Nov 17, 2017

மௌலவி ஆசிரியர் நியமனமும் முஸ்லிம் மாணவர்களும்உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளை நோக்குகின்றபோது அந்நாடுகள் கல்வித்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளாகக் காணப்படுகின்றன. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ். ரசியா, ஜப்பான் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளின் மனித வள விருத்திக்கு காரணமாக இருப்பது கல்விதான்.

அந்தவகையில், ஒரு நாட்டின் அபிவிருத்தி கல்வி வளர்ச்சியில்தான் தங்கியுள்ளது. ஒரு சமூகத்தின் விருத்திக்கும், மேம்பாட்டுக்கும் கல்வியே மிகப் பெரிய ஆயுதமாகும். ஒரு சமூகத்தின் சமூகக் கூறுகள் விருத்தியடைய வேண்டுமாயின் அச்சமூகம் கல்வியில் விருத்தியடைந்திருக்க வேண்டும் என்பதை உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஏற்பட்டு வருகின்ற நேர்மறையான சமூக மாற்றத்தையும், மேம்பாட்டையும,; விருத்தியையும் கொண்டு கணக்கிட்டுக்கொள்ள முடியும்.அந்த வகையில் இலங்கையின் அபிவிருத்திக்கும் சமூக வளர்ச்சிக்கும் கல்வித்துறை அபிவிருத்தி செய்யப்படுவது இன்றியமையாதது.

தேசத்தின்; கல்வி வளர்ச்சி

இலங்கை நாகரீகமடையத் தொடங்கிய காலத்திலிருந்தே கல்விக்காண முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதை வரலாற்றுப் பாடங்களினூடாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. ஏறக்குறைய 250 நூற்றாண்டுகள் நாகரீக வரலாற்றைக் கொண்ட இலங்கை மக்கள் தத்தமது மத நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், கலாசாரப் பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் என்பவற்றினூடாக கல்வி முறைகளையும், சட்டங்களையும், மருத்துவ முறைகளையும் அறிந்தவர்களாவும் அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாகவும் இருந்துள்ளனர்.

இலங்கைக்கு விஜயனின் வருகை முதல் பிரித்தானியரின் ஆட்சிக் காலம் நிறைவடையும் வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு முறைகளில் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளதையும், தொழில் நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும,; அத்தொழில் முறைக்கான கல்வி வழங்கப்பட்டுள்ளதையும் தேசத்தின் கல்வி வரலாற்றில் அவதானிக்க முடிகிறது. இந்நாட்டை இறுதியாக ஆண்ட பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் ஆங்கில மொழிப் பாடசாலைகள், கிராமப் புறப்பாடசாலைகள், விடுதிவசதிகளுடன் கூடிய பாடசாலைகள,; ஆசிரிய பயிற்சி கல்லூரி என பாடசாலைக் கல்வி வளர்ச்சிக்கான முறைமைகள்; உருவாக்கப்பட்டன.

இலங்கையில் கல்விச் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்காக சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் தொட்டே முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் 1942ஆம் ஆண்டில் இதற்கான விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்;டது. அதன் தலைவராக சி.டப்ளியு.டப்ளியு கன்னங்கரா நியமிக்கப்பட்டார். இலங்கையில் கல்வி விருத்தியை ஏற்படுத்தி கல்வி அறிவுடைய இலங்கைச் சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் 1943ஆம் ஆண்டு இக்குழுவினால் அறிக்கை வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையில் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை நாடளாவிய ரீதியில் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி போதிக்கப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டது.

இதன் மூலமே கடந்த 71 வருடங்களுக்கு மேலாக இலவசக் கல்வி நீடித்துக்கொண்டிருக்கிறது. சீ.டப்ளியு.டப்ளியு கன்னங்கராவினால் அன்று ஆரம்பிக்கப்பட்ட இலவசக் கல்வி முறைமையானது இலங்கை மக்களின் எழுத்தறிவு வீத அதிகரிப்புக்கு காரணமாகும்.
இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் கல்வியின் பால் பிள்ளைகளை அக்கறை கொள்ளச் செய்வதற்குமென இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் அரசாங்கங்கள் பல்வேறு கல்வி நலன்நோன்பல் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயற்படுத்தி வருகிறது.

