Oct 30, 2017

புகைப்படக்கலையும் ஒளியமைப்பும்

எஸ்.ரி.ஸ்ரீபிருந்திரன் MA (India), M.Phil (SJU)
விரிவுரையாளர், இலங்கை ஊடகவியல் கல்லூரி, கொழும்பு.
உலகை பார்ப்பதற்கு ஒளி அவசியமான மூலமாகும். இருளில்இருந்து கண்பார்வைக்கு இயற்கை ஒளியும் செயற்கை ஒளியும் எவ்வளவு அவசியமோ அதேபோல புகைப்படக்கமராக்களின் பார்வைக்கும் ஒளி அவசியமான மூலமாகும். ஒளியை மிகத் திறமையாகப்பயன்படுத்தி, புகைப்படம் எடுப்பவரை புகைப்படப்பிடிப்பாளர் என்கின்றோம். ஒரு புகைப்படப்பிடிப்பாளரின் வெற்றி ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு அல்லது குறிப்பிட்ட  காண்பியத்திற்கு ஒளியை  எவ்விதம் பயன்படுத்துகிறார் என்பதிலேயே அடங்கியுள்ளது. ஒளியைப் பயன்படுத்திச் செய்யப்படும்  காட்சிப்படைப்பே புகைப்படக்கலையின் அடிப்படையாகும். புகைப்படக்கலைஞர்கள் ஒளி ஓவியர் என்றும் தம்மை அழைத்துக்கொள்வார்கள். இதன் மூலம் புகைப்படக்கலைக்கு ஒளியமைப்பின் முக்கியத்துவம் நமக்கு விளங்குகின்றது. ஒளிதரும் சூரியனை மையமாகக்கொண்டுதான்  சமுதாயத்தின் கலை பண்பாட்டுக்கூறுகள் வேரோடியிருப்பதை தொல்லியல்  சான்றாதாரங்கள் மூலம்  அறியமுடியும். கோட்டைகள் கோபுரங்கள். திருக்கோயில்கள், அரசர் வாழும் அரண்மனைகள் எனப்பலவும் ஒளி அல்லது சூரிய வெளிச்சத்தை மையமாகக்கொண்டே கட்டப்பட்டிருப்பதை  கட்டடக்கலை வரலாறுகள் காட்டுகின்றன. தமிழர் கட்டிடக்கலைப்பாணியில் சிற்பங்கள்  கற்சிலைகள் யாவும் ஒளி முதலில் வரும் திசையான கிழக்கு நோக்கியே அமைக்கப்பட்டிருப்பதை நாம்  பல இடங்களில் காண்கிறோம்.  சூரியனின் ஒளியைக்கொண்டே உலகம் இயங்குகின்றது என்பதாலும ;உயிரினச் சுழற்சிக்குச் சூரிய ஒளியே ஆதாரமாக அமைவதாலும் பண்டைத் தமிழர்கள் ஒளிதரும் சூரியனுக்குத்தங்கள் வாழ்வில் மிகுந்த முக்கியத்தும் தந்தனர்.;
ஒளியும் இருளும் சேர்ந்த ஒரு நாள்பொழுதை எம் முன்னோர்கள்  ஆறு பிரிவுகளாகப் பிரித்தனர்;:
1) காலை – 6 மணி முதல் 10 மணி வரை
2) நண்பகல்: – 10 மணி முதல் நண்பகல்  12 மணிவரை
3) ஏற்பாடு : 2 மணி முதல்  06 மணி வரை
4) மாலை  – 6 மணி முதல் 10 மணி வரை
5) யாமம்     – 10 மணி முதல்  2 மணி வரை
6) வைகறை –  2 மணி முதல் 6 மணிவரை
ஒருநாளின் இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்ப மனிதச்செயற்பாடுகள் மாறும் என்பதையும் அந்தச்செயற்பாடுகளின் உளவியல் தன்மைக்கேற்பவே  நிற ஒளியமைப்புக்களையும் வகுத்தளித்துள்ளனர். இதன் மூலம்  வைகறையில் உள்ள ஒளி அல்லது வெளிச்சமும் நண்பகலில் உள்ள வெளிச்சமும் , மாலையில்  உள்ள வெளிச்சமும், மனித இயல்புகளில்  தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் உய்த்துணர வேண்டும். போதுமான ஒளி மகிழ்ச்சியைக் குறிக்கிறது. இதனால ;பாரதி ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா! என்றார்;  குறைந்த ஒளி அல்லது மங்கிய ஒளி சோகத்தையும் குறிக்கும் என்பதால் அதே பாரதி இருள்கொண்ட நெஞ்சினாய் போ! போ! போ! என்றார். மனித வாழ்வியலுக்கு மட்டுமல்லாமல் சமயம் சாரந்த தத்துவ நெறிமுறைகளிலும் ஒளி மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருப்பதை நாம் காண முடியும். உலகமே ஒளிமயமாக இருப்பதாலும் ஒளியை முழுமுதலாகவும் முடிந்தபொருளாகவும கண்டார் அருட்பிரகாச வள்ளலார் அருட்பெருஞ்சோதி The Light of Kindness தனிப்பெரும் கருணை. The Unique Larges of Mercy sepia ஒளியை (light) மையம்கொண்ட வள்ளலாரின் இந்த இறையியல் கோட்பாட்டைப்பற்றி அறிஞர் சு.ப. .அண்ணாமலை எழுதுகிறார். our understanding that God is from the Light (Jyothi) is one state when we know his grace in jeevakarunya service  compassion and meditation, we  will  find him as the Light within the soul.
