Oct 6, 2017

நாட்டின் அரசியலில் என்ன நடக்கிறது; அரசியல் மாற்றம் குறித்த முழுவிவரம்


அண்மைய அரசியல் நிகழ்வுகள் கண் முன்னே முஸ்லிம் சமுதாயத்துக்கு பெரிய அநீதி ஒன்று நடைபெறப் போவதற்கான முஸ்தீபுகள் முடுக்கி விடப்பபட்டுள்ளதை  வெளிப்படையாகவே கட்டயம் கூறி நிற்கின்றன. புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இருபதாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் என்பன வெவ்வேறானவை என்றிந்தாலும் அவை அனைத்திலும் ஒரு பொதுவான ஒற்றுமை ஒன்று இருந்தது. அது தான் முஸ்லிம்களின் அரசியல் உரிமையை மலினப் படுத்துவது எனும் வரலாற்றுத் துரோகம். 

எந்த முஸ்லிம் சமூகம் மைதிரியின் நல்லாட்சி வருவதற்கு தாங்கள் இருப்பையே பணயம் வைத்து உதவியதோ, அதே நல்லாட்சி முஸ்லிகளின் முதுகில் மட்டுமில்லை முகத்திலும் ஓங்கிக்  குத்தியுள்ளது. அதுவும் எம் முஸ்லிம் பிரதிநிதிகளின் பூரண அனுசரணையுடன் இந்த அராஜகம் நிகழ்ந்தேறி உள்ளது. 

சமூக விழிப்புணர்வை நோக்காக கொண்டு  இம் மூன்று விடயங்களினதும் பின்னணியை நாம் புரிந்திருப்பது நம்மை இன்னும் இன்னும் ஏமாற்றாமல் அல்லது நாம் ஏமாறும் சமூகமாக என்றும் இல்லாதிருக்க உதவிடலாம். 

A. இருபதாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
மைத்திரி-ரணில் தேசிய அரசு தேர்தல் ஒன்றிற்கு செல்வதற்கு பெரிதும் தயக்கம் காட்டி வருவது யாவரும் அறிந்ததே. அதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பயப்படும் படியான செல்வாக்கு பிரதான காரணமாகும். எனவே மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் செல்வாக்கை அல்லது எதிர் காலத்தை மலினப் படுத்திவிட்டு ஓர் தேர்தலுக்குச் செல்வதையே இப்போதய அரசு பெரிதும் விரும்பியது. எனவே இருபதாவது அரசியல் திருத்தச் சட்டம் எனும் அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடக தேர்தலை 2019 ஆண்டு வரை பிற்போடுவது எனும் திருட்டுத் திட்டத்தை நல்லாட்சி அரசு போட்டது. அதனோடு சேர்த்து அரசு இன்னொரு “லட்டை”யும் தின்ன ஆசைப்பட்டது. அதுதான் மாகாண சபையின் கொஞ்சம் எஞ்சிக் கிடக்கும் அதிகாரத்தையும் பின் கதவால் களவாடுவது எனும் நரித் தந்திரம். (இத் திருத்தம் கைவிடப்பட்டுள்ளதால் இதன் பாதகத் தன்மை பற்றிய விரிவான விளக்கம் தவிர்க்கப்படுகிறது)

பொதுவாக சட்டத் திருத்தம் ஒன்றைப் பாராளுமன்றத்தில் கொண்டு வர சாதாரண பெரும்பாண்மை (வருகை தந்தவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள்) போதுமானதாகும். ஆனால் அரசியலமைப்பத் திருத்த அல்லது அரசியலமைப்புக்கு முரணான சட்டம் ஒன்றை  இயற்ற, (முரண்பாட்டின்) அதன் தன்மைக்கு ஏற்ப (Depending on the nature or naturre of inconsistency) பின்வரும் முன்றில் ஒரு வழிமுறை பின்பற்றப்படல் வேண்டும். 

1. பாராளுமன்றில் 2/3 பெரும்பாண்மை 
2. பாராளுமன்றில் 2/3 பெரும்பாண்மையும் மாகாண சபைகளின் அங்கீகாரமும். 
3. பாராளுமன்றில் 2/3 பெரும்பாண்மையும் சர்வஜன வாகடுப்பும். 

இதில் எந்தமுறை அவசியம் என்பதை இலங்கையின் உச்சநீதி மன்றமே தீர்மானிக்கும். 
இந்த வகையில் இருபதாவது அரசியலமைப்பின் திருத்த சட்டத்தின் நிறைவேற்று முறைமைக்கான நீதிமன்ற தீர்ப்பு வெளிவரும்  முன்னரே கடந்த மாத இறுதியில் இறந்து போக இருந்த மூன்று மாகாண சபைகளுக்கு உயிர் கொடுக்க அவசரமாக அரசு மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்கு இச் சட்டமூலத்தை அனுப்பி வைத்தது. வட கிழக்கிற்கு வெளியே  பல மாகாண சபைகள் இந்தத் திருத்தத்தை அதிகாரப் பறிப்பு என எதிர்த்து வாக்களித்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் மட்டும் அந்த வினோதம் நடந்தது. 

சபைக்கு வந்த சட்டமூலத்தை திருத்தத்துடன் வந்தால் பரிசீலிப்போம் என வாக்கேடுப்புகே விடாமல் ஒரு ஓரத்தில் வைத்து ஒய்யாரமாய் காத்திருந்தது வடமாகனசபை. 
கிழக்கு மாகாண சபையில் பகீரதப் பிரயத்தனத்தின் பின் இது முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் நிறைவேறியது. 

இது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதற்கு தனியே ஒரு புத்தகமே எழுதலாம். எனினும் முஸ்லிம் பிரதிநிதிகளில் துரோகத்தனம் ஒன்றும் எமக்கு புதிதல்ல. 18வது திருத்தம், கசினோ சட்டம்,  முன்னால் பிரதம நிதியரசர் சிராணி பண்டாரநாயகவின் பதவி நீக்கம் போன்றவற்றில் எல்லாம் கண்களைக் கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்த கதை எமக்கெல்லாம் பழகிப் போன ஒன்று தான். ஆனால் உரிமை வேண்டும், உரிமை வேண்டும், என்று உச்சத்தில் நிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி கை உயர்த்தியது என்ற நியாயமான கேள்வி எல்லோருக்கும் வந்தது. 

பதிலை அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பத்திரிகைப் பேட்டி ஒன்றில் ஒப்புவித்தார். த.தே.கூட்டமைப்பு மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இத் திருத்தத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக வாக்குமூலம் கொடுத்தார். 

1. மதச்சார்பற்ற நாடு (Secular state) 
2. கூட்டாட்சி (Feradalism)
3. வடகிழக்கு இணைப்பு 

இதில் இறுதி இரண்டு நிபந்தனைகளும் ஒன்று சேர்ந்து வரும் போது கிழக்கு முஸ்லிங்களின் உரிமைக்கு அது மரண அடியாக அமையும் என்பது வெளிப்படையான விடயம். மு.கா இதற்கு ஏன் ஆதரவளித்தது என்னும் அதிர்வலைகள் ஆத்திரமாக கிழக்கில் வெளிப்பட தொடங்கிய போது தான் அரசின் கனவுவில் மண் அள்ளிப் போட்டது உச்ச நீதிமன்றம். 

அதாவது இத் திருத்தச் சட்டம் மக்கள் இறைமையிலேயே கைவைத்துள்ளதால், இதை நிறைவேற்றிக் கொள்ள பாராளுமன்றில் 2/3 பெரும்பாண்மையும் சர்வஜன வாக்கெடுப்பும் வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. 

