இந்த நாட்டில் முஸ்லிம்கள் கடந்த 2000 வருடங்கள் பழைமையானவர்கள் - சந்திரிக்காஇந்த நாட்டில் முஸ்லிம்கள் கடந்த 2000 வருடங்கள் பழைமையானவர்கள் எனவும் குறுகிய நோக்குடைய  தீய சக்திகள் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் மோதவிட்டு இனப் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன எனவும் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க குழுவின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இந்த நாட்டிலுள்ள சகலருக்கும் சமமான உரிமைகள் உள்ளன. சமய உரிமை, பேச்சு உரிமை, கல்வி உரிமை என்பன அவற்றில் முக்கியமானவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வி என்பது படிப்பது மாத்திரமல்ல. எவ்வளவு தான் படித்தாலும் சிறந்த மனிதம் உள்ள மனிதர்கள் உருவாகவில்லையாயின் அக்கல்வியில் பயனில்லை. கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் சமூகம் ஒன்று இந்நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டும். சமூக வலைத்தளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகள் இன்று மாணவர்களை மோசமான நடவடிக்கைகளின் பக்கம் திசை திருப்புகின்றன.
ஆசியாவில் நீரிழிவு நோய் உள்ள நாடுகளில் முன்னணியில் உள்ள ஒரு நாடு இலங்கையாகும். இந்த நாட்டில் அதிகமாக இந்நோய்க்குள்ளானவர்கள் முஸ்லிம்களே ஆவார்கள். முஸ்லிம்களது உணவுப் பழக்கம் இதற்குப் பிரதானமானது.
கல்வி என்பது புத்தகத்தில் படிப்பது மாத்திரமன்று. நாம் எப்படி சுகாதாரமாக வாழ வேண்டும் என்பது குறித்தும் அறிந்து செயற்பட வேண்டும். இதுவும் கல்வியின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கஹட்டோவிட்டாவில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற அல்பத்ரியா மகா வித்தியாலயத்தின் புதிய இரு மாடிக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
பாடசாலை அதிபர் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அஜித் மானப்பெரும எம்.பி. இஷாக் ரஹ்மான் எம்.பி. மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், கம்பஹா கல்வி வலய பணிப்பாளர் உட்பட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.