ஒளியமைப்பு மூலம் புகைப்படத்தொகுப்பில் விந்தைகள் பல புரியப்படுகின்றது. இன்றைய டிஜிட்டல் போட்டோகிராபியிலும் ஒளியைமைப்பு மிகவும் அத்தியாவசியமானதாக அமைகின்றது.  ஒருநபரை இருக்கையில் அமரவைத்து அவரது முகத்தில் எந்த இயல்பையும் உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் இருக்கச்சொல்லுங்கள். அறையில் வேறு எவ்வெளிச்சமும் இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் கையில் சிறிய ரோச்லைட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.   பலவண்ணக் காகிதங்கள்  உங்கள் பக்கத்திலேயே இருக்கட்டும். உட்கார்ந்திருக்கும் நபரின் தலைக்கு மேலாக  டோச்சின் முகப்பில் வண்ணக்கடதாசியை ஒவ்வொன்றாகச்சுற்றி ஒளியைப்பாய்ச்சுங்கள். முறையே சிவப்பு , மஞ்சள், பச்சை, நீலம், வெள்ளை நிறக்கடதாசியூடாக தனித்தனியாக ஒளியைப்பாய்ச்சினால் அந்த நபரின் சாதாரண முகம் ஒவ்வொரு நிற ஒளிக்கும் ஒவ்வோர் அர்த்தத்;தை அளிக்கிறது. அந்த நபருக்கு நேரே டோர்ச்சைக்கொண்டு வெண்மை ஒளி , சிவப்பொளி,  இப்படி மாறி மாறி ஒளிபாய்ச்சும்போது அதே முகம் அதே வண்ண ஒளிகளில் வேறு வேறு உணர்ச்சி வெளிப்பாட்டைத் தருகிறது. பக்கவாட்டில் டோர்ச்சைப்பிடித்தால் வேறுவிதமாகவும், வேறு உணர்வுகளுடனும் அதே முகம் தெரியும். அதேபோல  உட்கார்ந்திருப்பவரின்  முகத்திற்கு அடியிலிருந்து ஒளியைப்பாய்ச்சுங்கள். ஒவ்வொரு வண்ணமாக மேற்கண்டவாறு மூன்று நிலைகளிலும் கண்டதைவிட குறிப்பிட்ட நபரின் இயல்பான முகம் இப்போது உங்கள் இதயத்துடிப்பை அதிகமாக்கும்.

அதிலும் குறிப்பாக அடி விளக்கொளியாக (Foot Light) சிவப்பைப் பயன்படுத்தும் போது பார்ப்பவர்கள் அலறிஅடித்துக்கொண்டு அறையைவிட்டே ஓடிவிடும் பயங்கரத்தை தோற்றுவிக்கும். இவைதான் ஒளியும் அதன் பல்வேறு வண்ணங்களும் அதன் பல்வேறு வெளிப்பாடுகளாய் அமைகின்றது. டிஜிட்டல்  புகைப்படவியலில் உயர் ஒளி உணர்வு வீச்சைக் காட்டக்கூடியதாகையால் குறைந்த ஒளியுள்ளபோதும் புகைப்படம் எடுக்கக்கூடியதாக அமையும்.  புகைப்படம் எடுக்கும்போது நான்கு அங்கங்கள் அதனுடன் தொடர்புறுகின்றன. குறிப்பாக  புகைப்படக்கலைஞன் இரண்டாவதாக கமரா, மூன்றாவது ஒளியமைப்பு, புகைப்படக்கலைஞனின் பார்வை என்பன முக்கியம் பெறுகின்றன. புகைப்படக்கலைஞனின் கண்கள் முக்கியமான காட்சியினை சிறந்தமுறையில் உள்வாங்கிக்கொள்வது அவரது கண்களே. அதைப்பதிவு செய்துகொள்ளும் செயலை கமரா செய்கின்றது. ஒளியினை அடிப்படையாகக் கொண்டே ஒரு படப்பிடிப்பு இடம்பெறுகின்றது. புகைப்படப் பிடிப்புக்கு பயன்படும் ஒளியின் இயல்புகளை இரண்டு வகைப்படுத்தலாம்.
1) இயற்கை ஒளி  Natural Light
2) செயற்கை  ஒளி  Artificial Light

இயற்கை ஒளி என்பது சூரியனிடமிருந்து பெறும் ஒளியைக்குறிக்கிறது. பேரொளியான இவ்வொளி எங்கும் பரவி நிற்கக்கூடியது. நீண்ட அல்லது உயர்ந்த கோபுரத்தின் நிழலில்கூட வெளிச்சம்பரவிநிற்கும். ஆனால்  செயற்கை ஒளியிலோ அல்லது சந்திரன் ஒளியிலோ இது சாத்தியமில்லை. ஆயினும்  சூரியஒளி என்பது  நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடும் தன்மை உடையது என்பதால் புகைப்படப்பிடிப்பாளர்கள் இடர்பட நேரிடுகிறது.  மேலும் தாம் விரும்பும்  திசையில்  சூரிய ஒளியைத் திருப்பி வைத்துக்கொள்ள முடியாது என்பதாலும் பல புகைப்படப்பிடிப்பாளர்கள் செயற்கைஒளி உள்ள உள்ளகப் படப்பிடிப்புக்களையே (Indoor) அதிகம் விரும்புகின்றனர். அதிகாலை அல்லது மாலை வேளைச் சூரிய  ஒளிதான் புகைப்;படப்பிடிப்புக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. காiலையில் நிலவும் இதமான வெளிச்சமும் மாலையில்  சூரியன் மறையும் நேரத்தில்  வானத்தில் இயற்கை வரையும் வண்ணக்கோலங்களும் அதன் மஞ்சள்ஒளியும் புகைப்படங்களுக்கு இயற்கையான அழகை அள்ளித்தருகின்றன. அதிக வெளிச்சம் தரும் நண்பகல் போன்ற நேரங்களில் இயற்கை ஒளியில் புகைப்படம் பிடிக்கும்போது பல இடர்பாடுகள் தோன்றும். அது மிக அதிகமான வெளிச்சம் தரும் நேரங்களில்  புகைப்படங்களை எடுக்கும்போது காட்சிகளில் குறிப்பிட்ட பொருள் (Subject) சுற்றுப்புறங்களும் எரிவதுபோன்று கலங்கலாக தோற்றம்தரும். அதனால் புகைப்படப்பிடிப்பாளர்கள் மதிய வேளைகளில் ஒளி குறைவாக விழும்  பகுதியைத் தேர்ந்தெடுத்து புகைப்படடிப்பிடிப்பில் ஈடுபடுவார்கள் அல்லது