அந்தவகையில், பாடசாலை மாணவர்களுக்கு பாட புத்தகம், பாடசாலைச் சீருடை, மதிய உணவு என்பன இலவசமாக வழங்கப்பட்டு வருவதுடன் என்றும் தேசத்;துப் பிள்ளைகளைக் காப்போம் என்ற மகுடத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரேக்ஷா’ காப்புறுதித்திட்டமும்; தற்போது
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அபிவிருத்தியை கவனத்திற்கொண்டு ஒவ்வொரு வருடமும் வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் கூட கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

சமயக் கல்வியும் ஆசிரியர் நியமனமும்;

இவ்விலவசக் கல்விச் செயற்பாட்டில் முன்பள்ளிக் கல்வி, ஆரம்பக்கல்வி, கனிஷ்ட இடைநிலைக்கல்வி, சிரேஷ்ட இடைநிலைக்கல்வி, மூன்றாம் நிலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வி, தொழில்கல்வி என்ற கல்வி முறைகள் காணப்படுகின்றன. இக்கல்வி முறைகளில் தாய்மொழிக் கல்விக்கும் சமயக் கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமென்பது இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இன்று வரை அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டபின் உருவான அப்போதைய அரசு நாட்டினுடைய பாரம்பரியத்தையும் அதனோடிணைந்த சுதேசத்தன்மையையும் பாதுகாக்கும் பொருட்டு தாய்மொழிக்கல்வியையும் சமயக் கல்வியையும் பாடசாலைக் கலைத்திட்டத்தில் அறிமுகம் செய்தது. சிங்கள மாணவர்களுக்கு பௌத்தமும், தமிழ் மாணவர்களுக்கு இந்து சமயமும், முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாம் பாடமும், கிறிஸ்தவ மாணவர்களுக்கு கிறிஸ்தவ சமயமும் கட்டாயமாக்கப்பட்டன. இப்பாடங்களைக் கற்பிப்பதற்காக அந்தந்த பாடங்களுக்குரிய ஆசிரியர்களும் அப்பப்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையிலேயே முஸ்லிம் மாணவர்களுக்கு அரபு மொழியையும் இஸ்லாம் பாடத்தையும் கற்பிப்பதற்காக முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் பதியுதீன் முகம்மத் அவர்களினால் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கiயின் கல்வித்துறையில் அவ்வ்வப்போது மேற்கொள்ளப்பட்ட சகல கல்விச் சீர்திருத்தங்களிலும் தொடர்ச்சியாக தாய்மொழிப் பாடத்திற்கும் சமயப் பாடத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்துள்ளன. தாய்மொழிக் கல்வியினூடாக தாய்மொழியை வளர்ப்பதற்கும், சமயக் கல்வியினூடாக ஆன்மீகத்தையும், விழும்பிங்களையும் மேலோங்கச் செய்வதற்கும் சமகாலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பது அவசியமாகவுள்ளது. இருப்பினும், இவ்விரு கல்விக்கும் வழங்கப்படுகின்ற முக்கியத்துவம் தொடர்பில் தற்காலத்தில் சிந்திக்க வேண்டியுள்ளது.

வருடா வருடம் நடைபெறும் கல்விப் பொதுத்தராததர சாதாரணதரப் பரீட்சைகளில்; தாய்மொழிப் பாடத்திலும் சமயப் பாடத்திலும் கூட பல மாணவர்கள் சித்தியடையத் தவறுகின்றனர். இது தாய்மொழி மற்றும் சமயப் பாடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அத்துடன்;;, மாணவ சமூகத்தில் காணப்படுகின்ற தவறான பழக்க வழக்கங்கள் மாணவர்கள் மத்தியில் சமயக் கல்வியினூடாக விழுமியங்கள் கட்டிக்காக்கப்படவில்லை என்பதை உணர்த்தி நிற்கின்றன. 

