்வார்கள். ஞானசார தேரரை உருவாக்கியவர்களின் அரசாங்கமே பதவியில் உள்ளது. ஞானசார தேரர், மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றோரும் அரசாங்கத்தின் பங்காளிகள். நாம் மாத்திரமே எதிர்க்கட்சியினர். கட்டாயம் நீக்கிக்கொள்வார்கள். 
அரசாங்கத்துக்கு தேவையானது சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களை கூறுபோட்டு நாட்டை மீண்டுமொரு யுத்தத்திற்கு கொண்டுசெல்வதற்கேயாகும். மக்கள் அதற்கு இடம்கொடுக்கக்கூடாது. 

கேள்வி: முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றனரா?
பதில்: அசாத் சாலி போன்றோர் பணத்திற்காக வாய் திறப்பவர்கள். அவர்கள் முஸ்லிம்களுக்காக போராடுபவர்கள் அல்ல. அவர்கள் இவ்வளவு நாள் போராடியும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. முஸ்லிம்களின் வியாபாரம், இளைஞர்களின் கல்வி, ஆசிரியர் பற்றாக்குறை, வேலையற்றோர் பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் தலைவர்கள் கதைப்பதில்லை. முஸ்லிம் தலைவர்களுக்கு அரசியல் என்பது ஒரு வியாபாரம். அவர்களை அதையே மேற்கொள்கின்றனர். 
புதிய தேர்தல் முறை மாற்றத்தால் முஸ்லிம்களுக்கு அநியாயம் நிகழ்ந்துள்ளது. முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்துகொண்டு ஆதரித்து வாக்களித்தனர். கிழக்கில் இதுவரை காலமும் இருந்த முஸ்லிம் தலைமைத்துவத்தை இல்லாதொழிக்கவே முஸ்லிம் தலைவர்கள் வாக்களித்தனர். முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் எமக்கு வேண்டாமென்று வாக்களித்துள்ளனர். றிஷாத் பதியுதீன், றவூப் ஹக்கீம் ஆகியோரும் அரசாங்கத்துக்காகவே அன்றி, முஸ்லிம்களுக்காக முன்னிற்பவர்கள் அல்ல. அவர்களின் அமைச்சுப் பதவிகளை பாதுகாத்துக்கொள்ள, எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் ஆதரிக்கின்றனர். 
மார்ச், ஏப்ரல் மாதங்களில் முஸ்லிம் கடைகளை தீ வைக்கவும், பள்ளிவாசல்களை தாக்கவும் ஆரம்பித்தனர். அதற்கு நீதியான விசாரனைகளை நடத்த ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவில்லை. தர்கா நகர் விடயத்துக்கு ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவில்லை. அவ்வாறு அமைக்கப்படின் கைதுசெய்யப்படவேண்டியவர்கள் ராஜித்தவும், சம்பிக்கவும், மங்களவுமே. 

கேள்வி: எதிர்வரும் தேர்தல் குறித்த ஏற்பாடுகள் எவ்வாறுள்ளது?
பதில்: நாம் எந்தத் தேர்தலுக்கும் தயார். நாம் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவோம். நாட்டின் சகல பாகங்களிலும் போட்டியிடவுள்ளோம். வடக்கு கிழக்கிலும் போட்டியிடவுள்ளோம். அனைத்திலும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுள்ளது. 

கேள்வி: முன்னாள் அமைச்சர் அஸ்வரின் இழப்பை எவ்வாறு காண்கின்றீர்? 
பதில்: முன்னாள் அமைச்சரின் மரணம் எமக்கு பெரும் இழப்பாகும். பாராளுமன்றத்துக்கு பேரிழப்பாகும். பாராளுமன்றத்திற்கு பெரும் சேவையாற்றியவர். பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டங்களில் பரந்த அறிவுடையவராக காணப்பட்டார். அவர் போன்ற முஸ்லிம் தலைவர்களின் இழப்பு எமக்கு மாத்திரமன்றி, முஸ்லிம் மக்களுக்கும் இழப்பாகும். அவர் முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்த உண்மையான தலைவராவார். கற்றுத் தேர்ந்த, மிதமான முஸ்லிம் தலைவர்கள் உருவாவது காலத்தின் 
தேவையாகும். 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network