பேஸ்புக் தொடர்பில் 3400 முறைப்பாடுகள் பதிவு.2017 ஆம் ஆண்டில் முகநூல் தொடர்பில் 3 ஆயிரத்து 400 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த  இதனைத் தெரிவித்துள்ளார். முகநூலில் புகைப்படங்களை மாற்றுவது தொடர்பிலேயே அவற்றுள் பெரும்பாலான முறைப்பாடுகள் ஆகும்.

முகநூல் ஊடாக தொடர்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்கள், அறிமுகமாகிய ஒரு மாத காலத்தில், பரிசுப் பொதியொன்றை இலங்கைக்கு அனுப்புவதாகவும், அதனை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்க பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியதாகவும் சில முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், தமக்கு பரிசுப் பொதி கிடைக்கவில்லை என்றும், தாம் செலுத்திய பணமும் இல்லாமல் போயுள்ளதாகவும் முறைப்பாட்டாளர்கள் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இவ்வாறான நிலைமைகள் தொடர்பில், காவல்துறையில் முறைப்பாடு செய்யுமாறு கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார்.