தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் பெண் அமைப்பாளர்கள் மும்முரம் - கட்டுரை


 - விருட்சமுனி -

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களுடன் அரசியல் கட்சிகள், சுயதீன அமைப்புகள் பலவும் தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களை நோக்கி படை எடுத்து வர தொடங்கி உள்ளன. வேட்பாளர்களில் 25 சதவீதமானோர் கட்டாயம் பெண்களாக இருக்க வேண்டும் என்கிற சட்ட ஏற்பாடு காரணமாக பெண்களின் பங்கும், பங்களிப்பும் வருகின்ற தேர்தலில் மிக அதிக இருக்கும் என்பதுடன் தேர்தல் வெற்றிகளின் பங்காளிகளாக நிச்சயம் பெண்களும் இருப்பார்கள் என்பது திண்ணம் ஆகும். இந்நிலையில் பெண் அரசியல் செயற்பாட்டாளர்களின் விஜயங்கள் அமளி துமளியாக இடம்பெற்று வருகின்றன என்பது கவனத்துக்கு உரிய விடயம் ஆகும்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முதன்முதல் அரசியலில் ஈடுபட்ட பெண் ஆயிஷா ரவூப் என்பவர் ஆவார். 1947 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலில் கொழும்பு மத்தி தொகுதியில் போட்டியிட்டார். இவர் செல்வமும், செல்வாக்கும் மிக்க இந்திய குடும்பம் ஒன்றில் 1917 ஆம் ஆண்டு பிறந்தவர். பட்டதாரி. இலங்கை வர்த்தகரான ரவூப்பை 1943 ஆம் ஆண்டு திருமணம் செய்து இலங்கையில் குடியேறினார். சேர் ராசிக் பரீத்தின் வேண்டுகோளை ஏற்று கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முதலாவது அதிபராக அக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட தினத்திலேயே 1946 ஆம் ஆண்டு பதவியேற்றார். இவர் தேர்தலில் போட்டியிட களம் இறங்கியபோது பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. பெண்ணாக பிறந்தவள் வீதிக்கும், மேடைக்கும் வராமல் வீட்டுக்குள் அடங்கி, ஒடுங்கி கிடக்க வேண்டும் பல அதட்டல் குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஆயிஷா ரவூப் 1949 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும், 1952 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை கொழும்பு மாநகர சபை உதவி மேயராகவும் பதவிகள் வகித்தார்.
முஸ்லிம்களின் அரசியலை பொறுத்த வரை ஜே. வி. பி மூலமாக பாராளுமன்றத்துக்கு பிரவேசித்த அஞ்சான் உம்மா, அமைச்சரவை அமைச்சராக விளங்கிய பேரியல் அஷ்ரப் ஆகியோரே அரசியலின் உச்சத்தை தொட்ட பெண்கள் ஆவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், இவரின் கணவருமான எம். எச். எம். அஷ்ரப்பின் அகால மரணத்தை தொடர்ந்து அரசியலில் பேரியல் அஷ்ரப் பிரவேசிக்க நேர்ந்தபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக வர பகீரத பிரயத்தனங்கள் செய்து தோல்வி அடைந்த நிலையில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியாக வந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சராக விளங்கினார் என்பது யாவரும் அறிந்ததே. அஞ்சான் உம்மா, பேரியல் அஷ்ரப் ஆகிய இருவரும் இப்போது அரசியலில் அஞ்ஞாதவாசம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் தலைமைத்துவத்தை இஸ்லாம் ஏற்கவில்லை என்று அன்று அவர்கள் அரசியலில் ஈடுபட்டபோது சொல்லப்பட்ட வாதம் இன்றும் வலிமையானதாகவே இருக்கின்றது.
