ஜின்தோட்ட மற்றும் இனவாதம்: போட்டியில் வெல்வதற்கான ஒரு துரும்புச்சீட்டுஜின்தோட்ட இனவெறி வெடிப்பு என்பது சமீபத்தில் நடைபெற்ற ஒன்று, ஆனால் தன்னை யகபாலன அல்லது நல்லாட்சி என அழைத்துக்கொள்ளும் ஐதேக - ஸ்ரீலசுக கூட்டணி அர சாங்கத்திற்கும் மற்றும் யகபாலனவுக்கு எதிரான  அரசியல் ரீதியாக விற்பனையாகக்கூடிய சுலோகம் ஒன்றை இன்னும் கண்டுபிடிக்க வேண்டிய நிலையிலுள்ள கூட்டு எதிரணிக் குழுவினருக்கும் இடையே நடைபெறும் ஒரு கேவலமான அரசியல் போட்டி விளையாட்டுத் தொடரை அவதானிக்கும் போது, இது நிச்சியமாக இறுதியானதல்ல.


சாதாரண சூழ்நிலைகளின் கீழ் நடக்கும் குழுக்களுக்கு இடையேயான உண்மையான விளையாட்டுக்களில், இரண்டு பக்கத்தினரும் சமமாகப் பொருந்துவார்கள் மற்றும் நடுவர் கவனிக்க மாட்டார் என்கிற எதிர்பார்ப்புடன் வெற்றியை அடைவதற்கு ஒரு வழியாக மற்றப் பகுதியினரை தோற்கடிக்கும் வகையில் தப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான  எந்தவொரு பலவீனமான முயற்சியையும் எந்த அணியும் மேற்கொள்ளாது. ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசியலில் நடப்பதின் சாராம்சம் இதுதான். இரண்டு கூட்டணிக் குழுவினரும் இனவாத துருப்புச்சீட்டை வைத்து விளையாடுகிறார்கள், மாறாக அவர்கள் ஒவ்வொரும் நுட்பமான முறையில் எதிர்பார்ப்பது நடுவர் நிலையில் உள்ள பொதுஜனம் மற்றக் குழவினர்தான் இதை தூண்டிவிடுகிறார்கள் என்று அவர்கள்மீது பழி சுமத்துவார்கள் என்று. எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் காவி உடை தரித்த குண்டர்கள் மற்றும் அவர்களது கூலிப்படையினர் ஜின்தோட்டையில் இரத்தக்களரி ஏற்படுத்தும் பேரழிவில் ஈடுபட்டார்கள், சில அரசியல் பேர்வழிகளின் பின்துணையில்லாமல் அவர்கள் இதைச் செய்திருக்க முடியாது. இந்த குழப்பத்துக்காக யகபாலன எதிர்த்தரப்பை குற்றம் சாட்டுவது நல்லதுதான் ஆனால் ஏன் அது கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை நீதிமன்றின் முன்பாக நிறுத்தவில்லை? இதைச் செய்யாததினால் அரசாங்கமும் கூட திரைமறைவில் இனவாதத்துக்கு ஆதரவளிக்கிறது என்றே கருதவேண்டியுள்ளது.
உலகளாவிய சூழலில் ஸ்ரீலங்காவின் இனவாத அரசியல் அதனை எந்த இடத்தில் வைத்திருக்கிறது?
மற்றும் பல நாடுகளில் நடந்துள்ளதைப் போல, ஸ்ரீலங்காவிலும்; பாரம்பரிய இடதுசாரியினரினர் மரணமடைந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது, மற்றும் பொதுத் தேர்தல்களில் பொதுமக்கள் வாக்களிக்கும்போது தெரிவு செய்வதற்கு ஏற்றவகையில் மாறுபட்ட கொள்கைப் பொதிகள் காணமற் போயிருப்பதானால் ஜனநாயக மக்கள் தொகையினர் இப்போது வெற்று ஆனால் கவர்ச்சியான கோஷங்கள் மற்றும் திறமையான பயிற்சி பெற்றவர்களுக்கு மாறாக  தொழில்முறை அழகுக் கலைஞர்களின் உற்பத்திகள் என்பனவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போட்டியாளர்களுக்கு இடையே உள்ள கொள்கை வேறுபாடுகள் மிகவும் குறுகலாக இருக்கும் நிலையில், அவர்களில் ஒருவரைத் தேர்வு செய்வது கொக்கோ கோலா மற்றும் பெப்சி கோலா ஆகிய இரண்டுக்கும் இடையே ஒன்றைத் தெரிவு செய்வது போல இருக்கிறது. தற்போதைய போட்டி ஆளும் மைத்திரிபால சிறிசேன முகாமுக்கும் மற்றும் எதிர்க்கும் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே நடைபெறுகிறது, இது வாக்காளர்க்கு வடிவத்துக்கும் மற்றும் பொருளுக்கும் இடையே ஒன்றைத் தெரிவு செய்யும் தெரிவினை வழங்குகிறது.
சோஷலிசத்தின் மீதான நவ தாராண்மைவாதத்தின் வெற்றியுடன் ஆளும் உலகளாவிய அரசியல் பொருளாதார முன்னுதாரணம் அரசியலின் வலது மற்றும் இடது பக்கங்களாக மாறி இயந்திரம் மூலமாக இயங்கும் முதலாளித்துவத்தின் கட்டளைகளையும் மற்றும் நடைமுறைகளையும் தழுவி வருகிறது. முன்னாள் பிரித்தானிய தொழிற்கட்சிப் பிரதமர் டொனி பிளேயரின் மூன்றாவது வழி என அழைக்கப்படுவது கூட அவரது கட்சியை மையத்தின் வலது புறமாக இழுக்கத் தூண்டும் ஒரு கெட்ட நடவடிக்கை ஆகும். இதன்படி அநேக  மேற்கத்தைய ஜனநாயக நாடுகளில் கூட தேர்தல்களில், பெரும்பான்மை மக்கள் எதிர்கொள்ளும் தினசரி பொருளாதார சிக்கல்களைவிட குடியேற்றம், பன்முக கலாச்சாரவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்ற உணர்ச்சிபூர்வமான விடயங்கள்தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆகவே ஸ்ரீலங்காவில்கூட இரண்டு முகாம்களும் தங்கள் அரசியல் போட்டியில் வெற்றி பெறுவதற்கான துருப்புச்சீட்டு இனவாதம்தான் என்பதை நன்கு உணர்ந்துள்ளது ஆச்சரியம் தரவில்லை.
இதுவரை ஸ்ரீலங்காவில் உள்ள எந்த ஒரு கட்சியும், உயர்ந்துகொண்டே போகும் வாழ்க்கைச் செலவின் பிடியில் மில்லியன் கணக்கான குடும்பங்கள் அமிழ்ந்திருப்பதை, பெருந்தொகையான ஊழல்கள், ஜனநாயகத்தையும் அதன் தன்மையையும் காலியாக்கும் தகுதியைப் பாராமல் சொந்தபந்தங்களுக்கு உயர் பதவிகளையும் செல்வாக்கினையும் வழங்கும் குரொனிசம் மற்றும் நெப்போடிசம் என்பனவற்றையும், தேசிய பொருளாதாரத்தை மீண்டும் காலனித்துவத்துக்கு உட்படுத்தும் கட்டுப்பாடில்லாத வெளிநாட்டு அரச மற்றும் தனியார் முதலீடுகள் மற்றும் நாட்டின் இறையாண்மை சிறிது சிறிதாக அரிக்கப்படுவதையும், வர்க்கப் போருக்கு உணவூட்டும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதுடன் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையை ஆபத்திற்குள்ளாக்கும் சிதைவடையும் இயற்கைச் சூழல் போன்ற உண்மையான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு உகந்த கொள்கைப் பொதிகளை முன்வைக்கவில்லை.
இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற உலகளாவிய முகாமையாளர்கள் நெருக்கமாகக் கண்காணித்து பாதுகாத்து வரும் நவ தாராளமய ஒழுங்கினை நிச்சயமாகப் பாதிப்புக்கு உள்ளாக்கும். முறைமைகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு அதன் பாதுகாவலர்கள் மற்றும் கருவிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெறமுடியாமல் சிக்கியிருக்கும் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் அபிவிருத்திக்கான ஒரு மாற்றுப் பாதையைக் காண்பதறகான விளையாட்டில் வெற்றி பெறுவதற்காக அவர்களிடம் மீந்திருக்கும் ஒரே ஒரு துருப்புச்சீட்டு இனவாதம் ஆகும்.
இனவெறிப் பாதையில் பிரயாசையுடன் நடைபோடுதின் காரணமாக, பதினாயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியாகி உள்ளன, பில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான சொத்துக்கள் அழிக்கப் பட்டுள்ளன, ஒரு தேவையற்ற உள்நாட்டு யுத்தம் போரிடப்பட்டுள்ளது, இவை அனைத்துக்கும் மேலாக மில்லியன் கணக்கான வருடங்களாக ஸ்ரீலங்கா உலகத்துக்கு விளக்கிய வரலாற்று ரீதியான மத மற்றும் இன அமைதி வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையினரின் மதிப்புக்களை வென்றெடுப்பது என்கிற போர்வையின் கீழ் தற்பெருமை அலைகளால் உந்தப்பட்டு; காரணமின்றி திருடும் மனப்பாங்கு கொண்ட அரசியல்வாதிகள் போன்ற மோசமானவர்களால் இந்த அழகான நாடு இயக்கப்படுகிறது. யார் அல்லது எது, எப்போ இந்த இயக்கத்தை அடியில் இருந்து மேலுயுயர்த்துவார்கள்? இந்த மௌனம் பேசுமா?
.கலாநிதி அமீர் அலி, வணிகம் மற்றும் ஆட்சியியல் பாடசாலை, முர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா.