Dec 11, 2017

பள்ளிவாயல் நிர்வாகத்தினர் என்றால் உத்தமர்களா?
அல்லாஹ்வின் மாளிகைகள் என்பவை புனிதமானவை, அவற்றை நிர்வகிக்கும் நிர்வாகத்தினர் அதற்குத் தகுதி பெற்றிருப்பது இஸ்லாம் வலியுறுத்தும் மிக முக்கிய தலையாய அம்சமாகும்.

அல்லாஹு தஆலா நிர்வகத்தினரின் தகமைகள் பற்றி பின்வருமாறு விபரிக்கிறான்.

“அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் – இத்தகையவர்கதாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.”

மாளிகைக்கு சொந்தக்காரனே இவ்வாறு வரையறைகளிற்றிருக்கும் போது தற்போது பள்ளிவாயல்களை நிர்வகிக்கும் நிர்வாகத்தினர் மேற்குறித்த தன்மைகளைக் கொண்டுள்ளனரா என்றால் நூற்றுக்கு 80 வீதம் இல்லையென்றே கூற முடியும்.

சில ஊர் பள்ளிவாயல் நிர்வாகத்தினரில் சிலர் தாம் நிர்வாக உறுப்பினர் என்பதால் ஏதோ நாட்டு ஜனாதிபதி போல் தனக்கு எல்லோரும் மரியாதை தரவேண்டுமென எதிர்பார்த்து எட்டாப்பழத்திற்கு கொட்டாவிவிட்டு பகல் கனவு கண்டு கற்பனை உலகத்தில் வாழ்வதை விட்டும் தவிர்ந்து தாமும் ஏனையோர் போன்று சாதாரண மனிதர்கள் என்பதை மறவாமல் நினைவில் நிறுத்தி வாழப் பழகுவதே உத்தமமாகும்.

பள்ளிவாயல் நிர்வாகத்தினர் என்றால் ஏதோ “புனிதர்கள், பாவமே செய்யாத அப்பாவிகள், சமூகத்தில் மேன்மையானவர்கள்,” என்ற தோற்றப்பாட்டை மக்கள் மன்றத்தில் ஏற்படுத்துவது மிகவும் கண்டித்தக்கதாகும், சிலநேரங்களில் பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர் ஒருவர் தவறு செய்யும் பட்சத்திலும் மக்களுக்கு அனைத்தும் வெளிப்படையாக தெரிந்திருந்த போதும் அவரை விசாரிக்காது ஒரு முடிவும் எடுக்காது முழுப் பூசணியை சோற்றில் மூடி மறைப்பது போன்று மூடி மறைத்து சந்தோசம் காணும் சில பொருப்பற்ற, அல்லாஹ்வைப் பயப்படாத நிர்வாகத்தினர், ஒரு ஏழை குடிமகன் அல்லது பாமரன் ஒருவன் தவறு செய்யும் பட்சத்தில் அவனை அழைத்து விசாரனை என்ற பெயரில் அவனை சீரழித்து இழிவுபடுத்தி தரம் தாழ்த்தி ஏதோ “அசுத்தவான்” போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அவன் வாழ்வில் மீண்டெழ முடியாதளவு செய்வது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

நிர்வாகிகளில் அல்லாஹ் வகுத்த நிபந்தனைகள் அடிப்படையில் பள்ளிவாயலை நிர்வகிக்கும் சிறந்த நிர்வாகிகள் இருப்பதும் மறுப்பதற்கில்லை, அதேநேரம் வேலியே பயிரை மேய்வது போன்று ஊரில் உள்ள பெரும் பெரும் அனாச்சாராங்களை செய்துவிட்டு, பள்ளிவாயலுக்கு சந்தா செலுத்தி வாழும் ஊரார்களில் ஒருவர் தவறு செய்வதைக் கண்டதும் நிர்வாகத்தின் சார்பாக மேற்குறித்தவர் அழைத்து ஏதோ தான் தவறுகள் ஒன்றும் செய்யாத நல்லடியார் போன்று கேள்விகளைத் தொடுத்து விசாரனை நடாத்துவது ஒருக்காலும் பொருத்தமாகாது.