நிலைமை இவ்வாறு இருக்க உள்ளூராட்சி தேர்தல் குறித்த கதைகள் அடிபட தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே முல்லைத்தீவை சேர்ந்த ஜான்சிராணி சலீம் என்பவரை தேசிய காங்கிரஸின் மகளிர் பொறுப்பாளராகவும், வட மாகாண அமைப்பாளராகவும் ஏ. எல். எம். அதாவுல்லா நியமித்தார். இந்தியாவின் சுதந்திரத்துக்காக வெள்ளையர்களுடன் எதிர்த்து போராடிய வீர பெண் ஜான்சிராணி, அவரின் வாகனம் குதிரை என்கிற உள்ளுணர்வு உந்தியதாலேயே ஜான்சிராணி என்கிற பெயரை உடைய வன்னியை சேர்ந்த பெண்ணுக்கு பதவிகளை அதாவுல்லா வழங்கினார் என்று ஊடகங்கள் அப்போது செய்திகள் வெளியிட்டன. மகளிர் பொறுப்பாளர் என்கிற பொறுப்புக்கு மேலதிகமாக வட மாகாண அமைப்பாளர் என்கிற பதவியை இவருக்கு வழங்கியதில் அதாவுல்லாவின் அரசியல் சாமர்த்தியம் இருப்பதாக அவதானிகள் பேசி கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு நெருக்கமான உறவு முறையை சேர்ந்தவர் ஜான்சிராணி. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலம் சென்ற நூர்தீன் மசூர் ஹாஜியாரின் அரசியல் பாசறையில் வளர்ந்த இவர் அரசியலில் றிசாத் பதியுதீனுக்கு பரம விரோதி ஆவார். மசூர் ஹாஜியார் தேர்தல் கேட்டபோது வன்னியில் றிசாத் பதியுதீனின் கோட்டைகள் என்று அறியப்படுகின்ற பல பிரதேசங்களுக்கும் நேரில் சென்று பிரசாரங்களை முடுக்கி விட்டு மசூர் ஹாஜியாரின் தேர்தல் வெற்றிக்கு காத்திரமான பங்களிப்புகளை வழங்கி இருந்தார். தேர்தல் வெற்றியை தொடர்ந்து மசூர் ஹாஜியார் இவரின் வீட்டுக்கு நேரில் தேடி சென்று நன்றி அறிதலை வெளிப்படுத்தி இருந்தார். மசூர் ஹாஜியாரின் மரணத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவரை தேர்தல் காலங்களில் மாத்திரம் கறிவேப்பிலையாக பயன்படுத்தி கொண்டது. இந்நிலையில் ரவூப் ஹக்கீமை தலைவராக கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு சரியான பாடத்தை உரிய தருணத்தில் பயன்படுத்த வேண்டும் என்று கறுவி கொண்ட இவர் சில காலம் அரசியலில் ஒதுங்கி இருந்த நிலையில் தேசிய காங்கிரஸ் மூலமாக மறுபிறவி எடுத்து உள்ளார். பதவி எடுத்த கையோடு தலைவர் அதாவுல்லாவை வன்னிக்கு இரு தடவைகள் வர அழைத்து பிரமாண்ட மக்கள் சந்திப்புகளை நடத்தினார். இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தேசிய காங்கிரஸின் பாலமுனை பிரகடன பேரணியில் கலந்து கொண்ட இவர் வன்னி பிரகடன பேரணியையும் தேசிய காங்கிரஸ் நடத்த வேண்டும் என்று தலைவரை கோரி உள்ளார். இவரிடம் றிசாத் பதியுதீன் சம்பந்தப்பட்ட பல இரகசியங்கள் இருக்கின்றன என்று காற்று வாக்கில் கதைகள் உலாவுகின்றன. ஆனால் அரசியலில் மீண்டும் ஈடுபட தொடங்கி மிக குறுகிய காலத்துக்கு உள்ளாகவே அதீத சர்ச்சைகளுக்கு அதிலும் தனிப்பட்ட வகையிலான தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்ளார். சமூக இணைப்பு தளங்கள் மூலமாக பாலியல் இம்சைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார் என்று பொலிஸ் முறைப்பாடுகள் மேற்கொண்டுள்ள இவர் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது, பெண் சாதிக்க பிறந்தவள் என்பதை வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் வன்னி களத்தில் நிரூபித்து காட்டுவார் என்று அறைகூவல் விடுத்து ஊடக அறிக்கை வெளியிட்டு உள்ளார். தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா அரசியல் அதிகாரம் இழந்து காணப்படுகின்ற தற்போதைய நிலைமையில் இவருடன் இணைந்துள்ள ஜான்சிராணி உண்மையிலேயே விசுவாசத்துக்கு உரியவராகத்தான் இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவருடைய அவதானத்தை ஒரு முறை தெரிவித்து இருந்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் மிக முக்கிய பொறுப்புகளை அண்மை காலம் வரை வகித்திருந்த ஒருவரான அன்வர் முஸ்தபா கடந்த வாரம் எம்முடன் பேசியபோது தேசிய காங்கிரஸின் வன்னிக்கான விஸ்தரிப்பும், தொகுதிவாரி தேர்தல் முறைமையின் வருகையும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வருங்கால தோல்விகளுக்கு கட்டியங்கள் கூறுகின்றன என்றார். ஜான்சிராணியிடம் றிசாத் பதியுதீன் குறித்து உள்ள பல இரகசியங்களையும் அவர் தேர்தல் காலத்தில் வெளியிடுவார் என்று சொல்லி அவரின் ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.
