Nov 16, 2017

வட்டமடு; கண்டு கொள்ளாமலிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்.
எம்.ஏ.றமீஸ்

அரசியலில் இயலுமைஇயலாமை என்னும் இரு பிரதான வகிபாகம் இருக்கின்றன. அவற்றுள் இயலாமை என்னும் அரசியலைக் காண வேண்டுமாக இருந்தால் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு முறை ஏனைய மாவட்டத்தவர்கள் வந்து சென்றால் அந்த இயலாமையைக் கண்டு கொள்ள முடியும்.

வீதி எங்கும் வீசிக் கிடக்கின்றார்கள் மனிதர்கள். போராட்டங்களால் எதையாவது வென்று கொள்ளலாம் என்று வீதியில் இறங்கியவர்களுக்கு அவமரியாதையும் பழிச் சொற்களுமே வெகுமதியாகக் கிடைத்து வருகின்றன.

நாட்கள் நகர்கின்றனபோராட்டங்கள் தொடர்கின்றனதீர்வுகள் எட்டாக் கனிகள் போல் தூரமாகின்றன. தமது போராட்டத்தின் பின்னால் எந்த அரசியல்வாதிகளாவது வந்து தீர்வினைப் பெற்றுத் தருவார்களா என்று அங்கலாய்க்கும் அப்பாவி மக்களின் கண்களில் அரசியல்வாதிகள் காற்றில் திசைமாறி வந்து விழும் தூசுகளைப் போலாவது சிக்குவார்களாஎன்று தேடினாலும் எங்கேயும் காணவில்லை அவர்களை.

மக்களை உசுப்பேற்றி தேர்தற் காலங்களில் மேடைக்கு மேடை உரிமைப் போராட்டம் நடத்தி வரும் சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நடந்தேறிவரும் தலைபோகும் பிரச்சினைகளை இன்னும் கண்டு கொள்ளாமல் இருப்பதன் மர்மம்தான் என்னவென்று புரியவில்லை.

சுயநலத்திற்காக செயற்பட்டு எடுப்பார் கைப்பொம்மையாக அரசியல்வாதிகள் இருக்கின்றார்களா அல்லது தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்ற உண்மையினை உணர்ந்து கொண்டு ஓரயமாய் இருந்து காலடியில் நடக்கும் பிரச்சினைகளை காலாகாலமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்களாஎன்று எண்ணத் தோன்றுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் நடந்தேறிவரும் முஸ்லிம்களின் மீதான அத்துமீறல்களில் மற்றுமொரு விடயம்தான் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டமடு விவசாயக் காணி விவகாரம்.

தமது பூர்வீகக் காணிகளை நிரந்தரமாக கையகப்படுத்தும் முயற்சியில் 'வட்டமடுக் காணிகளை மீட்கும் போராட்டம்எனும் தொனிப் பொருளில் கடந்த பதின்மூன்று தினங்களாக நடு வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியும் எவ்வித தீர்வுமே கிட்டாமல் அப்பாவி ஏழை விவசாயிகள் நாட்களை எண்ணிக் கொண்டு போராட்டத்தினை நகர்த்தி வருகின்றனர்.

மாற்றான் தாய்ப் பிள்ளை நம்பிடம் வராமல் போனாலும் நாம் வாக்களித்த முஸ்லிம் அரசியல் தலைமைகளோ அல்லது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளோ எம் கண்ணீரைத் துடைக்க வருவார்களா என்று ஏங்கித் தவிக்கும் அப்பாவி விவசாயிகளுக்கு கிடைத்த தீர்வுதான பூச்சியமாகியுள்ளது.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இப்பிரதேசத்தில் நெற்செய்கை மேற்கொண்டு வந்த சுமார் 717 குடும்பத்தவர்களின் 1500 ஏக்கரிற்கும் அதிகமாக நெற்காணிகளை சில தரப்பினர் வேண்டுமென்றே வாழ்வாதாரத்தினை முடக்கி விடுகின்றனர்.

இவ்விவசாய நிலத்தினை நம்பியே தமது ஜீவனோபாயத்தினை நகர்த்தி வரும் இம்மக்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஆம் இப்பிரதேசத்தில் விவசாயச் செய்கை மேற்கொள்ளக்கூடாது அது ஒதுக்கு வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என வன இலாகா அதிகாரிகள் அண்மைக் காலமாக தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக தம்மிடமுள்ள பொருளாதாரத்தினைச் செலவு செய்து அப்பிரதேசத்தில் விவசாயச் செய்கை மேற்கொளச் செல்லும் விவசாயிகளையும் விவசாயச் செய்கைக்காக பயன்படுத்;தப்படும் உழவு இயந்திரங்கள் போன்றவற்றை வன இலாகா அதிகாரிகள் கைது செய்து திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படுவதும்நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதும் பின்னர் விடுதலை ஆவதும் வழக்காறாக இருந்து வருகின்றது.

வட்டமடுவேப்பையடிகொக்குழுவமுறாணவெட்டிவட்டமடு புதிய கண்டம் ஆகிய ஐந்து விவசாயக் கண்டங்களிலுமுள்ள சுமார் 1500இற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் எவ்வித பிரச்சினைகளுமில்லாமல் நெற்செய்கையினை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இப்பகுதி நிலங்கள் 333/3 இலக்கம் கொண்ட விவசாயக் காணிக்கான அதி விஷேட வர்த்தமானி மூலம் 1985.04.03 ஆம் திகதி அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவை நிலையத்தின் நிருவாக எல்லையாக அறிவிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இப்பிரதேசத்தில் விவசாயிகள் தங்கியிருந்து தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான பல்வேறு ஆதாரங்களும் இருப்பதாக தெரிய வருகின்றது. அப்பகுதியில் தங்கியிருந்து விவசாயச் செய்கை மேற்கொண்டபோது 1974.04.06ஆம் திகதி நடந்தேறிய ஒரு பிரசவத்தினைக்கூட இங்கே அதற்கான ஆதாரமாகக் கொள்ள முடியும். கலந்தர் லெவ்வை முகைதீன் வதீர் என்பவர் அப்பிரதேசத்தில் பிறந்து அவருக்கான பிறப்புச் சான்று திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

இப்பிரதேச விவசாயக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தினை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கும் வகையில் 1978.08.10ஆம் திகதி காணி அமைச்சின் மூலம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு விஷேட கடிதத் தலைப்பிட்டு அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்களும் இவ்விவசாயக் காணிகளில் நீண்ட காலமாக மக்கள் நடமாடியிருக்கின்றார்கள் என்ற தடயங்களுள் ஒன்றாகக் கொள்ள முடியும்.

இதற்கும் மேலாக 1979.06.20 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் சாகாமம் நீர்ப்பாசன காரியாலயத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைவாக அப்போது அக்கரைப்பற்று உதவி அரசாங்க அதிபராக இருந்த சிறவர்தன மற்றும் திருக்கோவில் உதவி அரசாங்க அதிபராக இருந்த வேதநாயகம் ஆகியோரின் பங்குபற்றலுடன் விஷேட காணிக்கச்சேரி நடத்தப்பட்டு 1979ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அப்பகுதி விவசாயிகளுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டும்பின்னர்   LDOஅனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டமைக்கான சான்றுகளும் உள்ளன.

இது தவிர இவ்விவசாயிகள் நெல் விவசாயத்தினை சிறப்புற மேற்கொள்ள வேண்டும் என அக்கரைப்பற்று கமநல சேவை மத்திய நிலையத்தினால் ALR, PLR பதிவுளும் மேற்கொள்ளப்பட்டு இப்பகுதி குளங்கள் அரசாங்கத்தினால் புனரமைக்கப்பட்டும் வழங்கப்பட்டுள்ளமையினையும் ஆதாரமாகக் கொள்ள முடியும்.

இது இவ்வாறிருக்க யுத்த கால சூழ்நிலையிலும் இப்பிரதேசத்தில் முஸ்லிம் விவசாயிகள் எவ்வித தங்கு தடையுமின்றி தமது விவசாயச் செய்கையினை மேற்கொண்டு வந்துள்ளனர். தமது உயிரை மாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை என வயிற்றுப் பசியினைப் போக்கி வந்த இவ்விவசாயிகளுக்கு போர் நிறுத்த சூழ்நிலையில் சாதகமான நிலையும் உருவாக்கிக் கொடுக்கப்பட்டது எனலாம்.

கடந்த 2003.10.02ஆம் திகதி திங்களன்று அம்பாறை மாவட்ட அரச அதிபர் தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள்போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர். இப்பிரதேச முஸ்லிம் விவசாயிகள் போன்றோர் ஒரே மேசையில் கலந்துரையாடி இவ்விவசாயிகள் தங்கு தடையின்றி தமது நெல் விவசாயச் செய்கையினை மேற்கொள்ள முடியும் அதற்கான உத்தரவாதத்தினையும் பாதுகாப்பினையும் விடுதலைப் புலிகளை இயக்கத்தினர் வழங்குவதாக வாக்குறுதியளித்தமையினையும் இங்கே குறிப்பிட்டுக் கூற முடியும்.

ஆதாரங்கள் பல பலமாகவும் விவசாயிகளுக்கு சாதகமாகவும் இருந்த போதிலும்கூட இவ்விவசாயிகளுக்கு பற்பல சோதனைகள் வந்த வண்ணமே உள்ளன. இவ்விவசாய நிலப்பரப்பானது மேய்ச்சல் தரை என ஒரு சாராரும்ஒதுக்கு வனப் பிரதேசம் என மறு சாராரும் இவ்விவசாயிகளுக்கு பற்பல தொல்லைகளை கொடுத்த வண்ணமே இருந்து வந்தனர்.

கடந்த 1981ஆம் ஆண்டு கால்நடைப் பண்ணையாளர்களால் இப்பிரதேசம் மேய்ச்சல் தரை என நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.PCA/1433 என்னும் வழக்கிலக்கத்திற்கு அமைவாக அக்கரைப்பற்று நீதவான் நீதி மன்றத்தில் தொடரப்பட்டு வந்த வழக்கிற்கு அமைவாக அப்போது கடமையில் இருந்த நீதிபதி அக்காணிகளுக்குள் நேரடியாகச் சென்று பார்வையிட்டதன் பின்னர் இப்பகுதி விவசாயக் காணி எனவும் இக்காணிகள் உள்ளே பண்ணையாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உட்பிரவேசிக்க முடியாது என தடை விதித்து1982.04.24ஆம் திகதி தீர்ப்பு வழங்கியதுடன்இவ்விடயம் தொடர்பில் சிவில் நீதி மன்றினை நாடும்படி பணிக்கப்பட்டது. இதற்கமைவாகDCK/1584/L  என்னும் இலக்கம் கொண்ட வழக்கு கல்முனை மாவட்ட நீதி மன்றத்தில் தொடரப்பட்டு வந்தது. கடந்த 20 ஆண்டு காலமாக இந்நீதி மன்னறத்தில் இடம்பெற்று வந்த வழக்கு கடந்த 2001.04.23ஆம் திகதி செலவுத் தொகையுடன் இவ்விவசாயிகளுக்கே வெற்றி கிட்டியது.

இது இவ்வாறிருக்க உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் காண்பித்து சில தரப்பினரால் கடந்த 2010.10.01ஆம் திகதி 1673/45இலக்கத்துடனான வர்த்தமானி அறிவித்தலில் இக்காணிகள் ஒதுக்கு வனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மைக்குப் புறம்பான விடயம் என குறிப்பிட்டு அவ்வப்போத விவசாயிகளால் கவனயீர்ப்புப் போராட்டங்களும்உணவு தவிர்ப்புப் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

இப்போராட்டங்களின் தற்காலிக தீர்வாக இப்பகுதி விவசாயிகளுக்கு சொற்ப காணிகளில் சொற்ப நிலப்பகுதிக்குள் விவசாயம் செய்வதற்கான அனுமதிகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் வழங்கப்படுவதும் பின்னர் வன இலாகா அதிகாரிகளால் விவசாயம் செய்யப்படுவது தடுக்கப்படுவதுமாக கடந்த சில வருடங்கள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன.

