1915 முதல் 2017 வரை இனவாதத்தின் இலக்கு!


ஒரு இனம் மற்றைய இனத்தை விட மேலானது என்ற உள்ளார்ந்த நம்பிக்கையே இனவாதம் எனக் கருதப்படுகிறது. இனவாதமானது ஓர் இனம் தொடர்பான தப்பவிப்பிராயம், ஓரினத்திற்கெதிரான வன்முறை, அடக்குமுறை, ஒடுக்குமுறை போன்றவற்றகைக்; கொண்டது. 

இனமேலாண்மை நம்பிக்கையின் அடிப்படையில் எதிர்மறை மனப்பாங்குகளோடு ஏனைய இனங்களை வெறுத்து, வெறுப்படையச் செய்து செயற்படுகின்றவர்கள் இனவாதிகளாகக் கருதப்படுகின்றார்கள்.
பல்லின சமூகங்களைக் கொண்ட இந்நாடு சுதந்திரத்திற்கு முன்னரும் சுதந்திரத்தின் பின்னரும் எதிர்கொண்ட அழிவுகளுக்கு இனவாதமும், பிரதேசவாதமும் முக்கிய காரணிகளாகும். இனவாதத்தையும், பிரதேசவாத்தையும் இயக்கும் பெரும் சக்தியே அரசியலாகும். சுய இலாபங்களை அடைந்துகொள்வதற்காக அரசியலால் தூண்டப்படுகின்ற இனவாதமும், பிரதேசவாமும் இந்நாட்டை அபிவிருத்தியடைவதிலிருந்தும் சர்வதேசத்தில் நன்மதிப்பைப் பெறுவதிலிருந்தும், நலலிணணக்க சகவாழ்விலிருந்தும் வரலாற்று நெடுங்கிலும் தடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

காலத்திற்குக் காலம் இந்நாடு எதிர்கொண்ட இனக்கலவரங்களுக்கும் முப்பது வருட காலம் தொடராக இடம்பெற்ற கோர யுத்தத்திற்கும் அதன் அழிவுகளுக்கும் அரசியலின் பின்புலத்தில் இயங்கிய இனவாதமும், பிரதேச வாதமும் பெரும் பங்காற்றியிருக்கிறது என்பது வரலாறு கண்ட உண்மையாகும்.


சுதந்திரத்திற்கு முன்னர் முஸ்லிம்களை நோக்கிப் பாய்ந்த பௌத்த சிங்கள பேரினவாதம் சுதந்திரத்தின் பின்னர் தமிழர்களையும் பதம்பார்த்தது. தமிழ் மக்கள் மீது பாய்ந்த இனவாதம் கொண்டிருந்த இலக்கிற்கும் முஸ்லிம்கள் மீது கலவரங்களைத் தொடுத்து அதன் மூலம் இனவாதம் அடைந்து கொண்ட இலக்கிற்குமிடையே வேறுபாடு காணப்படுகிறது. அவ்வேறுபாட்டை 1915 மே 29 கம்பளைக்; கலவரம் முதல் 2017 நவம்பர் 18 கிந்தோட்டைக் கலவரம் வரை முஸ்லிம்கள் மீது பேரினவாதம் புரிந்த அழிவுகளின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.


1915 முதல் 2017 வரை.


இலங்கையில் ஐரோப்பியர்கள் காலூண்டும் காலத்தில் முஸ்லிம்களும் சுதேசியக் குடிகளாக இத்தேசத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என வரலாறு கூறுகிறது. இவ்வாறு வாழ்ந்த முஸ்லிம்கள் வர்த்தக நடவடிக்கைகளிலும் கனிசமான செல்வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். 16ஆம் நூற்றாண்டிலேயே இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆங்கிலயரின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுதேசிகளில் கணிசமானவர்கள் முஸ்லிம்களாவர்;. பல்வேறு தரப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட முஸ்லிம்கள் ஆட்சியாளர்களினால் விற்கப்பட்ட பெருந்தோட்டங்களைக் கூட கொள்வனவு செய்து அவற்றில் ஏற்றுமதிப் பயிர்களான கோப்பி, கறுவா என்பவற்றை பயிரிட்டிருக்கிறார்கள். அத்தோடு பாக்;கு, மாணிக்கம், முத்து போன்ற வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அவ்வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையின் பல பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தினர்.


இவ்வாறு வர்த்தக ரீதியான முஸ்லிம்களின் வளர்ச்சியானது பேரினவாதிகளிடையே முஸ்லிம்கள் குறித்த கசப்பான எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் முன்னேற்றம் தொடர்பில் பல்வேறு தடைகளை ஏற்படுத்துவதற்காக அக்கால ஆட்சியாளர்களிடையே முறைப்பாடுகளும் இனவாதிகளினால் முன்வைக்கப்பட்டன.

பொருளாதார ரீதியான முஸ்லிம்களின் வளர்ச்சியானது ஆங்கில ஆட்சியாளர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் அரசியல் ரீதியானதொரு உறவையும் வளர்த்தது. பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டும்; அரசியல் ரீதியான செல்வாக்குடனும் விளங்கிய முஸ்லிம்கள் மீது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பாத்திருந்தது அவ்வாறானதொரு சந்தர்ப்பமே 1915ல் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் ;கலவரமாகும்.

இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவராமாக 1915ல் இடம்பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரம் கருதப்படுகிறது. ஓர் இனத்தின் மத கலாசார நிகழ்வுகள் மற்றுமொரு மத வழிபாட்டுத்தளத்தையோ கலாசாரத்தையோ பாதிக்கக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்ட முற்பட்ட வேளையில்தான் இக்கலவரம் மூண்டதாக வரலாறு சொல்கிறது.

‘பெரகரா’ ஊர்வலம் கம்பளை பள்ளிவாசலுக்கு முன் வீதியால் சென்றவேளை மௌனமாகச் செல்லுங்கள் என ஒரு சில முஸ்லிம்கள் கூறியதற்காக இன மேலாதிக்க அடிப்படை எண்ணம் கொண்ட சில இனவாதிகளினாலேயே இக்கலவரம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இக்கலவரம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கலவரமென சுட்டிக்காட்டப்பட்டாலும் இக்கலவரத்துக்கு முஸ்லிம்கள் மத்தியிலிருந்து ஏற்படுத்தப்பட்ட தவறுகளும் வகிபாகம் செலுத்தியிருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்;கள்
1915ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி கம்பளையில் ஆரம்பிக்கப்பட்ட இக்கலவரம் இலங்கையின் பல பிரதேசங்களுக்கும் பரவியது. 

ஏறக்குறைய ஒரு வார காலம் இடம்பெற்ற இக்கலவரத்தினால் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பான வர்த்தக நிலையங்கள் அழித்தொழிக்கப்பட்டு சொத்தழிவுகள் ஏற்படுத்தப்பட்டதோடு பள்ளிவாசல்களும், வீடுகளும் அழிக்கப்பட்டன. பலரது உயிர்களும் காவுகொள்ளப்பட்டன.

இவ்வழிப்பு நடவடிக்கைகளில் இனவாதத்தின் முக்கிய இலக்காக இருந்தது வர்த்தக நிலையங்களாகும். வர்த்தக நிலையங்கள் அழிக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டது. இக்கலவரத்தின் போது இனவாதிகளின் இலக்கு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதாகவே இருந்து என்பது வரலாற்று உண்மையாகும்.

ஏறக்குறைய பத்து தசாப்தங்கள் கடந்தும் முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சி மீதான காழ்ப்புணர்ச்சி பேரினவாதிகளின் பரம்பரையலகுகளினூடாகக் கடத்தப்பட்டு வருவதன் எதிரொலியாகவே 2001ல் மாவனல்லையில் மேற்கொண்ட அழிவுகளையும,; 2014ல் அளுத்தமையில் புரிந்த கோர வன்முறையும், 2017 நவம்பர் 18ல் கிந்தோட்டையில் ஆடிய இனவெறியாட்டத்தையும் நோக்க வேண்டியுள்ளது. 

அத்தோடு ஒவ்வொரு ஆண்டிலும்; தனிநபர் மற்றும் குழுக்களுக்கிடையே ஏற்படுகின்ற கைலப்பின் போதும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும் வீடுகளும் எரியூட்டப்பட்டிருக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளும் முஸ்லிம்களை பொருளாதர ரீதியில் பலவீனப்படுத்துவது என்பது தெளிவான நிதர்சனமாகும்.

1915ஆம் ஆண்டின் பின்னர் அவ்வப்போது இடம்பெற்ற கலவரங்கள் பல அழிவுகளையும் இழப்புக்களையும் கொடுத்திருந்தாலும். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற மாவனல்லைக் கலவரம், 2014ல் அளுத்தம எரிப்பு நடவடிக்கைகள் மற்றும்; கடந்த வெள்ளிக்கிழமை கிந்தோட்டையில் புரியப்பட்ட இனவாத வெறியாட்டம் எல்லாவற்றினதும் இலக்கின் வடிவம் ஒன்றுதான். அதாவது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதே அவ்விலக்காகும்.

நடந்து முடிந்த ஒவ்வொரு கலவரத்தினாலும் அவ்வப் பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் கோடிக்கணக்கான சொத்து உடமைகளை இழந்து வாழ்வதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது ஏழைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்களினூடாக பேரினவாதிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற கலவரங்கள் விலைமதிக்க முடியாத இழப்புக்களை மாத்திரமின்றி எதிர்கால சந்ததியினரின் இருப்பையும், உரிமைகளையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது.

சட்ட ஆட்சி இடம் பெறும் இத்தேசத்தில் சட்டத்தை கேள்விக்குறியாக்கி சட்டத்தை அமுல்படுத்துகி;ன்றவர்களையே சட்ட விரோத செயல்களுக்கு ஒத்தாசை வழங்கச் செய்திருக்கிறது. இனவாதத் தீயின் கோலோச்சம் சட்டத்தின் கரங்களை கட்டவைத்தது மாத்திரமின்றி தட்டிக் கொடுத்து ஊக்கமளிக்கவும் செய்திருக்கிறது.

‘காலி கிந்தோட்டப்பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தைத் தடுக்க முடியாமல் பொலிஸ் தரப்பு தோல்வியடைந்து விட்டதை ஏற்றுக்கொள்வதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டிருப்பதானது இனவாதத்தீயின் மத்தியில் சட்டம் தோல்வி கண்டுவிட்டது என்பதைப் படம்போட்டுக் காட்டுகிறது.


1948ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் உலகளாவி பிரகடனமானது மக்கள் கண்ணியத்துடன் நடதப்பட வேண்டுமென்றால் அவை பொருளாதார உரிமைகள், கல்வி உட்பட சமூக உரிமைகள் மற்றும் கலாசார மற்றும் அரசியல் பங்கேற்பு மற்றும் சிவில் சுதந்திரம் ஆகியவற்றுக்கு உரிமைகள் தேவை என்று இப்பிரகடனம் அங்கீகரிப்பதுடன் இனம், வண்ணம், பாலினம், மொழி, மதம், அரசியல் அல்லது மற்றக் கருத்துக்கள் தேசிய அல்லது சமூகத் தோற்றம், சொத்து, பிறப்பு அல்லது பிற அந்தஸ்து போன்ற எந்தவொரு வகையிலும் வித்தியாசமின்றி உரிமைகள் அனைவருக்கும் உண்டு என்று கூறினாலும் இந்நாட்டில் அவ்வுரிமைகளோடு சிறுபான்மை மக்கள் வாழ்வதற்கு பெரும்பான்மை இனப் பேரினவாதம் இன மேலான்மை அடிப்படை நம்பிக்கையினால் அவற்றைப் வழங்க மறுத்து வந்திருப்பது மாத்திமின்றி அவ்வுரிமைகளை கலவரங்களின் மூலம் பெறுவதைத் தடுத்துமிருக்கிறது.


வெற்றுக் காரணங்களின் அடிப்படையில் திட்டமிட்டு கலவரங்களை உருவாக்கி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்தொழிக்கும் இனவாத்தின் இலக்குகளை இலகுபடுத்துவதிலிருந்து முஸ்லிம்கள் நிதானமாகச் செயற்படுவது காலத்தின் அவசியமாகும். ஏனெனில் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுடனும் சகவாழ்வுடன் வாழ விரும்பும் பல்லாயிரக் கணக்கான மக்கள் உள்ளனர் என்பதையும் இங்கு பதிவிடுவது அவசியமாகும்.

முஸ்லிம்கள் புற, அகச் சூழலையும், பலம,; பலவீனத்தையும் சுய விசாரணைக்கு உட்படுத்தாது, வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு முன்னெடுக்கின்ற செயற்பாடுகள் இனவாதம் இலகுவாகப் பாய்வதற்கு வழி ஏற்படுத்தி விடக் கூடாது. வரலாறு நெடுங்கிலும் பேரினவாதம் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட கலவரங்களின் பின்னணியில் முஸ்லிம்கள் பக்கமிருந்த சிறு விடயங்களே காரணமெனச் சொல்ல வைத்திருக்கிறது. 

அவ்வாறானதொரு காரணத்தைத்தான் கிந்தோட்டைக் கலவரத்தையும் முஸ்லிம் இளைஞர்கள்தான் தூண்டினார்கள் என பேரினவாதத்தி;ற்கு வாய்ப்பாடு கூறும் ஊடகங்கள் கூவிக்கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிகாட்டுவது அவசியமாகவுள்ளது.

இனவாதச் சூழலும் சாணக்கிய செயற்பாடுகளும்


முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் புரியும் அத்தனை செயற்பாடுகளையும் சரிகாணும் மனப்பாங்கு சமீப காலத்தில் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் உருவாகி வருவதானது ஆபத்துமிக்கதொரு சூழலாகும். அளுத்கம கலவரத்தை தூண்டியதாகக் கருதப்படுகின்ற ஞானசார தேரர் ‘உங்கள் இளைஞர்களைக் கட்டுப்படுத்தாவிடின் எமது இளைஞர்களையும் கட்டுப்படுத்தவியலாது’ நீங்கள் திருந்தினால் நாங்களும் திருந்துவோம்’ எனத் தெரிவித்திருப்பது குறித்து முஸ்லிம்களின் சிந்தனை கூர்மைப்படுத்தப்பட வேண்டும். 

உலகிக்கு அமைத்தியையும், சகவாழ்பையும, விட்டுக்கொடுப்பையும் அறிமுகப்படுத்திய இஸ்லாதத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்கள் திருந்தவில்லை திருந்துங்கள் என்ற கருத்துப்பட தேரர் குறிப்பிட்டிருப்பது தொடர்பில் முஸ்லிம்கள் சிந்திக்கமால் இருக்க முடியாது. செயற்பாடுகளையும் திருத்தாமலும் இருக்க முடியாது.


முஸ்லிம்கள் ஒவ்வொரு துறையிலும் விடும் சிறு சிறு தவறுகளும் சட்டத்திற்குப் புறம்பான விடயங்களும் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், வர்த்தக நடவடிக்கை தொடர்பிலும் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் எதிர்மறை சிந்தனைகள் ஊட்டி வளர்க்கப்படுகின்றன. 

ஊடகங்கள் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் இச்செயற்பாடுகளுக்கு பேராயுதமாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சமகால இனவாதச் சூழல் தொடர்பில் சிந்திப்பதும் சாணக்கியமாகச் செயற்பட்டு இனவாதத்தின் பரப்புரைகளையும் செயற்பாடுகளையும் வெற்றிகொள்ளவதும் அவசியமாகவுள்ளது. 

ஏனெனில், இந்நாடு எல்லோருக்கும் சொந்தமானது, இந்நாட்டின் அரசியலமைப்பானது இந்நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் சமூகங்களும் தங்களுக்குரிய உரிமைகளோடு வாழ முடியும் என்றே கூறியிருக்கிறது. அதனால,; சந்ததி சந்ததியாக இந்நாட்டில் வாழவிருக்கும் முஸ்லிம்கள் பொருளாதாரத்தை மாத்திரமின்றி அத்தனை சமூகக் கூறுகளையும் பாதுகாத்து அவற்றை விருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளது.

சமூகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் தடங்களாகவுள்ள இனவாதச் சூழலை சணக்கியத்துடன் வெற்றிகொள்வதாயின் முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புக்கள், உலமாப் பெருந்தகைகள், புத்திஜீவிகள் என அத்தனை தரப்புக்களும் ஒன்றுமைப்படுவது காலத்தின் அவசியமாகும்.. 


கட்சி அரசியல் மற்றும் பதவிகளுக்காகவும், பிரதேச அதிகாரங்களுக்காகவும், கொள்கை கோட்பாடுகளுக்காகவும் பிரிந்து நின்று முஸ்லிம் சகோதரத்துவம் காட்டிக்கொடுக்கப்படுமாயின், பிளவுகள் தொடருமாயின் எதிர்கால சந்ததியினர் பாரியளவில் விலைகொடுக்க வேண்டி ஏற்படும் என்பதை மறுக்க முடியாது, பொருளாதார அழிவுகளை மாத்திரமின்றி பல பேரழிவுகளையும் எதிர்கால சந்திகள் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.


ஆதலால், செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, மாற்றுச் சமூகங்களினால் முன்வைக்கப்படும குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்து, குற்றவாளிகள் புரிகின்ற குற்றங்களுக்கு விலக்கில் விழும் வண்டுகளாக செயற்படாமல் சிந்தித்து நிதானமாகச் செயற்பட்டு சகவாழ்வுக்கான வழிகளைக் கூர்மைப்படுத்தி இனவாதம் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை இல்லாமல் செய்து, பரம்பரை பரம்பரையாக இந்நாட்டில் வாழப்போகும் எதிர்கால சந்ததியினரின் இருப்பைபயும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான முயற்சியை சாணக்கியத்துடன் முன்கொண்டு செயற்பட ஒன்றுபடுவோமாக!.

எம்.எம்.ஏ.சமட்