கடந்த பொது தேர்தலில் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து முதன்முறையாக போட்டியிட்டதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான வாக்குகளை இரண்டாக உடைத்து அதாவுல்லாவின் பாராளுமன்ற பிரவேசத்தை தடுத்து நிறுத்தியது. அம்பாறை மாவட்டத்துக்குள் புகுந்து றிசாத் பதியுதீன் நடத்திய இந்த அதிரடிக்கு இதே பாணியில் பதிலடி கொடுக்கின்ற வகையில்கூட தேசிய காங்கிரஸின் வடக்குக்கான குறிப்பாக வன்னிக்கான விஸ்தரிப்பை நோக்க கூடியதாக இருக்க பதிலுக்கு றிசாத் பதியுதீனும் அதாவுல்லாவின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகின்ற அக்கரைப்பற்றுக்குள் கால் பதிக்க பகீரத முயற்சிகளை முடுக்கி உள்ளார். அதாவுல்லா தேசிய காங்கிரஸுக்கு பெண் அமைப்பாளர் ஒருவரை நியமித்ததை பிரதி எடுத்து றிசாத் பதியுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவுக்கு தேசிய ஒருங்கிணைப்பாளர் என்று கலாநிதி ஹஸ்மியா உதுமாலெப்பை என்பவரை நியமித்ததோடு கடந்த வாரம் இவரை கிழக்கு மாகாணத்துக்கு குறிப்பாக அக்கரைப்பற்றுக்கு அனுப்பி அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி, ஆலையடிவேம்பு ஆகிய இடங்களில் மகளிர் பிரிவு கிளைகளை அங்குரார்ப்பணம் செய்து உள்ளார். அக்கரைப்பற்றின் தமிழ் பிரதேசமான ஆலையடிவேம்பில் மகளிர் பிரிவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைத்ததன் மூலம் தமிழ் பெண்களை இலக்கு வைத்து உள்ளது. அதாவுல்லா தேசிய காங்கிரஸுக்குள் அவருடைய கொள்கைகளை ஏற்று கொண்டுள்ள ஏனைய இனத்தவர்களை உள்ளீர்ப்பதில் அண்மைய காலங்களில் பேரார்வம் காட்டி வருகின்றார். இதனால்தான் தேசிய காங்கிரஸின் இளைஞர் அணியில் சிங்கள பிரிவை ஸ்தாபித்து இப்பிரிவின் பொறுப்பாளராக சிங்கள இளைஞன் ஒருவரை நியமித்து உள்ளார். அதே போல தேசிய காங்கிரஸின் இளைஞர் அணியில் தமிழ் பிரிவை ஸ்தாபித்து அவருடைய அரசியல் கொள்கைகளை ஏற்று கொண்ட தமிழ் இளைஞன் ஒருவரை பொறுப்பாளராக நியமிக்க விரும்புகின்றார் என்று தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை அண்மையில் சந்தித்து பேசியபோது தெரிவித்து உள்ளார். தேசிய காங்கிரஸ் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை கேட்டு சென்றிருக்கவில்லை, அந்த நோக்கம் இனியும் தேசிய காங்கிரஸுக்கு கிடையாது என்று இவர் கூறி இருக்க றிசாத் பதியுதீனோ வன்னியில் அவருடைய இருப்பை தக்க வைத்து கொள்ள தமிழ் மக்களின் வாக்குகளையும் நம்பி இருப்பது போல அதாவுல்லாவுக்கு எதிராக அக்கரைப்பற்றில் கால் ஊன்ற தமிழ் மக்களின் வாக்குகளையும் கேட்க தயாராகி உள்ளார். ஆலையடிவேம்பில் மகளிர் பிரிவை இவர் அமைத்து இருக்க கூடிய நோக்கங்களில் இது பிரதானமான ஒன்று ஆகும். இன்னொரு பிரதான நோக்கம் எதிர்வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட பெண் வேட்பாளர்கள் அதிகம் தேவைப்படுகின்ற நிலையில் தமிழ் பெண்களை கணிசமான அளவில் உள்வாங்கி வேட்பாளர் பட்டியலை நிரப்ப எத்தனிக்கின்றார் என்பதாகும். முஸ்லிம் பெண்களை கணிசமான அளவில் உள்ளீர்க்க முடியாமல் போனதாலேயே தமிழ் பெண்களை இவர் நாட நேர்ந்து உள்ளது என்றும் மறுபுறத்தில் கூறலாம். வருகின்ற உள்ளூராட்சி தேர்தலுக்கு மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட வேண்டிய வேட்பாளர்களுக்கு மேலதிகமாக நியமன வேட்பாளர்களையும் வேட்பாளர் பட்டியலில் பெயர் குறிப்பிட வேண்டி இருப்பதால் நியமன வேட்பாளர்களாக தமிழ் பெண்களை கணிசமான அளவில் பெயர் குறிப்பிடுவதன் மூலம் வேட்பாளர் பட்டியலை இலகுவாக நிரப்பி கொள்கிற அதே நேரத்தில் அவர்களுக்கு பதவிகளை வழங்காமல் நழுவி கொள்கின்றபோது அது ஒரு பிரச்சினையாக எழ போவதே இல்லை என்று இவர் நம்புகின்றார் என்று விளங்குகின்றது. மேலும் அதாவுல்லாவை ஆலையடிவேம்பு தமிழர்கள் மீது கோபமும், குரோதமும் கொள்ள வைக்கின்ற சூழ்ச்சியை இவர் முன்னெடுக்கின்றார் என்றும் சந்தேகிக்க வேண்டி உள்ளது. எது எப்படி இருந்தாலும் தேசிய காங்கிரஸின் ஜான்சிராணி சலீம் ஏற்படுத்திய பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஹிஸ்மியா உதுமாலெப்பையால் உருவாக்க முடியாமல் போய் விட்டது.
தூய முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் அணி இன்னமும் வெளி கிளம்பவில்லை. ஆயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிரான பிரசார பீரங்கிகளாக பெண் வேட்பாளர்களை உச்ச பட்ச நிலையில் பயன்படுத்த பஷீர் சேகுதாவூத் திட்டமிட்டு உள்ளார் என்று கூறப்படுகின்றது. கடந்த காலங்களில் பாலியல் வன்செயல்களால் பாதிக்கப்பட்டு இருக்க கூடிய பெண்கள் பலரையும் களத்தில் இறக்குகின்ற வியூகம் திட்டம் தீட்டப்படுவதாக அறிய கிடைக்கின்றது. பஷீர் வைத்திருப்பதாக கூறப்படுகின்ற சீ. டிகளை போலவே இப்பெண்களின் பரப்புரைகளும் அதிக பரபரப்புகளை ஏற்படுத்தும் என்று நம்ப முடியும்.
ஆயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் காங்கிரஸ் குறித்து எந்தவொரு ஆரவாரத்தையும் அவதானிக்க முடியாது உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் காங்கிரஸ் தலைவியாக மு. கா தலைவர் ரவூப் ஹக்கீமின் மனைவி ஷனாவே அரசியல் பிரவேசம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று தூய முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் நக்கலாக கூறுகின்றனர். ஆயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் குடும்ப ஆட்சியை ஸ்தாபித்த பிழையை தலைவர் ஹக்கீம் மீண்டும் செய்ய மாட்டார்கள் என்று இவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையில் முஸ்லிம்கள் அடங்கலாக இத்தேர்தலில் நேரடியாக போட்டியிட 37 பெண்களை அம்பாறை மாவட்டத்தில் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், எந்த கட்சிகள் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு கோருகின்றபோது அந்த அந்த கட்சிகளுக்கு பலமான பெண் வேட்பாளர்களை வழங்க உள்ளதாகவும் வேள்வி அமைப்பு ஊடகவியலாளர் மாநாடு வைத்து பகிரங்க அறிவிப்பு செய்து உள்ளது. இவ்வமைப்பின் உப தலைவராக முஹைதீன் றிலிஃபா பேகம் உள்ளார்.

படங்கள் அதாவுல்லாவின் பெண் அமைப்பாளர், றிசாத்தின் அமைப்பாளர், ஹக்கீமின் மனைவி, வேள்வி அமைப்பின் உப தலைவி என்கிற ஒழுங்கில் அனுப்பப்பட்டு உள்ளன.
தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் பெண் அமைப்பாளர்கள் மும்முரம் - கட்டுரை தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் பெண் அமைப்பாளர்கள் மும்முரம் - கட்டுரை Reviewed by NEWS on November 12, 2017 Rating: 5