புதிய தேர்தல் முறையை பெரிய கட்சிகளின் கழுத்தில் சுருக்கு கயிறாக மாற்றுவோம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

புதிய தேர்தல் முறையை பெரிய கட்சிகளின் கழுத்தில் சுருக்கு கயிறாக மாற்றுவோம்

Share This

பிறவ்ஸ்

சிறிய கட்சிகளுக்கு சாவு மணி அடிப்பதற்காகவே புதிய உள்ளூராட்சி தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது. அதேமுறையை வைத்து பெரிய கட்சிகளுக்கு சாவுமணி அடிக்கின்ற நிலைமைக்கு, இந்த தேர்தலை மாற்றவேண்டும் என்பதற்காக நாங்களின்றி ஆட்சியமைக்க முடியாது என்ற நிலைமையை உணர்த்துவதற்காக நாங்கள் தைரியமான முடிவை எடுத்திருக்கிறோம். அவர்களின் புதிய தேர்தல் முறையை பெரிய கட்சிகளின் கழுத்தில் சுருக்கு கயிறாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புத்தளம் முன்னாள் நகரபிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில் நேற்றிரவு (15) புத்தளத்தில் நடைபெற்ற "புத்தளத்தில் புத்தெழுச்சி" ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு விதமான முறைகளில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்‌றன. பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்திலும், சிங்கள பிரதேசங்களில் எங்களுடைய ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சியில் (துஆ) இரட்டை இலை சின்னத்திலும், சில இடங்களில் எங்களது முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், அதிகமான இடங்களில் முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்திலும் போட்டியிடுகிறது.

தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸின் 36 கிளைகள் இருக்கின்றன. இந்நிலையில் எந்தவொரு முஸ்லிம் வாக்குகளும் இல்லாத தெஹியத்தகண்டிய மற்றும் பதியத்தலாவ பிரதேசசபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை துஆ கட்சியில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. முஸ்லிம் கட்சிகள் மூலம் சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதில் இருக்கின்ற சிக்கல்கள் காரணமாக இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம்.

அம்பாறை மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகிறோம். அங்கு யானையில் போட்டியிடும் வேட்பாளர்களை நாங்கள்தான் தெரிவுசெய்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கார்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம். அந்தளவு அதிகாரத்தை ஐ.தே.க. அம்பாறை மாவட்டத்தில் எங்களுக்கு தந்துள்ளது. அந்த உரிமையுடன்தான் நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறோம்.

என்றுமே தோற்காக அட்டாளைச்சேனை பிரதேசசபை, அக்கரைப்பற்று மாகநகரசபை, அக்கரைப்பற்று பிரதேசசபை, சம்மாந்துறை பிரதேசசபை, காரைதீவு பிரதேசசபை, நாவிதன்வெளி பிரதேசசபை, இறக்கமாம் பிரதேசசபை போன்‌ற இடங்களில் ஐ.தே.க. வேட்பாளர் பட்டியலை நாங்கள்தான் தயாரித்திருக்கிறோம். ஐ.தே.க. முகவர்களாக எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர்களை நியமனம்செய்யும் போது, முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுத்தளம் தெரியாமல் அங்கிருக்கின்ற ஐ.தே.க. உறுப்பினர்கள் எங்களுக்கு தேவையான ஆசனங்களை வழங்குவதற்கு தயாரில்லை. இந்நிலையில், புத்தளத்தில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டுகின்ற அமைச்சர் ஒருவர் யானைத் தந்தத்துக்கு ஆசைப்படுகிறார். ஆனால், நாங்கள் யானையில் பயணம் செய்தாலும் யானைப் பாகனாகத்தான் இருப்போம். இதனால்தான் நாங்கள் தைரியமாக புத்தளத்தில் தனித்து போட்டியிடுகிறோம்.

முஸ்லிம் காங்கிரஸ் புத்தளத்தில் தனித்து போட்டியிடுவது புத்தளம் மக்களின் கெளரவத்துடன் சம்பந்தப்பட்ட விடயம். இடம்பெயர்ந்து வந்துள்ள வடபுல முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு புத்தளம் அபிவிருத்தியின் தாங்களும் ஒரு பங்களார்களாக அடையாளப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இன்‌று கிடைத்துள்ளது. புத்தளத்தில் புத்தூக்கம் பெற்றிருக்கும் மக்கள் இன்று, முஸ்லிம் காங்கிரஸ் மூலம் பிரதேசசபையை கைப்பற்றுவதில் ஆர்வம்கொண்டுள்ளனர். புத்தளம் ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம். இல்லாதுபோனால் எங்களின் ஆதரவின்றி யாரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை உருவாக்குவோம்.

இதேபோல திருகோணமலையில் எங்களுடன் இணைந்து போட்டியிட ஐ.தே.க. விரும்பியது. நாங்கள் கேட்கும் வட்டாரங்களை தருவதற்கு ஐ.தே.க. அமைப்பாளர் தயாராக இருந்தார். ஆனால், முஸ்லிம் அமைச்சர் ஒருவர் ஐ.தே.க. அமைச்சர்கள் சிலருடன் இருக்கின்‌ற உறவை பயன்படுத்தி நாங்கள் கேட்கின்ற அதே வட்டாரங்களில் எங்களுக்கும் ஆசனம் தரவேண்டும் என்று அடம்பிடித்தார். அந்த வட்டாரங்களை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்குவோமே தவிர உங்களுக்கு வழங்கமுடியாது என்று அமைப்பாளர் மறுத்த காரணத்தினால், தற்போது மூன்று கட்சிகளும் திருகோணமலையில் தனித்து போட்டயிடுகின்றன.

திருகோணமலையில் மூன்று கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதால் யார் பலசாலிகள் என்பதை புடம்போட்டு பார்க்கலாம். முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலையிலுள்ள பல பிரதேச சபைகளை கைப்பற்றும். எங்களுடைய உதவி இல்லாம் திருகோணமலையில் ஐ.தே.க. ஆட்சியமைக்க முடியாது என்பதை நாங்கள் நிரூபித்துக்காட்டுவோம். அதுபோல குருநாகல் மாவட்டத்திலும் எங்களது வேட்பாளர்களை போடுவதில் உள்ளூர் ஐ.தே.க. உறுப்பினர்கள் பாரபட்சம் பார்த்த காரணத்தினால் நாங்கள் அங்கும் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE