Dec 2, 2017

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25ஆம் ஆண்டுகள் கடந்துள்ளன! நினைவுப்பதிவு


வரும் டிசம்பர் 6, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது. இது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான தினமாகும்.  இடிக்கப்பட்டது ஏதோ 16ஆம் நூற்றாண்டு கட்டப்பட்ட மசூதி மட்டுமல்ல, அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் நம் நாட்டின் மதச்சார்பற்ற குடியரசின் மாண்புகளுக்கும் நேரடியாக விடப்பட்டுள்ள சவாலுமாகும்.

1992  டிசம்பர் 6 ஆம் நாளை இந்துத்துவா சக்திகள் தங்களுடைய அரசியல் அதிகாரத்திற்காக   துவங்கிய நாளாகவும் பார்த்திடலாம். 25 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த சக்திகள் தில்லியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்றன.

அந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையிலான மதவெறியர்கள் மேற்கொண்ட கபடத்தனமான நடவடிக்கைகள் என்ன? தாங்கள் அயோத்தியில் கர சேவகர்கள் மூலமாக மேற்கொள்ளும் எந்தவிதமான நடவடிக்கையும் அங்கேயுள்ள மசூதியின் கட்டமைப்பிற்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று உச்சநீதிமன்றத்திற்கு உறுதிமொழி அளித்திருந்தனர். அந்த உறுதிமொழிக்கு அவர்கள் துரோகம் இழைத்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங், எண்ணற்ற வாக்குறுதிகளை நீதிமன்றத்திற்கு அளித்திருந்தார்.  “இப்போதுள்ள நிலை எந்தவிதத்திலும் மாற்றியமைத்திட எங்கள் அரசாங்கம் அனுமதிக்காது” என்று அவர் கூறினார்.  அந்த சமயத்தில் மதவெறியர்களின் நடவடிக்கைகளை உய்த்துணர்ந்திருந்ததன் காரணமாக, அவசர அவசரமாக தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டவேண்டும் என்று அழைப்பாணை அனுப்பப்பட்டு,   பாஜக தலைவர்களின் பங்கேற்பு இன்றி ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானமானது,   அரசமைப்புச் சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் உயர்த்திப்பிடித்திட, தேவையான நடவடிக்கைகளை அனைத்தையும் எடுத்திட, பிரதமருக்கு அதிகாரம் அளித்தது.

மசூதியைச் சுற்றி தடையாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான கர சேவகர்கள், சம்பவத்தின் முன்தினம் அங்கே திரண்டனர்.  மசூதிக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக,  அந்தசமயத்தில் 20 ஆயிரம் மத்திய காவல்படையினர் அனுப்பப்பட்டிருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டமான டிசம்பர் 6 அன்று மாநில அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கத் தவறியபோது, தாங்கள் செயல்படுவதற்கு எவ்விதமான  ஆணையையும் மத்திய அரசிடமிருந்து மத்திய காவல்படையினர் பெறவில்லை.

உத்தரப்பிரதேச மாநில அரசின் ஆதரவுடன் ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்துத்துவா சக்திகள்.  மத்திய அரசின் உத்தரவுகளை மீறவும், மதச்சார்பற்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் நாணங் கெட்டமுறையில் தூக்கி எறியவும்,  துணிந்தனர்.  இந்தப் பிரச்சனை என்பது, தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது என்பது மட்டுமல்ல, அதன்மூலம் தங்கள் அரசியல் அணிசேர்க்கையைத் தொடங்குவது என்பதுமாகும். 1989இல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் பாலம்பூரில் நடைபெற்றபோது அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து இதனை நன்கு அறிய முடியும். அயோத்தியில் தாவாவுக்கு உட்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று அத்வானி நடத்திய ரத யாத்திரைதான் நாட்டின் பல பகுதிகளில் ரத்த ஆறு ஓடக் காரணமாக இருந்தது. மசூதியை இடிப்பது என்பது அவர்களின் அடுத்த கட்டமாக இருந்தது. இவற்றின் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் உருவாகியிருந்த ராமர் அலை மற்றும் மக்கள் மத்தியில் உருவாகியிருந்த மதவெறி ஆகியவற்றின் காரணமாக 1991இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்றது. இந்தக் காலம் முழுவதுமே ஆர்எஸ்எஸ்-விசுவ இந்து பரிசத் ஆட்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பகிரங்கமாகவே பேசி வந்தனர்.

