சாய்ந்தமருது மக்கள் போராட்டம் கல்முனைக்குடிக்கு எதிரானதல்ல


சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. எங்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து கடைசியில் காலைவாரிவிட்ட அரசியல்வாதிகளின் நாடகமே . சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு ஒதுக்கீடு செய்திருந்த 15 இலட்சம் ரூபாய் நிதியினை உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை ஏற்பதில்லை என சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் ( 3 ) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற மக்கள் பணிமனை திறப்பு விழாவில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசியல் கட்சியின் செயற்பாடுகளையும் சாய்ந்தமருது பிரதேசத்தில் தவிர்த்துக் கொள்வதுடன் அரசியல்வாதிகளினால் ஒதுக்கப்படும் எந்தவொரு நிதியினையும் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவில் செலவிடுவதில்லை என்பதோடு எதிர்காலத்தில் சகலவிதமான அரசியல் செயற்பாடுகளையும் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படும்படியாக மக்கள் தொடர்ந்தும் தமது பணிகளை தொடர்வதற்காகவே இந்த மக்கள் பணிமனை திறந்து வைக்கப்படுவதாக பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.
சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை போராட்டமானது எமது சகோதரர்களான கல்முனைக்குடி மக்களுக்கு எந்தவித்திலும் எதிரானது அல்ல. ஆரம்பத்திலேயே சாய்ந்தமருதிற்கென தனியான பிரதேச சபை வழங்க முடியாது, அதில் பல பிரச்சினைகள் உண்டு, இந்த முயற்சியை கைவிடுங்கள் என்று அரசியல்வாதிகள் கூறி இருந்தால் இந்த நிலைமை இவ்வளவு தூரத்திற்கு சென்றிருக்க மாட்டாது .
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு ஒதுக்கீடு செய்திருந்த 15 இலட்சம் ரூபாய்களையும் உள்ளுராட்சிசபை கிடைக்கும் வரைக்கும் ஏற்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.