பாதுகாப்பு பிரிவினர் முஸ்லிம்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு நல்லாட்சியில் சட்டம் ஒழுங்கு உள்ளதுகாலி கிந்தோட்டையில் முஸ்லிம்களின் வீடுகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்த வேண்டும் என பானதுறை பிரதெச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது……

காலி கிந்தோட்டையில் சில நாட்களாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த தாக்குதலின் பின்னணியில் இவ்வரசு உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. மிகப் பெரிய பிரச்சினை சென்று கொண்டிருக்கிறது என நன்கு தெரிந்தும் நேற்று மாலை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.சுமூக நிலை தோன்றியதை உறுதிய செய்ய முன்பே வாபஸ் பெறப்பட்டமை இனவாத செயலை செய்வோருக்கு வழி விடும் வகையில் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. இதனை இவ்வாட்சியாளர்களால் மாத்திரமே செய்ய முடியும்.

தற்போதெல்லாம் எது இடம்பெற்றாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை குற்றம் சுமத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனையும் அவரது தலையில் போட்டுவிட முயற்சிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இந்த பிரச்சினையின் போது வீடுகளை பாதுகாப்பு பிரிவினரே முன்னின்று உடைத்ததாக அங்குள்ளவர்கள் பகிரங்கமாகவே கூறுகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானும் பாதுகாப்பு படையினரின் செயற்பாடுகளில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இன்று இராணுவத்தினரே இச் செயலை செய்கின்றார்கள் என்றால் இதன் பின்னால் அரச ஆதரவு இருக்க வேண்டும்.

இதுவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் நடந்திருந்தால், இதனை முன்னாள் ஜனாதிபதியே திட்டமிட்டு செய்வதாக கூறியிருப்பார்கள். ரதுபஸ்வல பகுதியில் ரானுவம் துப்பாக்குச்சூடு நடத்திய போது மஹிந்தவே அங்கு சென்று துப்பாக்கி சூடு நடத்தியது போல விமர்சித்தார்கள்.

இன்று இப்படி நடந்தும் யாருமே இவ்வரசை குற்றம் சுமத்துவதாக இல்லை. முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரும் அரசின் நடவடிக்கையில் பல குறைபாடுகள் இருப்பதை நன்கு அறிந்தும் அரசியல் இலாபங்களை கருத்தில் கொண்டு அரசின் செயற்பாட்டை பாராட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இந் நிலையை எமது அரசியல் வாதிகள் தொடர்வாக இருந்தால் எந்தவித சிறு அச்சமுமின்றி மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. இந் நேரத்தில் இவ்வரசுக்கு அழுத்தம் வழங்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதுவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உதவும்.