டிரம்பின் அதிரடி முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு!!! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

டிரம்பின் அதிரடி முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு!!!

Share This


அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை செய்யும் சலுகை ரத்து ஆகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிற விசா ‘எச்-1 பி’ விசா ஆகும். இந்த வகை விசாக்களுக்கு இந்தியாவில் பலத்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக, தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

ஒவ்வொரு நிதி ஆண்டி லும் 65 ஆயிரம் ‘எச்-1’ பி விசாக்களை அமெரிக்கா வழங்குகிறது. இது தவிர்த்து அமெரிக்காவில் உயர்கல்வி பெற்றவர்கள் 20 ஆயிரம் பேருக்கும் கூடுதலாக இந்த விசா வழங்கப்படும்.

இந்த விசாக்களில் 70 சதவீதம் விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் 2015-ம் ஆண்டு, ‘எச்-1’ பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்) எச்-4 விசா மூலம் வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார்.

இதன் காரணமாக ‘எச்-1’ பி விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்கிறவர்கள் ஆண்களாக இருந்தால் அவர்களது மனைவிமாருக்கும், பெண்களாக இருந்தால் கணவர்களுக்கும் அங்கேயே வேலை தேடிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. லட்சக்கணக்கானோர், குறிப்பாக இந்தியர்கள் இதில் பலன் அடைந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது.

ஆனால் அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்குத்தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் கொள்கையாக உள்ளது.

இது தொடர்பாக அவர் கடந்த ஏப்ரல், “அமெரிக்க பொருட்களையே வாங்குங்கள்; அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துங்கள்”என்ற கொள்கையை நிர்வாக உத்தரவாக பிறப்பித்தார்.

இந்தநிலையில், ‘எச்-1 பி’ விசாவில் அமெரிக்காவில் வேலை செய்கிற வெளிநாட்டினரின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு (எச்-4 விசாதாரர்களுக்கு) அங்கு வேலை பார்ப்பதற்கு வழங்கி வந்த அனுமதியை விலக்கிகொள்வது குறித்து அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துறை பரிசீலிக்கிறது.

இதற்காக அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி ஒபாமா அரசு கொண்டு வந்த விதிகளை டிரம்ப் அரசு ரத்து செய்ய உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க குடியுரிமை, குடியேற்ற சேவைகள் துறையை சேர்ந்த கார்ட்டர் லாங்ஸ்டன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்துள்ள அமெரிக்க பொருட்களையே வாங்குங்கள்; அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துங்கள் என்ற நிர்வாக உத்தரவுக்கு இணங்க பல்வேறு கொள்கை மற்றும் விதிமுறைகள் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் நிர்வாகம் ‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்கள் (எச்-4 விசாதாரர்கள்) வேலை வாய்ப்பினை பறிக்கிற வகையில் உத்தரவு பிறப்பித்தால் அது பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE