வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தவறான பிரச்சாரம்ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்

வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களின் இணக்கப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனையை வட கிழக்கு இணைப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் திட்டமிட்டு செயற்படுவதாக தவறான பிரசாரம் முன்னெடுக்கப் படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த நாட்டில் உள்ள மாகாணங்கள் எவையும் இணைக்கக்கூடாது என்று குறிப்பிடும் ஜாதிக ஹெல உறுமயவின்   யோசனைகளை இருட்டடிப்புச் செய்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு சபையில் நேற்று (01) புதன்கிழமை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் நாட்டின் தன்மையானது தமிழ் மொழியில் ஒருமித்த நாடு என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த சொற்பதத்தினை பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது வழிநடத்தல் குழு அமர்வொன்றில் என்னிடத்தில் இந்த சொற்பதத்தினை பயன்படுத்துவது குறித்து உங்களின் நிலைப்பாடு என்னவென்று கேட்டார்கள்.

தமிழ் மொழியில் பரீட்சயம் உள்ளவர் என்ற அடிப்படையில் நான், மிகச்சரியான சொற்பதம் என்றே கூறினேன். மேலும் இந்த சொற்பதத்தினை பயந்படுத்துவது முற்போக்கானதொன்று எனவும் குறிப்பிட்டேன். இவ்வாறிருக்கையில் தற்போது இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருமித்த நாடு என்ற பதம் அரசியலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது ஒருமித்த நாடு என்ற சொற்பதத்திற்கு வெவ்வேறு விதத்தில் அர்த்தம் கற்பித்து பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். தெற்கில் கடுமையான கடுமையான பிரச்சாரங்களை முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வறிக்கையில், தற்போது சட்டத்தரணிகள் சங்கம் இந்த விடயத்தினை கையிலெடுத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

அண்மையில் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்திற்கு சட்டத்தரணிகள் சங்கம் ஒரு விளக்கத்தினை அளித்திருக்கின்றது. இடைக்கால அறிக்கையில் ஒருமித்த நாடு என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டு அந்த சொற்பதமானது பிரிக்கப்படாத நாடாக இருக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடபட்டிருக்கும் நிலையிலேயே நாடு பிளவுபடுவது பற்றி சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஒருமித்த நாடு என்பது நாடு பிரிவுபடாத ஒரு விடயம் என்பதை சட்டத்தரணிகள் சங்கம் அறியவில்லையா? சட்டம் தெரிந்த அவர்கள் என்ன நோக்கத்துக்காக செயற்படுகின்றார்கள் என்ற கேள்வியே தற்போது எழுகிறது. தேசிய பிரச்சினையை அடுத்த சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

அதுவொரு புறமிருக்கையில் , ஜனாதிபதி முறையை நீக்குவதா? இல்லையா? இரண்டாவது சபையை அமைப்பது, பௌத்த மதத்துக்கான முக்கிய இடத்தை இல்லாமல் செய்வதா? ஒற்றையாட்சியா? சமஷ்டியாட்சியா? வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற நிலைப்பாடுகள் பற்றி பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இவை தொடர்பில் தற்போது வரையில் இறுதி முடிவுகள் இன்னமும் எட்டப்பட்டிருக்கவில்லை. இடைக்கால அறிக்கையில், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது யோசனையை முன்வைத்துள்ளது. அந்த விடயம் வழிநடத்தல் குழுவின் நிலைப்பாடு அல்ல. கூட்டமைப்பின் தனிப்பட்ட கருத்தாகும். இதனை சிலர் தூக்கிப்பிடித்துக் கொண்டு பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

தென்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், தலைவர்கள் எனக்கூறிக்கொள்ளும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்கள் மத்தியில் இது பற்றி பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர். இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வாயை மூடிக்கொண்டிருப்பதாக அவர்கள் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இவ்வாறு பிரச்சாரங்களை முன்னெடுப்பார்கள், எந்தவொரு மாகாணங்களும் இணைக்கப்படக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய முன்வைத்திருக்கும் யோசனைகளை மறைத்து செயற்படுகின்றனர்.

அவ்வாறு மறைத்து செயற்படுவதற்கான காரணம் என்ன? மேலும் இந்த சபையில் உள்ள சிரேஷ்ட அரசியல்வாதியான சம்பந்தன், அண்ணன் மாவை போன்றவர்கள் கிழக்கு மாகாண மக்களின் இணக்கப்பாடும் வடகிழக்கு இணைப்பில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இவை அனைத்தையும் விடுத்து கூட்டமைப்பும் மு.காவும் வடக்கு, கிழக்கை இணைக்கப் போகின்றன என்று பிரச்சாரம் செய்வதில் என்ன நியாயம் இருக்கின்றது. அதேநேரம் மிக முக்கியமான விடயம் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை வழங்கப்படும் அதேநேரம் ஏனைய மாதங்களுக்கான கௌரவம் தடைப்படுதல் மற்றும் இரண்டாம் பட்சமான கவனிப்பு என்பவற்றை தடுக்கும் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது முக்கியமானது என்றார்.