கட்டாக்காலி கால் நடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் -

ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி கால் நடைகளின் நடமாற்றத்தை கட்டுப்படுத்தத் தவறும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாருமான பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

கட்டாக்காலி கால் நடைகளின் தொல்லைகள் மிக அதிகமாக அதிகரித்துள்ளமை குறித்து இன்று (19) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கட்டாக்காலி கால் நடைகளால்  பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாகவும், விபத்துகளுக்கு காரணமாக அமைவதாகவும், தொடர்ச்சியாக  எமக்கு முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த முறைப்பாடுகளை கவனத்திலெடுத்து  கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால் நடைகளை பிரதான வீதியிலோ, அல்லது பொது இடங்களிலோ விடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இது சம்பந்தமாக நகர சபையால் பல தடவை அறிவித்தில் வழங்கியிருந்தும் இதுவரை எவரும் அது தொடர்பாக கவனத்தில் எடுக்கவில்லை.

“எனவே,  இது சம்பந்தமாக இன்று இறுதி பொது அறிவித்தல்  2017.12.19 நகர சபையால் விடுக்கப்படுகின்றது. இதன் பிறகு எமது அறிவித்தலை புறக்கணிக்கும் உரிமையாளர்களுக்கு எதிராக உள்ளூராட்சி சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உங்களின் கவனத்துக்கு அறியத்தருகிறோம்.

எனவே, கால் நடை உரிமையாளர்கள் தமது கால் நடைகளை கட்டுப்படுத்துமாறும் அல்லது அதற்குரிய மாற்று ஒழுங்குகளைச் செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.