Nov 23, 2017

8000 முஸ்லிம்களை மிலேச்சத்தனமாகக் கொன்று குவித்த ரட்கோவுக்கு ஆயுள் தண்டனை
எஸ் ஹமீத்
( Ratko mladic இன்றைய  தோற்றம்)

1992 ம்  ஆண்டு ஆரம்பமானது அந்தக் கோர யுத்தம். பொஸ்னியாவில்  தமக்கான உரிமைகளுக்காகப் போராடிய முஸ்லிம் மக்களின் மீது வெறி கொண்டு வேட்டையாடியது செர்பிய இராணுவம். இது சம்பந்தமாக சாந்தி சச்சிதானந்தம் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய ஒரு கட்டுரையின் சிறு பகுதியைத் தருகிறேன்.

ஸ்லோபோடன் மிலோசவிச். 1989 முதல் 1997 வரை சேர்பியாவின் ஜனாதிபதியாகவும், 1997 முதல் 2000 வரை யூகோஸ்லாவியாவின் ஜனாதிபதியாகவும் இருந்தவர். இவர் யூகோஸ்லாவியா நாட்டின் பொஸ்னியா–ஹேர்ட்ஸகொவினா மக்களுக்கெதிராக யுத்தத்தினை மேற்கொண்டைமை மட்டுமன்றி அப்பிரதேசத்தில் வாழ்ந்த பொஸ்னிய முஸ்லிம்கள் முகம்கொடுத்த இனச்சுத்திகரிப்பின் சூத்திரதாரி எனவும் கருதப்படுபவர். நான்கு வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்த இந்த யுத்தம் கிட்டத்தட்ட 68,000 பொஸ்னிய முஸ்லிம்களைக் காவுகொண்டது. அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த 25,000க்கு மேற்பட்ட பெண்கள் திட்டமிட்ட பாலியல் வல்லுறவுக்குள்ளாவதற்கான காரணமாகிற்று.

44 மாதங்கள் பொஸ்னியாவின் தலைநகரமான சாராயெவோ முற்றுகையிடப்பட்டிருந்தது. இங்கு உணவும் மருந்துமின்றி இறந்தவர்கள் ஏராளமானோர். ஏனையோர் தொடர்ந்த  ஷெல்லடிகளில் இறந்தனர்.  ஸ்ரெப்ரனிகா படுகொலை போன்று பல படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. ஐரோப்பாவிற்கு நடுவே, இவ்வளவு நீண்டகாலம் நிகழ்ந்து வந்த அழிவினைத் தடுத்து நிறுத்துவதில் மேற்குலக நாடுகள் மிகுந்த தயக்கம் காட்டின. பொஸ்னியாவில் வாழ்ந்த ஐரோப்பிய முஸ்லிம்கள் அழிவதில் மேற்கு நாடுகளின் நலனும் உள்ளடங்கியிருந்தது என்பது அன்றைய பல அரசியல் அவதானிகளின் கருத்தாக இருந்தது. கடைசியில் நேட்டோ அமைப்பு ஒரு வகையாக தலையை நுழைத்து யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்தியது மட்டுமல்ல, மிலோசவிச்சை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் போர்க்குற்ற விசாரணைகளுக்காக நிறுத்தியது. கடைசியில், வழக்கு முடிவடையும் முன்னரேயே மிலோசவிச் 2006ஆம் ஆண்டு சிறையில் மாரடைப்பினால் இறந்துவிட்டார். (நன்றி: ஞாயிறு தினக்குரல் & சாந்தி சச்சிதானந்தம் )


மிலோசவிச்சின் இராணுவத் தளபதியாக இருந்தவன்  ஜெனரல் ரட்கோ மால்டிக். 1995ம் ஆண்டு தலைமறைவான இவன் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றினால் 16 வருடங்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில்  செர்பியால் வைத்து 2011ம்  ஆண்டு கைது செய்யப்பட்டான்.


சர்வதேச போர்க் குற்றவியல் நீதிமன்றில் இவனுக்கெதிரான விசாரணைகள் நடந்து வந்தன. கடைசியில் நேற்று (22 -11 -2017 ) இவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


பொஸ்னிய முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் ஏழாயிரம் பேரைக் கொன்றமைக்குத் தலைமை தாங்கியது, பொஸ்னிய முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பெருமளவில் பாலியல் வல்லுறவு  புரிந்தமைக்கு  உடந்தையாக இருந்தது, கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்ட முஸ்லிம்களை பசியிலும் தாயகத்திலும் வைத்துக் கொடுமை செய்தது, அவர்களை  அடித்து வதை செய்தது,அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டு வீசியது,முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றியது, அவர்களின் வீடுகள் மற்றும் பள்ளிவாசல்களைஇடித்துத் தரைமட்டமாக்கியது உள்ளிட்ட குற்றங்களில் ரட்கோ குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டான்.


''நீங்கள் சொன்ன அனைத்துமே பொய்” என்று நீதிபதிகளை நோக்கி ரேட்கோ  கத்தினான். அதனால் அவனை அங்கிருந்து வெளியேற்றிவிட்டே  இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network