மாகாண சபை உறுப்புரிமை தொடர்பான கண்டி அமர்வில் மு.கா. வைக் காணவில்லை!


ஜஹங்கீர்

நேற்று 22.11.2017 புதன்கிழமை கண்டி மாவட்டச் செயலகத்தில் புதிய மாகாணசபைகளுக்கான எல்லைகளை இனம் காண்பது தொடர்பான அமர்வு நடைபெற்றது. இதற்கு எல்லை நிர்ணயக் குழுவினர் வருகை தந்திருந்தனர்.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை 50 க்கு 50 என்ற ஒழுங்கில் எதிர்காலத்தில் நடைபெற இருக்கின்ற தேர்தல் தொடர்பாக எல்லைகளை இனம் காண்பதற்கான நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அரசியல் வாதிகளும் வெகுஜன இயக்கத்தினரும் சமூக ஆர்வலர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.

அமைச்சர் ஹலீம், மாகாண சபை உறுப்பினர்களான ஜெய்னுலாப்தீன் (லாபீர் ஹாஜியார்) இதாயத் சத்தாhர், முத்தலிப் ஹாஜியார், ஆகியோர் அங்கு வருகை தந்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மலையக முற்போக்கு முன்னணி என்று பல அரசியல் செயல்பாட்டுக்காரர்கள் அங்கு எல்லை நிர்ணயக் குழுவினர் முன் தங்களது சாட்சிகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

ஆனால் முஸ்லிம் சமூகத்தின் நலன் பேணுவதற்காக கட்சி அமைத்திருப்பதாக சொல்லிக் கொள்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எவரும் வருகை தந்திருக்கவில்லை. உள்ளுராட்சி மன்ற எல்லைகள் நிர்ணயக்கின்ற போது அது பற்றி எந்த நடவடிக்கைகளையும் எடுக்காதவர்கள், இந்த முறையும் மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயக் குழு முன் எந்த ஆலோசனைகளையோ கோரிக்கைகளையோ முன்வைக்க வில்லை என்பது இன்று கண்டியில் நடந்த இந்த அமர்வில் கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் மேடைகளில் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கு தாம் கட்சி அமைத்திருப்பதாக அவர்கள் முழங்குவார்கள்.

சமூக நலனுக்கு கட்சி வைத்திருப்பதாகக் கூறுகின்றவர்கள் தீர்க்கமான இந்த நேரத்தில் ஏன் இப்படிப் பொடுபோக்குடன் நடந்து கொள்கின்றார்கள் என்று புரியவிலை. கணிசமான முஸ்லிம்கள் வாழ்கின்ற கண்டி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் என்று வைத்திருக்கும் மு.கா. தமது பிரதிநிதித்துவம் தொடர்பில் அக்கரையில்லாமல் இருப்பது ஏனோ தெரியவில்லை.

இது பற்றி நாம் கேள்வி எழுப்பினால் எதிர்கலத்தில் நாம் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம் என்று கூறினாலும் சமூகம் ஆச்சரியப்படத்தேவையில்லை. இது அவர்கள் அரசியல் ஸ்டைல் போலும்.!