அயோத்தியில் ஆர்எஸ்எஸ் தலைமையிலான கும்பல்கள் இவ்வாறு பாபர் மசூதியை இடித்ததன் மூலம் இரத்தக்கறை படிந்த செயலை செய்து முடித்ததென்றால், மத்தியில் ஆட்சியிலிருந்த நரசிம்மராவ் அரசாங்கத்தின் பங்களிப்போ மிகவும் வெறுக்கத்தக்கவிதத்தில் இருந்தது. இத்தகைய ஆர்எஸ்எஸ் கூடாரத்தின் அடாத செயலைத் தடுத்துநிறுத்திடக்கூடிய விதத்தில் எதுவும் செய்திடக்கூடாது என்பதில்  பிரதமர் நரசிம்மராவ் உணர்வுபூர்வமாக உறுதியாக இருந்தார். மசூதியின் பிரதான மூன்று மாடங்கள் இடித்துத்தரைமட்டமாக்கப்பட்ட பின்னரும்கூட, மத்திய அரசு இதில் தலையிடவில்லை என்பதோடு, நடவடிக்கை எடுத்திட மத்திய காவல் படையினரைக் கேட்டுக்கொள்ளவும் இல்லை. டிசம்பர் 6க்கு முன்னர், அயோத்தியில்  மசூதியை இடித்துத் தரைமட்டமாக்குவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு  கொண்டிருக்கின்றனர் என்றும், அதனைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும்  மத்திய உளவு ஸ்தாபனத்திடமிருந்தும், முஸ்லீம் சமூகத்தினரிடமிருந்தும் கோரிக்கைகள் வந்தபோதும்கூட, நரசிம்மராவ் அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, அவர், தன்னிடம் அந்த இடத்தில் வெறும் பூஜை மட்டுமே நடத்தப்படும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் உறுதி  அளித்திருப்பதாக மட்டும் கூறிக்கொண்டிருந்தார்.

இதில் மேலும் மிகவும்  அதிர்ச்சியளிக்கக்கூடிய சங்கதி என்னவெனில், மசூதி இருந்த இடத்தில் அது இடிக்கப்பட்டு ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே தற்காலிகக் கோவில் (makeshift temple) ஒன்று கட்டப்பட்டதாகும். டிசம்பர் 7 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட இருக்கிறது என்று தெரிந்தும்கூட இவ்வாறு தற்காலிகக் கோவில் கட்டுவதற்கு அங்கே அனுமதிக்கப்பட்டது. தற்காலிகக் கோவிலை அப்புறப்படுத்துவதற்கு மத்திய அரசாங்கம் எதுவுமே செய்திடவில்லை.   

அதுமட்டுமல்ல. 1993 ஜனவரியில் மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அயோத்தி சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இச்சட்டமானது, தற்காலிகக் கோவிலை சட்டபூர்வமாக்கியதுடன், இது தொடர்பாக இறுதித் தீர்வு வரும்வரை அது நீடித்திடும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டித்தரப்படும் என்கிற முந்தைய உறுதிமொழி கைவிடப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக. இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றமும் 3:2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் ஏற்றுக்கொண்டு ஏற்பளிப்பு அளித்துள்ளது. இவ்வாறு நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் மிகவும் மோசமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள சமயத்தில், அவற்றைப் பாதுகாக்க வேண்டிய மத்திய அரசும், அதன் நிர்வாக அமைப்புகளும் – அரசாங்கமும், நீதித்துறையும் – அவற்றை முறியடித்திடத் தீர்மானகரமான முறையில் செயல்படத் தவறிவிட்டன.  காங்கிரஸ் அரசாங்கம், தன்னுடைய முகஸ்துதி மற்றும் ஊசலாட்டம் போன்ற கொள்கைகளின் காரணமாக,  இந்துமதவெறியர்களுடன் சமரசம் செய்துகொண்டது.  

அலகாபாத் உயர்நீதிமன்றமானது அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை மூன்று பகுதிகளாகப்பிரித்தும், அதில் ஒரு பகுதி மட்டுமே முஸ்லீம்கள் பெற முடியும் என்றும்  அளித்திட்ட குறைபாடுகள் கொண்ட தீர்ப்புரைக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்க இருக்கிறது. இதற்கான  விசாரணை உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 5 அன்று தொடங்குகிறது. நீதிமன்றத்தை தங்கள் செல்வாக்கிற்குள் கொண்டுவருவதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. உடுப்பியில், விசுவ இந்து பரிசத் சார்பில் நடைபெற்ற தர்ம சன்சாத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத், மசூதி இருந்த இடத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்படும் என்று மீளவும் வலியுறுத்திப் பேசியிருக்கிறார். ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் என்கிற சாமியார் இந்துத்துவா சாமியார்கள் சொல்வதைப்போல பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பான பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ளலாம் என்று மிகவும் கேலிக்கூத்தான ஆலோசனையை நல்கியிருக்கிறார்.

பாபர் மசூதி – ராம ஜன்ம பூமி தாவா  என்பது இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் இந்தியக் குடியரசுக்கான ஒரு சோதனைக்களமாக தொடர்ந்து நீடிக்கிறது. 1992இல் நடைபெற்றவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைத் தகர்த்திட்டு, அதற்குப் பதிலாக இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிட விரும்பும் சக்திகளுடன் எவ்விதமான சமரசத்தையும் செய்து கொள்ள முடியாது. மதவெறி சக்திகளை முகஸ்துதி செய்து, சமரசம் செய்து கொள்வதன் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்று நினைப்பவர்கள், அவர்களுடைய சந்தர்ப்பவாதத்தினால் விளைந்த கசப்பான அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மதச்சார்பின்மையைப் பாதுகாத்திடவும் நாட்டில் பிற்போக்கான கறுப்பு சக்திகளுக்கு எதிராகப் போராட மக்களை அணிதிரட்டிடவும் உறுதியான நிலையினை எடுப்பதைத்தவிர மாற்று வழி எதுவும் கிடையாது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.