பெண்கள் இறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான படைப்பு; அவர்கள் சமூகத்தின் கண்கள்பெண்கள் என்போர்  இறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான  படைப்பு. அவர்களின் உணர்வு,பாசம்,அன்பு போன்றவற்றுக்கு மதிப்பளியுங்கள். பெண்ணுக்கென்று தனிபட்ட சிறப்புக்களை இறைவன் கொடுத்துள்ளான்.

ஒரு சிறு குழந்தையாக இருந்து முதிய வயதை அடையும் வரைக்கும் பெண்ணானவள்  ஒவ்வொரு படி நிலைகளிலும் ஒவ்வொரு பாத்திரம்  ஏற்கிறாள். அவை ஒவ்வொன்றும் அவளிடம்  பல அனுபவங்களை விட்டுச் செல்கிறது.

சிறு குழந்தையில் எல்லோரையும் போல் சாதாரணமாக வளரும் ஒரு சிறுமி குறிப்பிட்ட சில வயது வரைக்கும் சிறுவர்களுடன் தோழியாக இருந்து பழகுகிறாள் .பேசுகிறாள்.விளையாடுகிறாள் .பின்னர் பருவம் எய்தவுடன் தான் ஒரு பெண் என்பதை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் புரிந்துகொள்கிறாள், பெண்மைக்குரிய குணங்கள் அவளை ஆட்கொள்கிறது .அதுவரைக்கும் ஆண் பிள்ளைகளுடன் சகஜமாக பேசிப் பழகியவள்  அதனை விட்டும் தூரமாகிறாள்.

தான் பெண் என்பதை உணர்ந்த பின் தனக்கென்று  குடும்பத்திலும், சமூகத்திலும்  ஒரு தனியிடம் உள்ளது என்பதையறிந்து சுய ஒழுக்கம்,பணிவு, ,கற்பொழுக்கம் போன்றவற்றை பேணிப்பாதுகாத்து வாழப் பழகுகிறாள். வீட்டில் பெற்றோருக்கு நல்ல மகளாக ,சகோதரர்களுக்கு நல்ல சகோதரியாக வாழும் பெண் தன் மிருதுவான பேச்சு ,அன்பான நடத்தைகள் போன்றவற்றின்மூலம்  குடும்பத்தை மகிழ்ச்சி யின் இருப்பிடமாக மாற்றுகிறாள்.

ஒரு ஆண் மகனுக்கு மனைவியாக மாறுகின்ற சூழல்தான் அவளின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான கால கட்டமாக உள்ளது.இவ்வளவு நாளும் தன் பெற்றோருடன் சிட்டுக்குருவி போல் சுதந்திரமாக இருந்த நிலை மாறி ,பெற்றோர்களையும்,சகோதர சகோதரிகளையும் விட்டுப் பிரிந்து புதியதொரு உறவுக்குள் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறாள். தனக்கு பெரியதொரு பொறுப்பு கிடைத்துள்ளது என்ற நிலையில் அதற்காக தன்னை முழுமையாக தயார் படுத்துகிறாள் .கணவனிடமும் ,அவரது உறவினர்களுடனும்  எவ்வாறு நடந்து கொள்வது , வீட்டுப் பொறுப்புக்களை எவ்வாறு கையாள்வது போன்ற அனைத்தையும் சீக்கிரத்தில் கற்றுக் கொண்டு கணவனுக்கு சிறந்த மனைவியாக தன்னை மாற்றிக் கொள்கிறாள்.

அடுத்து  குழந்தைக்கு தாயாகும் நிலையில், கருவிலிருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரைக்கும் அவள் அனுபவிக்கும் வேதனைகளும் ,வலிகளும் கொஞ்ச நெஞ்சமல்ல.உயிர் போகின்ற அளவுக்கு அனுபவித்தே குழந்தையை பெற்றெடுக்கிறாள். பிறகு,குழந்தையை வளர்த்து பெரியவனாக ஆக்கும் வரைக்கும் தாயாக இருந்து எடுக்கும் முயற்சிகள் அளப்பெரியது.

குழந்தைகளுக்கு கல்வி ,ஒழுக்கம் போன்றவற்றை ஊட்டி வளர்ப்பதுடன்  தன் பிள்ளையும் சமூகத்தில் மதிக்கப்படக் கூடியவாறு இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை எடுக்கிறாள் .தனது பிள்ளைகளின்  திருமணத்தை சிறப்பாக நடத்துவதற்கு முக்கிய உந்துதலாக இருந்து அதன் மூலம் தன்னுடைய வாழ்வின் பூரணத் தன்மையை உணருகிறாள்.

வாழ்க்கையின் சகல கட்டங்களிலும் பெண் என்பவள் எதிர்பார்ப்பது தனக்கு அன்பு ,பாசம், பாதுகாப்பு எப்போதும் எல்லோராலும் கிடைக்க வேண்டும் என்பதைத்தான்.அவளிடம் ஆண்கள் எதேச்சையதிகாரமாக கடும் போக்குடன் நடந்து கொள்வது,அவளைத் துன்புறுத்துவது, அடிப்பது, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவது போன்றவையை அடியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.பெண் என்பவளால் காரணமின்றி எந்த தீங்குகளும் ஆண்களுக்கு ஏற்படுத்தப் படுவதில்லை என்பதை நினைவிற் கொள்வோம்.பெண்களிடம் மென்மையாகவும் ,கண்ணியமாகவும் நடந்து கொள்வோம்.

ஆக்கம் .
ஏ.பீ.எம்.அஸீம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...