பாடசாலைக் கலைத்திட்டத்தில் சமயப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் மாணவர்களின் ஆன்மீக விருத்தியோடு மனித நேயமும் ஒழுக்காற்றுத் துறையும் வளர்க்கப்பட வேண்டுமென்பதற்காகவும், அதனூடாக சமூக மாற்றத்திற்கும், சமூக அமைதிக்கு வழிவகுக்கும் உயரிய விழுமியப் பண்புகளை விருத்தி செய்வற்காகவுமாகும்.

ஆனால், இந்த இலக்குகளை அடைந்து கொள்வதில் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இச்சயமப் பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்கள்; பாடசாலைகளில் சமமாகப் பங்கீடு செய்யப்படாமையும,; அவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றமையும், அவ்வெற்றிடங்கள் நிரப்பப்படாமையுமாகும். அரச பாடசாலைகளின் கலைத்திட்டத்தில் உள்ள பௌத்த பாடத்திற்கான ஆசிரியர்கள் காலத்திற்குக் காலம் நிமிக்கப்படுகின்றபோதிலும், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்த சமயப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் உரியவாறு நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாற்று தொடர்;ச்சியாக நிலவி வருகிறது.

சமயப் பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் தொடச்சியாக இருந்து வருகின்றது என்ற நிலையில,; மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான கோரிக்கைகளும்; அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. இக்கோரிக்கையினை ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களது அரசியல் பிரச்சாரங்களுக்கான துரும்பாகவும், பேசுபொருளாகவும் அவ்வப்போது நித்திரையில் விழிப்பது போன்று முஸ்லிம்கள் மத்தியில் கூறி வந்ததையும் அறியாமலில்லை. இந்நிலையில்தான் தற்போது சமயப் பாட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருந்தும், சமயப்பாடங்களை கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரிரியர்கள் தங்களது பணியிணை உரிய முறையில் மேற்கொளவில்லை என்ற விமர்சனங்களும் காலத்திற்குக் காலம் எழுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

முஸ்லிம் பாடசாலைகளும் மௌலவி ஆசிரியர்களும். 

இலங்கையில் உள்ள 10,612 பாடசாலைகளில் 888 பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகளாகும். 2013ஆம் ஆண்டின் கல்வி அமைச்சின் தரவுகளின் பிரகாரம், நாடளாவிய ரீதியில் இங்குகின்ற தேசிய மற்றும் மாகாண முஸ்லிம் பாடசாலைகளை மாகாண ரீதியாக நோக்குகின்றபோது மேல் மாகாணத்தில்; 62 பாடசாலைகளும் மத்திய மாகாணத்தில் 109 பாடசாலைகளும், தென்மாகாணத்தில் 36 பாடசாலைகளும் வடக்கு மாகாணத்தில் 52 பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் 341 பாடசாலைகளும் வடமேல் மாகாணத்தில் 133 பாடசாலைகளும் வட மத்திய மாகாணத்தில் 78 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 33 பாடசாலைகளும் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் 42 பாடசாலைகளும் இயங்குகின்றன.

இப்பாடசாலைகளில் மொத்தமாக 3,71,056 முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவற்றுடன் முஸ்லிம் பாடசாலைகள் அல்லாத பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையானது 61,291ஆகக் காணப்படுகிறது. இம்மாணவர்களுக்கு கல்வி போதிப்பதற்காக கல்விச் சேவையிலுள்ள 19,170 முஸ்லிம் ஆசிரியர்களில் 17,241 ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலகளிலும் 1,929 ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைகள் அல்லாத பாடசாலைகளிலும் கற்பித்தல் பணியில் உள்ளனர். இவர்களில் மௌலவி ஆசிரியர்களும் அடங்குவர்.

இவ்வாறான நிலையில், ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் மௌலவி ஆசிரியர் பற்றாக்குறையும் ஒன்றாகும். இப்பற்றாக்குறை தொடர்ச்சியாக இருந்து வரும் நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டில் 148 மௌலவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன. இருப்பினும் கடந்த ஏழு வருடங்களாக மௌலவி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மௌலவி ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சையின் படி வழங்கப்பட்ட நியமனங்களைத் தவிர வழங்கப்படாதவர்களுக்கான நியமனங்களை வழங்கக்கோரி கல்வி அமைச்சின் முன்னால் பாதிக்கப்பட்டோர் கவனயீர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டுள்ளமை முஸ்லிம் கல்விச் சமூகத்தில் பேசப்படும் விடயமாகவுமுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளிலும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் முஸ்லிம் பாடசாலைகள் அல்லாத பாடசாலைகளிலும் இஸ்லாம் பாடத்திற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. என்றாலும், முஸ்லிம் பாடசாலைகளிலும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்றும் பிற பாடசாலைகளிலும் இஸ்லாம் பாடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்ளது பணியினை உரிய முறையில் புரிகிறார்களா? அவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கு எந்தளவு பங்களிப்புச் செய்துள்ளது? விழும்பியங்களைப் பாதுகாக்க அவர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக அமைந்துள்ளனவா? என்ற கேள்வி தற்போது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுப்பப்படுகின்றன.

இக்கேள்விகளின் பின்னணியில் நியாயங்கள் காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. ஏனெனில், முஸ்லிம் பாடசாலைகள் அல்லாத சில பாடசாலைகளில் இஸ்லாம் பாடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள சில மௌலவி ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் பணியிலிருந்து ஓரமாகி அப்பாடசாலையின் வேறு பணிகளில் செயற்படுவதனால் அப்பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் இஸ்லாம் பாடத்தைக் கற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றமையை அம்மாணவர்களின் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால், இப்பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் இஸ்லாம் சமயப் பாட அடைவுகள் மாத்திரமின்றி பாடசாலைகளில் கற்றுக்கொள்ள வேண்டிய இஸ்லாம் தொடர்பான அடிப்படை அறிவையும் குறித்த காலத்திற்குள் கற்றுக்கொள்ள முடியாத நிலையுள்ளதாக இப்பெற்றோர்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்றனர் இப்பெற்றோர்களின் இவ்வாதங்கம் குறித்து கவனம் செலுத்தப்படுவது அவசிமாகும்.

முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்றும் முஸ்லிம் பாடசாலை அல்லாத பாடசாலைகளில் இஸ்லாம் பாடத்திற்கான வெற்றிடம் காணப்படுகிறது அவற்றை நிரப்பும்படி விண்ணப்பித்து அந்த வெற்றிடங்களை பூர்த்தி செய்து கொள்ளும் சில ஆசிரியர்கள் குறித்த இஸ்லாம் பாடத்தைக் கற்பிக்காது பாடசாலையின் வேறு பணிகளில் செயற்படுவதானது ஆசிரியர்துவத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதாக அமையாது. ஏனெனில் கற்பித்தல் என்பது தொழில் அல்ல. அது ஒரு அமானிதம். அந்த அமானிதத்தைச் சுமந்தவர்கள் இறைவனுக்கு அஞ்சி அமானிதத்தை பாதுகாப்பது அவர்களின் தார்மீகப் பொறுப்பாகும். ஏனெனில் சமயக் கல்வியினை போதிப்பதிலுள்ள தடங்கல்கள் ஆன்மீகச் செயற்பாடுகளிலிருந்து வளரும் சமுதாயத்தை திசைமாற்றியிருக்கிறது. நவீன விஞ்ஞானமும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒருபுறம் மனித குலத்திற்கு பயனளிக்கின்றபோதிலும் அதன் மறுபுறம் பாதக விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் மத்தியில் சமூக சமய விழுமியங்களை மறக்கச் செய்துள்ளது.