நீ;ண்ட சதுர பலகைகளில் அலுமினியத்தகடு ஒட்டப்பட்டு  (Aluminum fool) அவற்றின் மூலம் சூரிய ஒளியைத் தேவையான இடத்துக்குப்பாச்சும் எளிய கருவியான பிரதிபலிப்பான்கள் (Reflector) பயன்படுத்துவார்கள். இவற்றின்மூலம் ஒளியைத் தெறிக்க வைத்து அளவான ஒளியமைப்பை புகைப்படப்பிடிப்பாளர்கள்  பெற்றுக்கொள்ள முடியும். தற்போது நீண்ட சதுரவடிவிலோ அல்லது நீள்வட்ட வடிவிலோ அமைக்கப்பட்ட தெர்மோ கோல்கள் புகைப்படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இயற்கை ஒளியினை புகைப்படப்பிடிப்புக்காக தேவைகளுக்கேற்ப பல வகைமைப்பாட்டில்  பயன்படுத்தலாம். அவற்றில் நேர் ஒளி (Direct Light ) பக்க ஒளி (Side Light) பின்னொளி (Back Light) மேல் பின்னொளி (Top Back Light) நிழல் ஒளி (மங்கிய ஒளி- diffusing Light என வகைப்படுத்தப்படுகின்றன. நிழல் ஏற்படும். அவ்வகையான மேல் பின்னொளிகளால் ஏற்படும் நிழல் பகுதியை வெளிச்சமிட பிரதிபலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். பகலில் சூரிய வெளிச்சத்தில் மரநிழலில், அல்லதுபெரிய கட்டடத்தின் நிழலில் இருப்பவரை புகைப்படம் பிடித்தலையே மங்கொளி (diffusing Light) அல்லது நிழல் ஒளியில்  புகைப்படம் பிடித்தல் என்கின்றோம். இந்த நிழல் ஒளியும் புகைப்படம் பிடித்தலுக்கு போதுமானதாக அமையாது. அவ்வேளையில் பிரதிபலிப்பான்களைப் பயன்படுத்துகின்றோம். புகைப்படக்கலையின் அடிப்படை ஒளி  என்பதைக் கண்டுகொண்டோம். இவ்வொளியை புகைப்படப்பிடிப்புக்கு ஏற்ற வகையில்  கையாளுவது மிகவும் எளிமையாகும். அதனையே ஒளியமைப்பு என்கிற்றோம். ஒளி மிகச்சிறிய துகள்களால் ஆனது. அதை ‘போட்டான்கள்’ என்று அழைப்பர். இவை துகள்களாகவும அலைகளாகவும்  செற்படக்கூடியவை. அகச்சிவப்பு கதிர்களையும் புறஊதாக்கதிர்களையும் நமது  கண்களால் காணமுடியாது. வெற்றிடத்தில்
ஒளிபரவும் வேகம் வினாடிக்கு சுமார் மூன்று இலட்சம் கிலோமீற்றர். இவ்வெளியில் இயற்கை ஒளிப்பயன்பாடுகள் பற்றிப்பார்த்தோம். இதிலே செயற்கையான  மின்விளக்குகள் மூலமாக ஏற்படுத்தப்படும் ஒளியமைப்பை செயற்கை ஒளி என்கிறோம். அதேபோல் பகைப்படப்பிடிப்பில் ஒளியின் தன்மையைக் கொண்டு ஸ்ரோங்க லைட் மற்றும் சொஃப்ட் லைட் (Soft Light) என வன் ஒளி மென்னொளி  எனவும் வகைப்படுத்தலாம். குவியப்படுத்தப்படும் ஒளி மிகவும் வன்மையாகவும் ஒளிநிழல்களை வன்மையாகவும்  ;கொண்டிருந்தால் அது ஸ்ரோங் லைட் எனப்படுகின்றது. ஆனால் சொப்ட் லைட் என்பது ஒரு ஊடகத்தின வழியாக  அல்லது சமதளமற்ற  பரப்பில் எதிரொளிப்பதாலும் கிடைக்கிறது. இதன் நிழல் வெளித்தெரியாது. அவ்வாறு நிழல் தெரிந்தாலும் மென்மையாகவே தெரியும். அவ்வாறான ஒளியின் தன்மையை புகைப்படப்பிடிப்பாளர்கள் வகுப்பார்கள்.

(ஒளியமைப்பு நிலைகள்)
புகைப்படம் எடுக்கப்படும் சுற்றுப்புறச்சூழல் ஒளியை சூழல்லொளி (ambient Light) என்பார்கள். இது ஒருவித ஒளிக்கலவையான அமைப்பை ஏற்படுத்தும். பொதுவாக நாம் பார்க்கின்ற  எல்லாமே சுற்றுப்புறச்சூழல் ஒளியால் சூழப்பட்டதுதான். அதனால்தான் புகைப்படம்பிடிக்க முன்னால் சுற்றுப்புறச்சூழல் ஒளியைக்கணக்கிடுவது அவசியமாகும். புகைப்படம் எடுக்கும் காட்சிமீது அல்லது பொருள்மீது நேரடியாக படும் ஒளியை இன்ஸிடென் லைட் (Incident Light) என்பார்கள். இதனை அளவிடவும் முடியும். ஒரு பொருளின் அல்லது காட்சியின்மீது விழும ஒளியின் பிரதிபலிப்பை  ரிப்லெக்ட் லைற் (Reflected  Light) என்பார்கள். அதனை புகைப்படக்கமராவின்  எக்ஸ்போசர் மீட்டர் அளவிடும். மெட்ரிக்ஸ் சென்டர், வெயிட்டெட் பாக்ஷpயல் மற்றும் ஸ்பாட்மீட்டர்கள் மூலமாக புகைப்படக்கமராவின் ரிப்லக்ட்டை அளவிடமுடிகின்றது. சிறந்த எண்ணப்புகைப்படங்களை எடுப்பதற்குப் பயன்படும் அடிப்படை ஒளியமைப்புக்களை பின்வருமாறு வகைப்படுத்துவர். மைய ஒளி-கீ லைட் (Key light) நிரப்பு ஒளி (பில் லைட் (fill Light)  பின்னொளி- பக்லைட் (Back Light)> பின்னணிக்கான ஒளி (Background Light)> என்பன மிக முக்கியமாக அமைகின்றன. இவை இயற்கை ஒளிகளால் இயல்பாக அமையும். இல்லாவிட்டால் புகைப்;படப்பிடிப்புத் தேவைக்கேற்ப புகைப்படப் பிடிப்பாளர் செயற்கையாக மேற்கொண்ட ஒளியமைப்பை உருவாக்கிக்கொள்வர்.
மைய ஒளி ((Key Light)
மைய ஒளி என்பது புகைப்படக் கலையின் பிரதான ஒளியாகும். அதனை மெயின் லைட் (Main Light) என்றும் அழைப்பர்.  குறிப்பாக இயற்கைச் சூழலில்  சூரிய ஒளியே பிரதான ஒளிமூலமாகும். சூரிய  ஒளியும் மனிதர் தலைக்கு மேலாகத்தான் இருக்கின்றது. அதுபோல செயற்கை ஒளியமைப்பிலும் மைய ஒளி தலைக்கு மேலேயே அமைத்தல் வேண்டும். .
சூரிய ஒளி எப்போதும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி  செல்லும். காலையில் நீளமாக நிழலைக்கொடுக்கும். உச்சி வெயிலில் காலுக்கு கீழேதான் நிழல் இருக்கும். அதன் பின்னர்  காலஞ்செல்லச்செல்ல நிழலின் நீளம் அதிகரிக்கும் அதுவே இயற்கை ஒளியமைப்பாகும். ஒருவர் கிழக்குத் திசை நோக்கி நின்றால் அவருக்கு காலையில் முகத்துக்க நேராக அடிக்கும் ஒளியை ஃப்ரண்டல் லைட் (Frontal Light) என்பார்கள். இச்சூரிய ஒளியானது மதியம் 12 மணிக்கு சூரியன் உச்சியில் சென்று குறிப்பிட்ட நபரின் மூக்கின் கீழ் நிழலைக் கொடுக்கும். அதுதான் (Top Light) ரெப் லைட் அதேசூரிய ஒளியானது மதியம் 2 மணிக்குப்பின் குறிப்பிட்ட நபரின் பின்னால் சென்று அது பக்கவாட்டு ஒளியாக (Back Light) மாறிவிடும். அதைத்தான் நாம் கண்களால் பார்;த்துப்பழகி கிரகிக்கின்றோம். நிழலை வைத்தே நேரம் என்னவாக இருக்கும் என மனித மூளை கணக்கிட்டுவிடும்.
குறிப்பிட்ட நபர் வடக்கு அல்லது தெற்கு நோக்கி நிற்பார் என்றால் காலையிலும் மாலையிலும் சூரிய ஒளி பக்கவாட்டு ஒளியாக அதாவது சைட் லைட்டாக (Side Light) ஆக மாறிவிடுகின்றது. இதனால்தான் மதியம் 12 மணிளயவில ;வெளிப்புறங்களில் புகைப்பிடிப்பில் ஈடுபடுவதில்லை. காரணம் எடுக்கும் புகைப்படத்தில் நிழல்கள் வேறுவகையான தோற்றப்பாட்டை உருவாக்கும். சிலவேளைகளில் சூரியனின் ஒளி மேகமூட்டங்களுக்குள்ளாக இருந்தால்  சூரியக்கதிர்கள் நேரடியாக வராமல் மேகத்தினுள் புகுந்து வருவதால் ஒளி சிதறிக்கப்பட்ட மென் ஒளியாக அமையும். அதுவே நேரடியாகப்பட்டால் வன் ஒளியாக  தென்படும்.  சப்ட்iலைட் பலசந்தர்ப்பங்களில் அழகியல் உணர்வுடன் கூடிய புகைப்படப்பிடிப்புக்கு உகந்ததாகஅமையும். மைய ஒளிகள் படம் எடுக்கப்படும் பொருளுடைய பரிமாணத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்துகின்றது. அதாவது என்ன பொருள் என்பதை மனிதர்களுக்கு உணர்த்துவது மைய ஒளி. குறிப்பாக உள்ளகப்படப்பிடிப்பில் மைய ஒளி செயற்கையாக ஒளியாகப் பாய்ச்சப்படுகின்றது. உதாரணமாக ஒரு வீட்டின் வரவேற்பறையைப்போன்று  அரங்கம் ஒன்று அமைக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம்.  ஜன்னலையொட்டியோ  அல்லது வாயிலை நோக்கியோ ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிரே புகைப்படக்கமரா உள்ளது. புகைப்படம் எடுக்கும்போது அந்த குறிப்பிட்ட நபருக்கு எதிராக அவரது தலைக்கு மேலே  அவரை மையமாக வைத்து வெளிச்சமிடும்படியாக  ஒளியமைத்தால் அதுவே மைய ஒளி (Key Light) எனப்படுகின்றது மைய ஒளியை படம் எடுக்கப்படும் பொருளின் உயரத்தில் இருந்து அதாவது கண்பார்வை உயரத்தில் இருந்து  30 டிகிரிமுதல் 45 டிகிரி உயரம் வரை வைக்கலாம். மைய ஒளியமைப்பை மிகவும் தாழ்வாக வைத்தால் படம் எடுக்கப்படும் பொருளின்மீது படும்  இயற்கைக்கு முரணாகத் தெரியும். காரணம் சூரியன் எப்போதும் கீழே இருந்ததில்லை. அதேபோல் முகத்துக்குக்கீழ் மெழுகுதிரி ஒளியை வைத்து படம் எடுத்தால் முகம் பயமுறுத்துவதாக விகாரித்துத் தெரியும்.
ஒரு சில வேளைகளில் திகில் காட்சிகளை அல்லது நகைச்சுவை காட்சிகளை படம் எடுக்கும்போது மைய ஒளியை தாழ்வாக வைத்துப்படம் பிடிக்கலாம்.  அதே வேளையில் மைய ஒளியை  அதிக உயரத்தில் வைத்தால் ஒருவரின் மூக்க நிழல் நீளமாக இருக்கும். மேலும் கன்னத்தின் எலும்புகள் புடைப்பாகத் தெரியும். அதனால்தான் 30 முதல் 45 டிகிரிக்குள் மேல்மைய ஒளியை  மாற்றியமைக்கக்கூடாது. மைய ஒளியை மட்டும் பயன்படுத்தி எடுக்கப்படும் படம் மிகவும் காண்ட்ராஸ்டாக (contrast) ஆக இருக்கும். மைய ஒளி பொருளின்மீது நேரடியாகப்பட வேண்டும் என்னும் அவசியம் இல்லை. ஏதாவது  திரைச்சீலை வழியாக வரலாம் அல்லது ஒரு ஃபில்டர் வழியாகக்கூட வரலாம். மைய ஒளியை ஒரு  வெண்பரப்பின்மீது பவுண்ஸ் -தெறிப்படைய வைக்கலாம். இதன்மூலம் பரவலான ஒளிக்கிடைக்கும். இலைகள் மற்றும் மரங்களுக்கிடையில் வரும் ஒளியைக்கூட மைய ஒளியாகப் பயன்படுத்தலாம்.  ஜன்னல் வழியாக வரும் ஒளியைக்கூட  மைய ஒளியாகப்பயன்படுத்தலாம்.
9ec83cb00fcdfba0be7f81d17b2bb9eb--lighting-setups-studio-lighting
பல்வேறு தடைகளின் வழியாக வரும் மைய ஒளி புகைப்படத்தைப்பார்ப்பவரின் ஆர்வத்தைத் தூண்டும்  மைய ஒளி வெள்ளை நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. படம் எடுக்கப்படும் நபரின் முகத்தில்  இருந்து மைய ஒளியின் தூரம் 24  (இன்ச்)  அங்குலம் முதல்  36 அங்குலம் வரை இருக்க வேண்டும்.  புகைப்படம் எடுக்கும் பொருளுக்கும் மைய ஒளிக்கும் உள்ள தூரம் மைய ஒளியின் அளவை விட பரப்பளவு நீளத்தைவிட குறைவாக இருக்க  வேண்டும். மைய ஒளியின் தேவைப்பாட்டைப் பொறுத்து தூரத்தை மாற்றிக்கொள்ளலாம். புகைப்படக் கமராவுக்கும் பொருளுக்கும் இடையே குறைந்தது 06 அடி முதல் 8 அடிவரை இடைவெளி வேண்டும். அப்பொழுதுதான்  அழகிய புகைப்படத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். புகைப்படம் எடுக்கும் பொருளுக்கும் பின்னணிகளுக்கும் இடையில் நாலு அடி முதல்  ஐந்து அடி வரை இடைவெளி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தேவையற்ற நிழல்களைத் தடுத்து உரிய அழகிய புகைப்படத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நிரப்பு ஒளி –  ஃ பில் லைட் (Fill Light)
மைய ஒளியில் அமர்ந்திருக்கும் நபரின்  ஒரு பக்கத்தை மட்டும் காட்டினால் அவரின் மறுபக்கம் கருமையாக இருக்கும். அந்த நிழலை இல்லாது ஒழிப்பதற்காக  அந்த அறையில் சுற்றிலும் உள்ள இருளை ஓரளவு போக்கவும் மைய ஒளிக்கு எதிர்ப்புறத்தில் தலைக்கு மேலாக இருந்து மைய ஒளியை விடக் குறைந்த சக்தி கொண்ட ஒளி தரப்படும் . இவ்வாறு ஒளிகுறைந்த நிழல் படிந்த இடங்கைள ஒளியால் நிரப்புவது.  இதற்குப்பெயர்தான் நிரப்பு ஒளியாகும். இதை நாம் இயற்கை ஒளி அமைப்பிலும் கண்டுகொள்ளலாம். அதாவது மேகங்கள் சுவர்,  கண்ணாடி , மணற்பகுதி, நீர்நிலைகள் அலைகள் இப்படி பல்வேறுவிதமான எதிரொளிப்புகள் மனிதன் மேலே படுகின்றது. சூரிய ஒளியும் பல்வெறு எதிரொளிப்புகளையும் நாம் தினமும் பாரக்கிறோம். அந்தப் பல்வெறு எதிரொலிப்புகள் நிரப்பு ஒளி ஆகச் செயற்படுகின்றன. இவைதான் சூரியஒளி ஏற்படுத்தும் வன்மையான அல்லது மென்மையான நிழலை சமநிலைப்படுத்தி மனிதக்கண்களுக்கு இதமான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.  நிழல்கள் இல்லாத அழகிய புகைப்படப்பிடிப்புக்கு நிரப்பு ஒளி அவசியமாகும்.

நிரப்பு ஒளி, மைய ஒளிக்கு நேர் செங்குத்துக்கோட்டில் புகைப்படக்கமராவின் வில்லையின் சுழற்சி மையக்கோட்டிற்கு இணையாக வைப்பது வழக்கம். மைய ஒளியின் அளவைவிட நிரப்பு ஒளி அளவு குறைவாக இருக்க வேண்டும். ஒளிக்கும் நிழலுக்கும்  உள்ள விகித அளவை மாற்றுவதன்மூலம் நாம் விரும்பிய ஒளி அமைப்பை பெறலாம்.  புகைப்படக்கமராவுக்குப் பின்னால் அல்லது அதற்கு சற்று முன்னால் வில்லைகளின் அச்சிற்கு இணையாக நிரப்பு ஒளி இருக்கலாம். மைய ஒளியைவிட மிகவும் குறைந்த நிரப்பு ஒளியானது அதிகளவு கன்ராஸ்ட் ஐ ஏற்படுத்தும். இதுவே  லோ கீலைட் (Low Key Lighting) குறைந்த மைய ஒளி அளவில் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவுடைய நிரப்பு ஒளிபிடித்தபின் கன்ராஸ்ட் ஐ குறைக்கும். இது ஹை கீலைட்டிங் (High Key Lighting) அதிகரித்த மைய ஒளி விளைவை ஏற்படுத்தும்.  புகைப்படத்தின் அழகியல் உயிர் ஓட்டத்துக்கு நிரப்பு ஒளி அத்தியாவசியமாக அமைகின்றது.

பின்னொளி (backlight)
அமர்ந்திருப்பவர்களுக்கு  பின்னால் உள்ள யாவும் இருளடைந்து இருக்கிறது. பின்னணியில் உள்ளதைக்காணவும் அதேசமயம், பின்னணியிலிருந்து அமர்ந்திருப்பவற்றைத் தனித்துக் காட்டவும் அவரது தலைக்குப் பின்னால் மைய ஒளிக்கு எதிர்த்திசையில் நிரப்பு ஒளியைப் போலவும்அல்லது அதைவிடக் குறைந்த அளவு சக்தி கொண்ட விளக்குகள் அமைக்கப்படும். இதையே பின்னொளி என்கிறோம். படம் எடுக்கப்படும் நபருக்கு நேர்பின்னால் அமைக்கப்படுவதே பின்னொளி யாகும்.  இருண்ட பின்னணியில் படம் எடுபடும்பொழுது  படம் எடுக்கும் பொருளின்  விளிம்புகளை ஒளிரச்செய்யும் சக்தி இந்த பின்னொளிக்கு காணப்படுகின்றது. பின்னொளியிலிருந்து பின்னணிக்காட்சியும் ஒளிரச்செய்யும். இதற்கு ஹேர்லைட் (Hair Light)  ஷேhல்டர் லைற் (shoulder Light)> கிக்கர் லைட் (kicker Light)  ரிம்லைற் (Rim Light) என்ற பெயர்களும் உண்டு. மனித முடியின் நிறம் கறுப்பாக இருப்பின் மைய ஒளியைவிட அதிகமாக இருக்க வேண்டும். தலைமுடி கறுப்பாக இருந்தால் பின்னொளியை குறைக்க வேண்டும்.  இதற்கு புகைப்படகலைஞர்களுக்கு பயிற்சியும் முயற்சியம் அவசியம். ஒளியமைப்பு பற்றி உணர்ந்து செயற்பட வேண்டும்.

பக்ரவுண்ட லைட் (Background Light)
படம் எடுக்கப்படும் பொருளை அடையாளப்படுத்த பக்ரவுண்ட்  லைட் பயன்படும். குறிப்பாக மைய ஒளிக்கு குறைவாக நிரப்பு ஒளியைப்பயன்படுத்தலாம். நிரப்பு ஒளிக்கு குறைவான பின்னொளிiயைப்பயன்படுத்தியும் அழகிய புகைப்படத்தினை எடுக்கலாம். அதேவேளை மைய ஒளிக்கு சமனான அளவு பக்கிரவுண்ட் லைட் பயன்படு;த்துவதன்மூலமும் நல்ல உயிர்ப்புள்ள புகைப்படங்களை உருவாக்க முடியும்.
சிறந்த புகைப்படப்பிடிப்பு என்பது எந்தக்காட்சிக்கு எந்தளவு ஒளி தேவைப்படும் என்பதை அறிந்து அளவிட்டுப் பயன்படுத்துவதேயாகும். இதைச்சிறப்பான  வகையில் கையாளக்கூடியவராக புகைப்படப்பிடிப்பாளர்கள் செயற்பட வேண்டும்.
மேலே சொன்ன விடயங்களைக்கொண்டு மிக அருமையான ஒளியமைப்புச்செய்ய முடியும். எதிர்காலத்தில் அழகிய புகைப்படத்தினை பார்க்கும்போது உங்களை அறியாதே ஒளி அமைப்பை உணர்ந்துகொள்ள முடியும். ஒளியமைப்புக்கு என்று பொதுவான விதிகள் எதுவும் இல்லை. மேற்கூறப்பட்ட அனுபவ விதிகளை புரிதலுடன் பயன்படுத்துவதன்மூலம் அழகிய புகைப்படங்களை பெறமுடியும். இயற்கை அன்னையைக்காட்டிலும் மனிதனுக்கு ஒளியமைப்பை கற்பிப்பதற்கு யாருமில்லை என்றே கூறவேண்டும்.  சூரியனே ஒளியமைப்பின் முதல் குருவாவான்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network