வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கும் நாடு இதுதான்: ஐ.நா அறிக்கைவேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் 1.65 கோடி பேருடன் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டுக்கான சர்வதேச இடம்பெயர்வோர் அறிக்கையை ஐ.நா வெளியிட்டுள்ளது. இதில் 1.65 கோடி பேருடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதில் சரிபாதி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் உள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டை ஒப்பிடும் போது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. வளைகுடா நாடான ஐக்கிய அமீரகத்தில் மட்டும் சுமார் 33 லட்சம் இந்தியர்கள் இருக்கின்றனர். இது கடந்த 2000-ம் ஆண்டில் 9.7 லட்சமாக இருந்தது. அமெரிக்காவில் 10 லட்சமாக இருந்த எண்ணிக்கை தற்போது 23 லட்சமாக உயர்ந்துள்ளது.

சவூதி அரேபியாவில் 22 லட்சம் பேரும், ஓமனில் 12 லட்சம் பேரும், குவைத்தில் 11 லட்சம் பேர் என வளைகுடா நாடுகளில் மட்டும் மொத்தம் 89 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். 

ஐரோப்பிய நாடுகளில் 13 லட்சம் இந்தியர்களும், கனடாவில் 6 லட்சம் இந்தியர்களும் உள்ளனர். 2000-ம் ஆண்டை ஒப்பிடும் போது தற்போதைய விகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை முந்தைய அளவீடான 90 ஆயிரத்தில் இருந்து நான்கு மடங்கு அதிகரித்து தற்போது 4 லட்சம் இந்தியர்கள் உள்ளனர்.

இதே போல, மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 52 லட்சமாக உள்ளது. இந்த அறிக்கையில் 1.3 கோடி பேருடன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்ஸிகோ உள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...