மியான்மரில் நடந்த வன்முறை; ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்யா மக்கள் கொன்று குவிப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

மியான்மரில் நடந்த வன்முறை; ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்யா மக்கள் கொன்று குவிப்பு

Share This
மியான்மரில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்யா மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ரோஹிங்யா முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர் (கிளர்ச்சியாளர்கள்) கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து அங்குள்ள அந்த இனத்தவர் மீது ராணுவமும், போலீசும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன.

ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசித்து வந்த கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர். ரோஹிங்யா முஸ்லிம் பெண்கள், பாலியல் வன்முறைகளுக்கும் ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மியான்மரில் இருந்து 6 லட்சத்து 47 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையில், மியான்மரின் நடைமுறைத்தலைவர் சூ கி எந்தவொரு நடவடிக்கையும் ஆக்கப்பூர்வமாக எடுக்கவில்லை என உலக அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் மியான்மரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட கால கட்டத்தில் (ஆகஸ்டு 25-ந் தேதியில் இருந்து செப்டம்பர் 24-ந் தேதி வரையிலான ஒரு மாதத்தில்) ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் கூட்டம், கூட்டமாக கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது.

மியான்மர் அரசு வெறும் 400 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக கூறியது.

இந்த நிலையில், எம்.எஸ்.எப். என்னும் எல்லையற்ற டாக்டர்கள் அமைப்பு, ராக்கின் மாகாணத்தில் நடந்த கலவரத்தில் ஒரு மாதத்தில் மட்டுமே 6 ஆயிரத்து 700 ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கூறி உள்ளது.

இவர்களில் 730 பேர் குழந்தைகள் அதுவும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் வாழ்ந்து வந்த ரோஹிங்யா மக்களிடம் நடத்திய சர்வேயின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை மிகவும் பழமையான மதிப்பீடுகளின் அடிப்படையிலானது, வன்முறையில் 6 ஆயிரத்து 700 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று எம்.எஸ்.எப். சொல்கிறது.

இதுபற்றி அந்த அமைப்பின் மருத்துவ இயக்குனர் சிட்னி வோங் கூறுகையில், “மியான்மர் வன்முறையில் உயிர் தப்பி, இப்போது வங்காளதேசத்தில் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை கண்டு பேசினோம். அவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்கள் நடுங்க வைப்பதாக அமைந்துள்ளன. அந்த இன மக்கள் மிகப் பயங்கரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். காயப்படுத்தப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டார்.

கொல்லப்பட்டவர்களில் 69 சதவீதத்தினர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வேயில் தெரியவந்துள்ளது. 9 சதவீதத்தினர் ஈவிரக்கமின்றி வீடுகளுக்குள் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டுள்ளனர். 5 சதவீதத்தினர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர்.

குழந்தைகளைப் பொறுத்தமட்டில், 60 சதவீதம் பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த தகவல்கள் உலக நாடுகளை அதிர வைத்துள்ளன. 

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE