ஹக்கீம், நஸீர் மீது நடவடிக்கை எடுப்பாரா?தற்போது முன்னாள் முதலமைச்சர் நசீருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானாவுக்கும் இடையிலான பிரச்சினையே பிரதான பேசு பொருளாக உள்ளது. இது தேர்தல் நெருங்கியுள்ள காலம் என்பதால் மு.காவுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அந்த ஊர் மக்களால் மதிக்கப்படுகின்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர். அவரை மிகவும் கேவலமான வார்த்தை பிரயோகங்கள் கொண்டு  முன்னாள் கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட் ஏசியுள்ளார். இது தான் குர்ஆன், ஹதீதை யாப்பாக கொண்ட கட்சியின் பண்பா? அதிலும் குர்ஆனை சுமந்து கொண்டிருப்பவரின் பண்பா? இதற்கு முன்பு கடற்படை அதிகாரி ஒருவரை வம்புக்கு இழுத்து தேசிய பிரச்சினை ஒன்றையும் தோற்றுவித்திருந்தார். இவர் மீதான கடுங் கடிவாளம் மிகவும் அவசியமானது.

இவரின் இச் செயற்பாடு கட்சி பேதங்களுக்கு அப்பால் பலரதும் கண்டனத்தை பெற்றுள்ளது. இப்போது அமைச்சர் ஹக்கீம் முதலமைச்சர் நஸீர் அகமதின் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தேயாக வேண்டும். அவ்வாறு எடுக்காவிட்டால் மு.கா மக்கள் மத்தியில் மிகவும் நலிவடைந்துவிடும். அமைச்சர் ஹக்கீம், முன்னாள் கிழக்கு முதலமைச்சர் நஸீர் மீது ஏதாவது நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் அது அவரது மதிப்பை உயர்த்திக்கொள்ள வழி சமைக்கும். இருந்தாலும் அப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்றே நம்பப்படுகிறது. அவ்வாறு இவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் எப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் அமைச்சர் ஹக்கீமை கூட ஒரு பொருட்டாக மதிக்காது செயற்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. அவரின் சில செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் ஹக்கீமிடம் பல தடவைகள் சுட்டிக்காட்டியதாகவும் அவர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா நேற்றைய நிகழ்வில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அப்படி நடவடிக்கை எடுக்க முனைந்தால், அது இத் தேர்தலில் மு.காவின் வெற்றியை கடுமையாக பாதிக்கும். அது மாத்திரமன்றி இருவருக்குமிடையில் இருப்பதாக நம்பப்படுகின்ற இரகசியங்கள் வெளிப்பட்டுவிடும். தற்போதைய நிலையில் அது அனைத்தையும் விட மிகவும் ஆபத்தானது. அதே நேரம் இதன் பிறகு பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஒரு போதும் நஸீர் அகமதுடன் இணைந்து செல்லப்போவதில்லை. அப்படி செயற்பட முனைந்தாலும் பல இடங்களில் முரண்பாடுகள் தோன்றும். ஒரு உறையினுள் இரு கத்திகளை வைக்க முடியாது. இப்போது அமைச்சர் ஹக்கீம் தனக்கு யார் வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய திரிசங்கு நிலையில் இருப்பார். நஸீர் அகமதை விட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவே மக்கள் செல்வாக்குப் பெற்றவர். அவர் எந்த முடிவு எடுத்தாலும் கச்சை அவிழ்ந்துவிடும்.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.