அத்தோடு நிர்வாகத்தினர் என்போர் இறைவனது மாளிகையை நிர்வகிப்பதற்கு அமானிதம் எனும் அடிப்படையில் பொறுப்பேற்றவர்கள் என்பதை ஒவ்வொரு நொடிப்பொழுதும் தமக்குத்தாமே நினைவூட்டுவதோடு இது பெருமையடித்து, அகங்காரம் கொண்டு தலைக்கனத்தில் பேசித்திரியும் விடயமல்ல மாறாக இப்பாரிய பொறுப்பைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்ற பொறுப்புணர்ச்சியுடன் பெயரும் புகழையும் தவிர்த்து பொதுநலம் பேணி நடப்பதே இஸ்லாம் எதிர்பார்த்து வலியுறுத்தம் விடயங்களாகும்.

பள்ளிவாயலை முறையாக நிர்வகிப்பர் என்று மக்கள் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்த தகுதியுடைய கல்வியியலாளர்கள் மற்றும் மதிக்கத்தக்கவர்கள் கூட சில சுயநல முடிவுகளுக்கும் அரசியல் கட்சிசார் விடயங்களுக்கும் சோரம் போய் ஊருக்கு பொதுவான நிதியுதவி ஏதும் வரும் பட்சத்தில் இன்ன அமைச்சர் உதவி செய்தால் மற்றொரு தடவை நாம் சார்ந்துள்ள எமது அமைச்சர் உதவி செய்யமாட்டார் ஆதலால் முதல் அமைச்சரது நிதியுதவிகளை புறக்கணித்து தாம் சார்ந்த கட்சி அமைச்சரைத் திருப்திப்படுத்துவதற்காக ஊருக்கு வந்த பொதுவான உதவிகளை மறுத்து ஒதுக்குவது முறையற்ற, பொருப்பற்ற செயற்பாடும் அமானித மோசடியும் கூட என்பதை நன்றாக ஒவ்வொரு நிர்வாகத்தினரும் உணர்வது காலத்தின் தேவையாகும்.

ஒவ்வொரு நிர்வாக உறுப்பினரும் தாம் நியமிக்கப்பட்ட நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ளும் வேளையில் நிர்வாகம் வெற்றிப் பாதையை நோக்கி நகர்வதற்கு நூறு வீதம் வாய்ப்புண்டு, ஆனால் பாங்கு சொல்லும் முஅத்தினையும் தொழுகை நடாத்தும் இமாமையும் அடக்கியாள்வதே கௌரவமும் மரியாதையும் என நினைத்து அவ்விருவரையும் தரம் தாழ்த்தி நடாத்துவதோடு அவர்களிடமே போலி வீராப்பை காண்பிப்பது எந்த வகையிலும் அறிவுடமையாகாது.

ஊருடைய முன்னேற்றத்திற்கு எம்பொழுதும் முன்னிற்பதே உண்மையான நிர்வாகிகளின் அடையாளமாகும், மேலும் மக்களது ஆண்மீகக் குறைகளை முதலில் நிவர்த்தி செய்வது நிர்வாகத்தினரின் முதற் கடமையாக திகழும் அதேநேரம் அவர்களது பொதுத் தேவைகளுக்கான தீர்வுகளை காண்பதும், வெளிரங்கமாக அனாச்சாரங்கள் மற்றும் பாவங்கள் நடப்பதை விட்டும் மக்களைப் பாதுகாத்து அவை பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு செய்து தெளிவூட்டுவதும் மிக முக்கிய கடமைகளாகும்.

Bristol மற்றும் ஏனைய போதை வஸ்த்துக்களை உபகியோப்போரும், தொழுகை, நோன்பு போன்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றாது பகிரங்கமாக சுற்றித்திரிவோரும், இஸ்லாம் வன்மையாக கண்டித்து எச்சரித்த பாவங்களில் மூழ்கியிருப்போரும் நிர்வாகத்தினராக இருக்கும் போது ஊர் மக்கள் எவ்வாறு இத்தகைய நிர்வாகத்தினரை மதித்து வழிப்படுவர்?!

பள்ளிவாயல் நிர்வாகிகள் மேற்குறித்த சிறுபிள்ளைத்தனமான விடயங்களைத் தவிர்த்து பொறுப்பு மற்றும் அமானிதங்களை சரிவர பேணி குறைந்தபட்சம் மனிதமுள்ள மனிதர்களாக செயற்படுவதோடு இறை மாளிகையின் கண்ணியத்திற்கு கலங்கம் ஏற்படுத்தாத வகையில் நடக்க முயற்சிக்க வேண்டுமென ஆதரவு வைக்கின்றோம்.
الله أعلم

அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியாபுரம்- புத்தளம்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post