தேர்தலுக்குப் பயந்து கொண்டுவந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற இன்னொரு தேர்தலுக்கு போக வேண்டும் என்ற இக்கட்டில் அரசு தள்ளப்பட்டது. ஆனால் நல்லாட்சி எனும் தந்திர அரசு இந்த நிலை ஏற்பட்டால் அதை எதிர் கொள்ள இன்னொரு மாற்றுத் திட்டத்தை இரகசியமாக  வைத்திருந்தது.

B. மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம்
1988 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமுலம் ஒன்று 10.07.2017 அன்று வர்தமானியில்  பிரசுரிக்கப் பட்டு 26.07.2017 அன்று உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

தற்போதைய (1978) அரசியலமைபின் உறுப்புரை 78 (1) க்கு அமைவாக எந்தச் சட்டமூலமும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு  முன்னர் குறைந்தது 7 நாட்களுக்கு முன்னர் வர்தகமானியில் பிரசுரிக்க வேண்டும். இவ்வேற்பாடு எந்த சட்ட மூலமும் மக்கள் முன் சமர்பிக்கப்பட்டு  அவர்களது கருத்துகளை பெற, நிதிமன்றில் ஆட்சேபனைகளைத் தெரிவித்துக் கொள்ள இடமளிக்கும் வகையில் அமையப் பெற்றதாகும். 

நல்லாட்சி அரசாங்கம் இக்கால எல்லை போதாது என்று கருதி 19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் 18 ஆம் உறுப்புரையில் இக் கால எல்லையயை 14 நாட்களாக நீடித்து ஜனநாயகத்தை மேம்படுத்தும் நல்ல பிள்ளைகளாக தங்களைக் காட்டிக் கொண்டனர். அனால் அந்த நல்ல பெயரை இச்சட்டமூலம் வெகுவாகப் பாதித்திருந்தது.
இருபதாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மக்கள் கருத்தறியும் வாக்கடுப்பு அவசியம் என்னும் நீதிமன்ற தீர்ப்பு, தேர்தலைப் பிட்போடுவதற்காக இன்னொரு ஜனநாயக விரோத வழியை நல்லாட்சி அரசு நாடிச் செல்ல வைத்தது.  அதாவது 10.07.2017 அன்று வர்த்தமனியில் பெண் வேட்பாளர்களை 30% அதிகரிக்கும் வெறும் இரண்டு பக்கங்களுக்கு குறைவான மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்த சட்டமுலம் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. 

அந்தச் சட்டம் விவாதத்துக்கு வரும் போது “சில” மாற்றங்கள் செய்யப் போகிறோம் என்ற தோரணையில், நல்லாட்சி அரசாங்கம் 21 பக்கங்கள் கொண்ட, மாகாணசபையின் போக்கையும், சிறுபான்மை அங்கத்துவத்தையும் பெருமளவில் பாதிக்கும் ஒரு நேர்மறையான சட்டமுலமாக மாற்ற திட்டமிட்டது.  

செவ்வாய் கிழமை (19.09.2017) அன்று சபாநாயகர் தலைமையில் அந்த வாரத்தின் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடலில், அமைச்சர் ரவுப் ஹகீம்மும் அமைச்சர் ரிசாத் பதியுதீனும் இந்த விடயத்தில் தாங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கையில் சுதந்திரக் கூட்டமைப்பு அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சி லக்ஸ்மன் கிரியல்லயும் அமைச்சர்கள் இருவரையும்  கடுமையாக  சாடியுள்ளனர். 

அங்கிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமைசர் ரவுப் ஹகீமைப் பார்த்து “நீங்கள் உங்களைப் பற்றி மட்டும் பார்க்காமல் ‘பெரிய வட்டத்தில்’ சிந்தியுங்கள், நாங்கள் விரும்பி இருந்தால்  கிழக்கில் தமிழ் முதலமைச்சரை கொண்டுவந்து இருப்போம்” என்று மிரட்டி இருக்கிறார். (“Hakeem only looked himself and did not see the larger picture, if we wanted, we could have a tamil Chief Minister” – 24.09.2017 Sunday Times p15)
வியாழன் (21.09.2017) பாராளுமன்றத்தில் விவாதிக்க இருந்த சட்டமூலத்தின் பிரதி புதன் மதியம் (20.09.2017) வரைக்கும் யாருக்கும் தெரியாமலே வைக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த ஜம்மியதுல் உலமா சபை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அவரசமாக அழைத்து முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட போகும் ஆபத்தைப்பற்றி தாங்கள் கரிசினையைத் தெரிவித்தது. அதில் அனைத்துப் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக முஸ்லிம் காங்கரஸ் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஒருமித்துச் செயற்படுவதாக உறுதியளித்திருந்தனர். 

நிலைமையை தங்களுக்கு சாதகமாக்க நல்லாட்சி அரசு ஒரு பெரிய பலாப்பழத்தை தன் கவுட்டுக்குள் மறைத்து வைத்ததை நம் மக்கள் பிரதிநிதிகள் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அதாவது இச் சட்டமூலம் நிறைவேற பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பாண்மை மட்டுமே அவசியம் எனும் ஒரு அண்டப் புளுகை கிட்டத்தட்ட முஸ்லிம் தலைமைகள் அனைத்தையும் நல்லாட்சி அரசு இறுதிவரை நம்ப வைத்துள்ளது. 
அன்று மலை 6 மணிக்கு வாக்கெடுப்புக்கு விட இருந்த சட்டமூலத்திற்கு 2/3 பெரும்பாண்மை அவசியம் என்ற விடயம்  அமைச்சர் றிசாத் பதியுதீன், அமைச்சர் ரவுப் ஹகீமுடன் அன்று   மாலை 5 மணிக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தைச் சென்று சந்திக்கும் வரை தெரியாது என்று சொல்லியிருப்பது நம் பிரதிநிதிகளின் பலகீனம் என்று சொல்வதா அல்லது நல்லாட்சியின் நயவஞ்சகம் என்பதா என்று புரியவில்லை. 
பலத்த அமளிதுமளி, மிரட்டல்கள், கழுத்தறுப்புகள், நம்பிக்கைத் துரோகங்களுக்கு மத்தியில் இச் சட்டமூலம் 159 மேலதிக முஸ்லிம் வாக்குகளால் நிறைவேறியது. கவலையான விடயம் என்னவெனில் ஒரு முஸ்லிம் அமைச்சரால் இச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டு  கலிமாச் சொன்ன 21 கைகள் எம் சமூகத்திற்கு எதிராக அன்று கைகளை உயர்த்தியது. 
குறித்த சட்டம் 50% மான உறுப்பினர்கள் தொகுதிவாரியிலும் 50% மான உறுப்பினர்கள் விகிதாசார முறையிலும் தேர்ந்தெடுக்கப்படவும், தொகுதிகளை அமைக்க புதிய எல்லை நிருணய சபையை அமைக்கவும், குறைந்தது 25% பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யவும், தொகுதிவாரி தவிர்ந்த மேலதிக உறுப்பினர்களை நியமிக்க கட்சிச் செயலாளர்களுக்கு அதிகபடியான அதிகாரத்தையும் கொடுக்கவும் வழி செய்வதாக அமையப் பெற்றிந்தது. 

இப்போது இச் சட்டத்திற்கு எதிராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சரத் என் சில்வா வழக்குத் தாக்கல் செய்துள்ளார். புதிய சட்டத் திருத்தத்தின் ஏற்பாடுகளை நோக்குகையில் மாகாணசபைத் தேர்தல் அடுத்த ஆண்டுக்குள் (2019) நடைபெறுவதற்கான சாத்தியம் 50% க்கு குறைவாகவே உள்ளது என சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசபிரிய தெரிவித்துள்ளது அரசு தனது நோக்கத்தில் வென்றுள்ளத்தைப் பறைசாற்றுகிறது.
இச் சட்டதின் ஏற்பாடுகள் சிறுபான்மைச் சமூகங்களுக்கு  இழப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எவ்வளவு மோசமாக பாதிக்கபட போகிறது என்பதை காலம் தான் பதில் சொல்லும். 

C. புதிய அரசியலமைப்பு 
நாட்டின் தசாப்த கால இன பிரச்சினையின் தீர்வாக ஒரு புதிய அரசியலமைபொன்றை உருவாக்குவது என்பது மஹிந்த அரசு சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறிதியாகும். 
நல்லாட்சி அரசும் இதே விடயத்தை தனது தேர்தல் வாக்குறிதியில் ஒன்றாக வைத்து மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டது. மகிந்த அரசு செய்ததைப் போல் நல்லாட்சி அரசும் ஐ.நா சபையில் சர்வேதசத்திற்கு வாக்குறுதி அளித்து வருகிறது. அந்த வகையில் 2016 மார்ச் மாதம் 9ம் திகதி பாராளுமன்றினால் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அரசியலமைப்பு சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. 
அச்சபையானது புதிய அரசியலமைப்பை வரைய 21 அங்கத்தவர்களைக் கொண்ட வழிப்படுத்தும் குழு ஒன்றை ஸ்தாபித்தது. வழிப்படுத்தும் குழு அதன் இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு சபையில் 21.09.2017 இல் சமர்பித்தது. இவ்வறிக்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமான பல  விடயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. ( அவை தனியாக ஆராயப்பட வேண்டியது என்பதால் இங்கே அனைத்து விபரங்களும் குறிப்பிடப்படவில்லை). குறிப்பாக வடகிழக்கு இணைப்பு தொடர்பாக தமிழர் தரப்புடன் அரசு ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதை அறிய முடிகிறது. 

வழிபப்டுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையானது மாகாணசபைக்கு அதிக அதிகாரங்களைப் பகிர்வதற்கான ஏற்பாடுகளை பரிந்துரை செய்கிறது. அவ்வாறான நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு  மாகாணசபைகள் இணைக்கப்படின் அது கிழக்கு வாழ் முஸ்லிங்களின் அரசியல் இருப்பைப் பெருமளவு பாதிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இணைந்த வடகிழக்கு என்பது தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றாகும். இது வரலாறு தொட்டு அவர்கள் வலியுறுத்தி வருவது யாவரும் அறிந்ததே. 
இனபிரசினைக்கு தீர்வாக இலங்கை இந்திய ஒப்பந்தம் 29.07.1987 அன்று அப்போதைய இலங்கை சனாதிபதி J. R.  ஜெயவர்த்தன அவர்களாலும் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களாலும் கைச்சாத்திடப்பட்டது. அதற்கமைவாக 14.11.1987 ம் ஆண்டு அரசியலமைப்பின் 13 திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு மாகாணசபைகள் ஸ்தாபிக்கப்பட்டது. உறுப்புரை 154.அ(1) க்கு அமைவாக வெவ்வேறாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகள் உட்பட ஒன்பது மாகாணசபைகள் நிறுவப்பட்டன.
இதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் (Clause 2) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளை தற்காலிகமாக இணைப்பது எனவும், இவ் இணைப்பு தொடரவேண்டுமா இல்லையா என்பதை கிழக்கு மாகாணத்தில் 31.12.1988 க்கு முன்னராக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு (Referendum) வைக்கப்படும் எனவும் இலங்கை அரசு ஏற்றுக் கொண்டு ஒப்பமிட்டு இருந்தது. 

இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில், அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் உறுப்புரை 154.அ.(3) இல் பாராளுமன்றத்தின் “ஏதேனும்” ஒரு சட்டத்தின் அருகருகே இருக்கும் மாகாணங்கள் இணையலாம் எனும் ஏற்பாடு உள்வாங்கப்பட்டது. அதற்கு சட்ட வலிதுடமை வழங்க 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாணசபைகள் சட்டத்தின் 37(1)(a) பிரிவின் பிரகாரம் சனாதிபதி ஒரு பிரகடனத்தின் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சபைகளை ஒரு மாகாணசபையாக இணைக்கலாம் என சட்டம் இயற்றப்பட்டது. 
இச் சட்டத்துக்கு அமைவாக 1988 செப்டம்பர் 2 & 8 ஆம் திகதிகளில் சனாதிபதி J. R.  ஜெயவர்த்தன அவர்கள் பிரகடனம் ஒன்றின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்தார். இலங்கை இந்திய ஒப்பந்தம் பிரிவு 2.3 (Clause 2.3) க்கு அமைவாகவும், மாகாணசபைகள் சட்டத்தின் 37(2) க்கு அமைவாகவும் கிழக்கு மாகாணத்தில் 31.12.1988 முன்னர் கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெற்றிக்க வேண்டும். 
ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தம் பிரிவு 2.3 (Clause 2.3) மற்றும் மாகாணசபைகள் சட்டத்தின் 37(2)(b) இல் காணப்பட்ட   ஓட்டைகளைப் பயன்படுத்தி அன்றிலிருந்து 2006 ஆண்டு வரையும் சுமார் 17 ஆண்டுகள் அடுத்தடுத்து வந்த அரசுகள் தேர்தலை ஒத்திவைத்து வந்தது. 

கிழக்கு முஸ்லிங்களுக்கு பெரும் சவாலாகவும்  சோதனையாகவும் இருந்த வட கிழக்கு இணைப்புக்கு எதிராக 14.07.2006 இல் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு 16.10.2006 இல் நீதியரசர் சரத் N  சில்வா தலைமையிலான 5  பேர் கொண்ட நீதியரசர் குழாம் வழங்கியது.  

அதில் வடகிழக்கை இணைக்க சனாதிபதி J. R.  ஜெயவர்த்தன அவர்கள் வெளியிட்ட பிரகடனம் சட்டவலிதற்றது என ஐந்து நீதியரசர்களும் ஏகமனதாக தீர்பளித்தனர். [Based on the fact that the section 37(1)(b) of Provincial Council Act is inconsistent with Constitution article 76(3)]. அதற்கமைவாக 1.1.2007 இல் வடக்கும் கிழக்கும் தனித் தனி மாகாணங்களாயின.
ஆனால் இணைந்த வடகிழக்கை தமிழர் தரப்பு என்றுமே விட்டுகொடுத்தாக இல்லை. இதன் தாக்கம் 2000 ஆண்டு சந்திரிக்கா அரசினால் கொண்டுவர முயற்சிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவு, மகிந்த அரசினால் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் அறிக்கை (APRC) போன்ற அனைத்து அரசியல் தீர்வுப் பொதிகளிலும் காணலாம். 

அதன் அடிப்படையில் அரசியலமைப்பு வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையில் அத்தியாயம் 2, பகுதி 2 இல் மாகாணங்கள் அதிகாரப் பகிர்வின் முதன்நிலை அலகாக இருக்கும் என்றும் தெரிவிப்பதுடன் இரண்டு மாகாணங்கள் இணைவது தொடர்பில் மூன்று யோசனைகளை தெரிவிக்கப்பட்டுள்ளன. அவையாவன : 

i. மாகாணங்கள் பாராளுமன்ற சட்டம் ஒன்றின் ஊடாகவும் இணையும் மாகாணங்களின் மக்கள் தீர்பொன்றின் மூலமாகவும் இணையலாம்.
ii. இணைப்பிற்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்தல் ஆகாது.
iii. வடக்கும் கிழக்கையும் அரசியலமைப்பு தனி மாகாணமாக ஏற்றுகொள்ளும்.
இவற்றில் i வது மற்றும் iii வது யோசனைகள் கிழக்குவாழ் முஸ்லிங்களுக்கு மிகவும் பாதகமானதாகும்.  

(i) வது யோசனையில் இணையும் மாகாணங்களுக்கு தனித்தனியே கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற விடயம் மிக தந்திரமாக தவிர்க்கப்பட்டுள்ளது  போல தோன்றுகிறது. வடக்கும் கிழக்கும் இணைப்பதில் தனித்தனியே கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தபட்டால் கிழக்கில் அது தோல்வியடையும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் வடக்கிற்கும் கிழக்கிற்கும் சேர்த்து தேர்தல் வைத்தலானது இணைபிற்கு ஆதரவாக முடிவு வெளிவரவே சாத்தியம் அதிகமாகும். 

(iii) வது யோசனையில் வடகிழக்கு ஒன்றாகவே இருக்கத்தக்கவாறு அரசியலமைப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாகவே சொல்லப்பட்டுள்ளது. இவ் யோசனை அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டால் அதில் இருந்து மீளுவது என்பது மிகக் கடினமான அல்லது அறவே சாத்தியமற்ற செயலாக மாறிவிடும். 
பரிந்துரைகபட்ட யோசனைகள் நிகழ்தகவின் அடிப்படையில் பின்வரும் எதாவது ஒன்றாக மட்டுமே இருக்க முடியும். 

அ. (i) வது யோசனை மட்டும் ஏற்றுகொள்ளப்படல் 
ஆ. (ii) வது யோசனை மட்டும் ஏற்றுகொள்ளப்படல்
இ. (iii) வது யோசனை மட்டும் ஏற்றுகொள்ளப்படல்
ஈ. (i) வது யோசனையும் (iii) வது யோசனையும் ஏற்றுகொள்ளப்படல்
ஈ. (ii) வது யோசனையும் (iii) வது யோசனையும் ஏற்றுகொள்ளப்படல்

இதில் (ஆ) தவிர வேறு எந்த எழுமாறுகள் அரசியலமைப்பில் அறிமுகப் படுத்தப்பட்டாலும் கிழக்கு முஸ்லிங்களுக்கு அது பெரும் அடியாகவே அமையும். இன ரீதியாக பாக்ர்கையில் கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அங்கு 39% (609,584) தமிழர்களும்  36% (569182) சோனகர்களும் (சுமார் 40000 தமிழர்கள் அதிகமாக) வாழ்கின்றனர். இதில் சோனகர் என்ற  வரையறைக்குள் வராத 6,754 முஸ்லிங்கள் வேறாக உள்ளனர். 

மத ரீதியாக பார்கைக்யில் கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அங்கு  37% (575,936) முஸ்லிங்களும் 34% (539,570) ஹிந்துக்களும்  (சுமார் 36000 முஸ்லிங்கள் அதிகமாக) வாழ்கின்றனர். இதுவே வடக்கைக் கிழக்குடன் இணைக்கும் போது தமிழர் 60% மாகவும் முஸ்லிங்கள் 23% மாகவும் மாறிவிடுவர். இது அதிக அதிகாரங்களுடன் அமையவிருக்கும் புதிய மாகாணசபைக் கட்டமைப்பில் முஸ்லிங்கள் பாரிய பாதிப்பை நெடுங்காலத்துக்கு அனுபவிக்கும் ஒரு விடயமாக மாறிவிடும். 

வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையிள் கட்சிகளின் கருத்துக்கள் வேறாக இணைக்கப்பட்டிருந்தன. இதில் சுதந்திக் கட்சி மைத்திரி அணி, மைகிந்த அணி, மக்கள் விடுதலை முன்னனி, ஹெல உறுமய, மக்கள் காங்கிரஸ் என்பன மாகாணங்களின் இணைப்பிற்கு எதிரான தாங்கள் கருத்தை அறிக்கையில் வெளி இணைப்பாக இணைத்துள்ளனர். 

இவ்வாறான பரந்துபட்ட எதிர்ப்பிற்கு மத்தியிலும் வடகிழக்கு இணைப்பிற்கு சாதகமான அறிக்கை வெளியாயிருப்பது நல்லாட்சி அரசு அதற்கு சாதகமான நிலைபாடில் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

எனவே இணைப்பிற்கு ஆதரவானவர்களாக ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இருப்பதை அறிய முடிகிறது.  இதில் பெரும் ஆச்சரியம் என்னவெனில் முஸ்லிம்களின் ஏக அரசியல் பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ளும் முஸ்லிங் காங்கிரஸ் வட கிழக்கு இணைப்புத் தொடர்பான தாங்கள் எதிப்பைத் தெரிவிக்காதது இவர்கள் இணைப்பிற்கு ஆதரவான நிலைபாட்டில் உள்ளவர்கள் எனும், அவர்கள் மீது சுமத்தப்படும் நெடுநாள் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. 

மறுபக்கத்தில் வடகிழக்கு இணைப்பிற்கு பகரமாக முஸ்லிம் தனி அலகு அல்லது தனி மாவட்டம் என்பது எல்லாம் வெறும் பகடையான அல்லது முட்டாள் தனமான விடயங்களாகும். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திற்குள் 282,000 முஸ்லிங்களும், மட்டக்ளப்ப்பு, திருக்கோணமலை மாவட்டங்களில் 286,000 முஸ்லிங்களும் வாழ்கின்றனர். எனவே அம்பாறை மாவட்டத்தை மையபடுத்திய தனி அலகு கிழக்கு முஸ்லிங்களின் பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வாகிவிடாது. எனும் இக்  குறைந்தபட்ச விடயமமேனும் இடைக்கால அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது நாம் நம்பும் முஸ்லிம் கட்சிகள் முஸ்லிங்களுக்கான தீர்வு என்பதில்எவ்வளவு கரிசனையற்று இருகிறாரார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். (இவ்வாறான ஒரு பரிந்துரை முன்னால் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைத்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் அறிக்கையில்  (APRC) இடப்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது)

முடிவுரை 
எனவே நடைபெறுகிற நிகழ்வுகள் வடகிழக்கு இணைப்பு எனும் ஆபத்தை நோக்கி மிக வேகமாக நகர்கின்றன. அவ்வாறு இணைப்பு ஏற்படுத்தப் படுமானால் அது முஸ்லிங்களுக்கு மீளமுடியாத சேதமாக (Irreparable damage) மாறிவிடும். 

நல்லாட்சி அரசு சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைக்கு  கட்டுப்பட்டு உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை மாற்றிய நிகழ்வு, மற்றும் ஆட்சியைத் தக்கவைக்க மாகணசபைச் சட்டத்தை ஜனநாயக விரோதமுறையில் திருத்திய  விதம் என்பன அரசு தாங்கள் நலன் பேண என்ன விலை கொடுக்கவும் தயார் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. 
மேலும் தமிழ் தேசியகூட்மைபின் அறிக்கைகள் அவர்கள் இவ்விடயத்தில் எவ்வளவு உறுதியாக இருக்கிறனர் என்பதையும் அரசுடன் ஏலவே ஒரு உடன்பாட்டிற்கு வந்துவிட்டனர் என்பதையும் முஸ்லிம் காங்கிரஸின் அண்மைக் கால நிலைப்பாடுகள் அதற்கு சாதகமான போக்கில் இருப்பதுவும் புலனாகிறது. 

இந்திய அழுத்தத்தில் முன்னாள் சனாதிபதி ஜெயவர்த்தன கிழக்கு முஸ்லிங்களுக்கு செய்த அதே துரோகத்தை அவருடைய மருமகன் ரணில்விக்கிரமசிங்க சர்வதேச அழுத்ததின் விளைவாக செய்து முடிக்கப்போகிறார் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் தெளிவாகத் தெரிகின்றன. அதுவும் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பூரண அனுசரணையுடன் நடைபெறப் போகிறது. 

முஸ்லிம் சிவில் சமூகமும் பொதுமக்களும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து இவ் ஆபத்தைத் தடுக்க தவறினால் எதிர்கால முஸ்லிம் சந்ததிகள் எம்மைச் சபிப்பதில் இருந்து தப்பித்துக் கொள்வது முடியாத காரியமகிவிடும். 

அஸாம் அமீர் 


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network