பாகிஸ்தான்: வேளாண்மை பல்கலை. மீதான தாக்குதலில் தொடர்புடைய 9 பேர் கைதுபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள வேளாண்மை பல்கலை. மீதான தாக்குதலில் தொடர்புடைய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு உட்பட்ட பெஷாவர் நகரில் அரசுக்கு சொந்தமான வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ளது. நேற்று புர்கா அணிந்தபடி இந்த பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சிலர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.

இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 35 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பல்கலைக்கழகம் அருகில் உள்ள பாகிஸ்தான் உளவுத்துறை அலுவலகத்தை தாக்குவதற்கு நடந்த முயற்சி இது என அந்த அமைப்பு செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், வேளாண் பல்கலையில் நுழைந்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பெஷாவர் பல்கலை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தினோம். பாத்பர்ம் தேலாபந்த் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்திய போது தாக்குதலில் தொடர்புடைய 9 பேரை மடக்கினோம்.

அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கூறினர்.