குறிப்பாக, பாடசாலைக் கல்வி வாழ்க்கைக் காலத்தில் கடைபிடித்து வாழ வேண்டி நல்ல விழுமியங்கள் மாணவர்களிடத்திலிருந்து நலிவடைந்து செல்வதை அதானிக்க முடிகிறது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற பாடசாலைகளின் மகுடவாசகங்களுக்கு ஏற்ப நடத்தல், அதிபர், ஆசிரியர்களுக்கு கட்டுப்படுதல், பாடசாலை பாரம்பரியங்களைப் பாதுகாத்தல், கலாசார விழுமியங்களை ஏற்று நடத்தல் போன்ற செயற்பாடுகளிலிருந்து ஒரு சில மாணவர்கள் விலகி நடப்பதுடன், அதிபர் ஆசிரியர்கள் மீது வன்முறையைப் பாவித்தல், அடித்தல், அவமானப்படுத்தல், பாடசாலைச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல், அவற்றைக் களவாடுதல், இச்செயல்களுக்கு உடந்தையாகச் செயற்படுதல் போன்ற ஒழுக்கமற்ற செயல்களிலும் ஒரு சில மாணவர்கள் ஈடுபடுவதை சமகாலத்தில் அவதானிக்க முடிகிறது.

இதற்கு முஸ்லிம் பாடசாலைகளும். முஸ்லிம் மாணவர்களும் விதிவிலக்கல்ல இத்தகைய மாணவர்களின் செயற்பாடுகள் ஏனைய மாணவர்களையும் அச்செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தூண்டுகின்றவாக அமைகிறது. இவை சமூக ஆரோக்கியத்திற்கு உகந்தாக அமையாது. இவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பைச் சுமந்தவர்கள் பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களே உள்ளனர். அதிலும், சமயக்கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களின் பகிபங்கு அளப்பெரியது.

உலக நாடுகள் பலவற்றில் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற வன்முறைகளுக்கும் அமைதியின்மைக்கும் காணரமாக அமைவது பாடசாலை மட்டத்தில் சமயக் கல்வியில் காணப்படும் குறைபாடு என கண்டறியப்பட்டுள்ளது. அதனால், அந்நாடுகளின் பாடசாலைகளில் சமயக்கல்வியை வினைத்திறன் மிக்கதாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறைகொள்கையில் நம்பிக்கையற்ற முதலாளித்துவ நாடுகளாக காணப்படும் ஜேர்மன், பிரான்ஸ் போன்றவை உலக அமைதியை சமயக் கல்வியால் மாத்திரமே ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்து பாடசாலைகளில் சமயக் கல்விக்கு புத்துயிர் அளித்து வருகின்றன.

ஆனால், நமது பாடசாலைக் கலைத்திட்டத்தில் சமயக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளபோதிலும் சமயக் கல்வியைத் தவிர ஏனைய பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சமயக் கல்வியின் முக்கியத்துவம் பெற்றோர்கள் மத்தியிலும் பாடசாலை மட்டத்திலும் சமூக மட்டத்திலும் முக்கியத்துவம் பெறாத நிலையில் காணப்படுகிறது. இந்நிலைமையினை சில மாணவர்களின் செயற்பாடுகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

சமூகத்தை மாசுபடுத்தக்கூடிய செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு சீர்மிய சமுதாயமொன்றை உருவாக்க வேண்டுமானால் பாடசாலை மட்டத்தில் சமயக் கல்விக்கான முக்கியத்தும் அளிக்கப்படுவது அவசியம். சிறந்த ஆன்மீக வழிகாட்டல்கள் ஊடாக விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அந்தப்பொறுப்பைச் சுமந்த சமயப் பாட ஆசிரியர்கள் குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள, நியமிக்கப்படவுள்ள மௌலவி ஆசிரியர்கள் இப்பொறுப்பை நிறைவேற்ற வேண்டியவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகும். ஏனெனில், ‘ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் தங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்’ என்பது நபி (ஸல்) அவர்களின் அமுத வாக்காகும்.;
விடிவெள்ளி -16.11.2017

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network