தமக்கான நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என இவ்விவசாயிகளால் கடந்த 2017.11.04ஆம் திகதி வட்டமடுப் பிரதேசத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. இரண்டு தினங்கள் அப்பிரதேசத்தில் கொட்டும் மழைஎரிக்கும் வெயில் ஆகியவற்றிற்கு மத்தியில் கவனயீர்ப்பு தொடரப்பட்ட போதிலும் தீர்வு எதும் எட்டப்படாத நிலையில் தமது போராட்டத்தினை அக்கரைப்பற்று நகரிற்கு மாற்றினர்.

அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சுற்று வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தினுள் அமர்ந்தவாறு சாத்வீக ரீதியில் கடந்த 13தினங்களாக போராட்டத்தினை அவ்விவசாயிகள் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் இக்காலப் பகுதிக்குள் தமது விவசாய உபகரணங்கள் சகிதம் அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சுற்று வட்டாரத்திலுள்ள பிரதான வீதியினை வழி மறித்து போராட்டத்தினை தொடர்ந்தனர்.

இதனால் சில மணி நேரம் இப்பிரதேச போக்குவரத்துக்கள் அனைத்தும் தடைப்பட்டன. அக்கரைப்பற்று பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து நாட்டின் நாலா பாகங்களுக்கும் செல்வதற்கு ஆயத்தமான அரச தனியார் போக்கு வரத்துக்கள் மற்றும் இதர பொதுமக்களின் இதர போக்குவரத்துக்களும் தடைப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் வகையில் நீதி மன்ற உத்தரவுப் பத்திரத்தனை கொண்டு வந்த அவ்விவசாயிகளை அங்கிருந்து வெளியேற்றினர். இதற்குப் பின்னராவது தமக்கு ஏதாவது தீர்வு கிட்டுமா என சின்தொரு நம்பிக்கையிலிருந்த விவசாயிகளுக்கு கிடைத்த வெகுமானம் எதுவுமே இல்லாமல் போனது.

இது இவ்வாறிருக்க கடந்த வெள்ளிக்கிழமை(10) அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசல் முன்னால் இருந்து இவ்விவசாயிகள் முன்னெடுத்த  காணி மீட்புப் பேரணி பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அன்றைய தினம் தனக்கு எவ்வித அதிகாரமுமில்லாத அரசியல்வாதியொருவர் தூரப்பிரதேசத்திலிருந்து வந்து காணிகளை மீட்பதற்காக ஜனாதிபதியிடம் பேசியிருக்கின்றேன் என தன்னை பெரும் அரசியல் கட்சியொன்றின் அமைப்பாளர் என்ற போர்வையில் வாய்ச்சொல் வீரம் காட்டியவரை வட்டமடு விவசாயிகள் ஓட ஓட விரட்டி அவர் மூக்குடைபட்டுச் சென்ற வேதனையும் அப்பகுதியில் அரங்கேறியமை நகைச்சுவைக்குரியது என அப்பிரதேச மக்கள் கூறியது எமக்கும் ஒரு கணம் புன்னகை வரச் செய்தது.

இம்மக்களின் போராட்டங்களை கணக்கிலெடுக்கா வண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இருக்கின்றார்களாஎன இச்சந்தர்ப்பத்தில் எண்ணத் தோன்றுகின்றது. எது எப்படியோ இவ்விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிட்ட வேண்டும் அப்பாவி ஏழை விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தினை தம்மகத்தே கையகப்படுத்த வேண்டும் என்ற அங்கலாய்ப்பு இப்பிரதே மக்கள் மத்தியில் இருந்து வருவது மட்டும் உண்மையாகும்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network