த.தே.கூ. – மு.கா இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின் உடனடியாக வெளிப்படுத்துக! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

த.தே.கூ. – மு.கா இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின் உடனடியாக வெளிப்படுத்துக!

Share This

வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் கிழக்கில் ஏற்படும் ஆபத்து குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசியலமைப்பு பேரவையில் கடந்த நவம்பர் 8ஆம் திகதி உரையாற்றியிருந்தார். இதனை சிலர் திரிவுபடுத்தி ஊடக அறிக்கைகள் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் யாழ் மாவட்ட த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்  சரவணபவன் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையொன்றை கோடிட்டுக் காட்டி இராஜாங்க அமைச்சர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு  குறிப்பிட்டுள்ளார். 

அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது:- 

தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் புரிந்துணர்வையும் - ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். தலைவர் அஷ்ரபின் பாசாறையில் வளர்ந்த நாங்கள் அந்த விடயத்தில் அதிக கரிசனையும் - அவதானமும் கொண்டுள்ளோம்.  

எனினும், எமது சமூகத்தின் உரிமைக்காக குரல் எழுப்பும் போது அதனை பிரிவினைவாத கண்ணோட்டத்தில் சிலர் பார்க்கின்றனர். நான் அண்மையில் அரசியலமைப்பு பேரவையில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றியே பேசியிருந்தேன். எனக்கு அந்த அனுபவம் இருப்பதாலும் கிழக்கு மக்களின் உணர்வுகளைத் தெரிந்தமையாலுமே நான் அவ்வாறு பேசியிருந்தேன். ஆனால், எனது உரையை சில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் திரிவுபடுத்தி மக்களை குழப்ப முற்பட்டிருந்தன.  

என்ன ஏது என்று பார்க்காமலேயே ஊடகங்களில் வெளியான தலைப்புகளை வைத்து சிலர் அறிக்கை வெளியிட்டுள்ளமை சிறுபிள்ளைத்தனமானது. யாழ் மாவட்ட த.தே.கூ. எம்.பி சரவணபவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதும் அதில் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்கப்பட வேண்டும் எனவும் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாக” குறிப்பிட்டிருந்தார். 

அவர் குறிப்பிட்டது உண்மையெனில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் அவ்வாறு உடன்பாடு காணப்பட்டுள்ளதா? அந்த உடன்பாடு என்ன? முஸ்லிம் அலகு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உடன்பட்டுள்ளதா? அந்த அலகில் உள்ளடங்குகின்ற பிரதேசங்கள் என்ன? அலகின் அதிகாரங்கள் என்ன? போன்ற விடயங்களை இரு கட்சித் தலைமைகளும் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நாங்கள் வடகிழக்கு இணைப்பு விடயத்தில் நிதானமாகவும் - அவதானமாகவும் பேசுவோம். 

நான் வடக்கு கிழக்கு இணைவதற்கே எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். ஆனால் கிழக்கில் முஸ்லிம் மாவட்டம் அல்லது முஸ்லிம் தனியலகு உருவாகுவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பும் - முஸ்லிம் காங்கிரஸும் இதனை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளமை எனக்கோ, முஸ்லிம் சமூகத்துக்கே தெரியாது. இரு தரப்புக்கும் இரகசிய உடன்பாடுகள் இருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தி அனைவரையும் தெளிவுபடுத்தவும் வேண்டும். 

இதேவேளை, வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்கியுள்ளார்களாயின் அவர்கள் யார்? எந்த கட்சி? எந்த அமைப்பு? எந்த முஸ்லிம் எம்.பி.? அதற்கு ஆதரவு வழங்கியுள்ளார் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். 

இவ்வாறான இரகசிய உடன்பாடுகள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. நான் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை வைத்தே இது தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தேன். 

எனது நாடாளுமன்ற உரையில் ஏதேனும் தவறுள்ளதாக சரவணபவன் எம்.பி. உணர்ந்திருப்பாராயின் அதற்கு நாடாளுமன்றத்திலேயே மறுப்பளித்து பதில் வழங்கியிருக்க வேண்டியது அவரது பொறுப்பாகும்.  மாறாக ஊடக அறிக்கை வெளியிடுவதால் எதனையும் சாதிக்க முடியாது. என்றாலும் நீங்கள் எனது நல்ல நண்பர் என்ற ரீதியில் அதற்கான கௌரவத்தை வழங்கி உங்களது ஊடக அறிக்கைக்கு நான் பதில் அளித்துள்ளேன். – என்றார். 

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE