BREAKING NEWS

Oct 28, 2017

‘வட, கிழக்கு புத்துயிர்பெற வேண்டும்’சிலோன் முஸ்லிம் மட்டக்களப்பு செய்தியாளர் வா.கிருஸ்ணா
“நான் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவன் என்று சொல்வதை விட தமிழன் என்று சொல்வதிலேயே பெருமை கொள்கின்றேன்” என, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு, இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட்டக்களப்பு - கல்லடி - உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (27)  நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களுக்கு தேவையானவற்றைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் என்னை அமைச்சராக நியமித்துள்ளது. அதனை முடிந்தவரையில் நான் செய்துவருகின்றேன்.
“இன்று நாங்கள் எவ்வளவோ காணிகளை விடுவித்துள்ளோம். வீடுகளை கட்டியுள்ளோம். அந்த மக்களுக்கான பல பணிகளை நாங்கள் செய்துவருகின்றோம். இன்று இரண்டு - மூன்று வருடங்கள் ஆட்சிக் காலம் உள்ளது. அந்த காலத்துக்குள் வடக்கு - கிழக்கு புத்துயிர்பெற வேண்டும் என்பவே எங்களது அவா. ஒரு நாடு பொருளாதார ரீதியில் முன்னெறும்போதே எல்லோரும் முன்னேறமுடியும்.
“நாங்கள் கல்வி கற்றபோதே அனைத்து இன மாணவர்களும் அங்கு கற்றனர். அதனால் அவர்களுடன் சகல வழிகளிலும் பழகியதனால் எங்களுக்குள் பேதங்கள் ஏற்படவில்லை. நாங்கள் பெருமையாக வாழ்ந்த சமூதாயம். அந்த பெருமையை நாங்கள் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.
“ஆனால், சிலர் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் இருந்த பிணைப்பை மறைத்து அரசியல் ரீதியான பிளவொன்றை ஏற்படுத்திவிட்டனர். சிங்கள அரசியலிலும் தமிழ் அரசியலிலும் இருந்த சில கடும்போக்குகளே இந்த நிலைமைக்கு காரணமாக இருந்தன. நாங்கள் இனிவரும் காலத்தில் அந்த வலைக்குள் விழக்கூடாது.
“பொருளாதார ரீதியில் வடக்கு முற்போக்காக இருக்கவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை அடுத்த கட்டமாக மேற்கொள்ளவுள்ளேன். கைத்தொழில் வலயம் ஒன்றை ஏற்படுத்தி வெளிநாடுகளில் உள்ள மக்கள் வந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும். மாங்குளத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கு பல முட்டுக்கட்டைகளும் போடப்படுகின்றன.
“அவ்வாறான பொருளாதார வலயங்களை ஆரம்பித்தால், வடமாகாண தமிழ் மக்களுக்கு பெரும் சந்தர்ப்பம் ஏற்படும். அதிகளவான வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து முதலீடுகளை மேற்கொள்ளும்போது வேலைவாய்ப்புகள் அதிகளவில் ஏற்படுத்தப்படும். அதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படும்” என்றார்.
“வட மாகாணத்தில் இன்று போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இளைஞர்கள் அதிகளவில் அவற்றை பயன்படுத்துகின்றனர். வேலைவாய்ப்புகள் இல்லாததே இதற்கு காரணமாகும். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பணத்தை அனுப்பும்போது அதனை பிழையான வழியில் பயன்படுத்துகின்றனர்.
“பெற்றோர் தமது பிள்ளைகளை இந்துநெறியின் கீழ் ஒழுகவளர்க்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் சமய பாடசாலைகளுக்கு சென்று கற்க வேண்டும். தனியார் வகுப்புகளை நடாத்தும் ஆசிரியர்கள் ஞாயிறு தினங்களில் காலை 8.30க்கும் 12.00மணிக்கும் இடையில் தனியார் வகுப்புகளை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
“இன்று இந்துக்கள் மதமாற்றப்படுவதாக கூறுகின்றனர். அதற்கு காரணம் யாரென்று பார்த்தால் நாங்களாகவே இருக்கின்றோம். இந்து மதக் கோட்பாடுகளை நன்கு அறிந்திருந்தால் மதமாற்றம் நடைபெறாது.
“இந்த சமூதாயத்தில் பிறந்து மக்களுக்காக சேவையாற்றவேண்டும். அரசியல் என்பது முக்கியத்துவமில்லை. நான் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவன் என்று கூறவிரும்பவில்லை. நான் தமிழன் என்று கூறியே எனது கடமையை செய்யவிரும்புகின்றேன். அதனை சில அரசியல்வாதிகள் மறக்கின்றனர்” எனவும் தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2014 Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA. Designed by | Distributed By