Dec 25, 2017

சாய்ந்தமருது மு.கா வேட்பாளர் யஹியாகான் வீடு மீது சரமாரி தாக்குதல்


கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று (24) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன்  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் வீடுகளுக்கும் இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்திருக்கும் கடற்கரை தோணா பிரதேசத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் வருகை தரவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்தே சாய்ந்தமருதில் இளைஞர்கள் பொதுமக்கள் அமைச்சரை வரவிடாது தடுப்பதற்காக முயற்சி செய்ததுடன், பட்டாசுகளை கொழுத்தி வீதிகளில் வீசியதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.


அங்கு குழுமிய பொதுமக்கள் சாய்ந்தமருது பிரகடத்தை மீறி நடைபெற ஏற்பாடாகும் குறித்த நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனக்கூறி மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்பட்டனர். சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்த அரசியல்வாதிகள் சாய்ந்தமருதுக்குள் நுழையக் கூடாது என உரத்த குரலில் கோஷமிட்டனர். இதன்போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு முறுகல் நிலையும் ஏற்காபட்ணடது.


மேற்படி பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் நிலமையை சுமுகமானதாக ஆக்கவும் பல ஊர்  பிரமுகர்கள் தலையீடு செய்தபோதும் பொதுமக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியாது போனது. பொதுமக்கள் பட்டாசுகளை கொழுத்தி வீதிகளில் போட்டதுடன் கறுப்பு கொடிகளையும் ஏந்தியவண்ணம் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.


 முன்னாள் பிரதி மேயரும் சாய்ந்தமருது வட்டாரத்தில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருமான பிர்தௌஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  அம்பாரை மாவட்ட பொருளாளரும் வேட்பாளருமான ஏ.சீ.யஹ்யாகான் ஆகியோரது வீடுகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக ஏ.சீ.யஹ்யாகானை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார்,


நாங்கள் ஜனநாயக ரீதியாக தேர்தலில் களமிறங்கியுள்ளோம். அதற்கு எதிரான முறையில் இனந்தெரியாத காடையர்களை உள்ளடக்கிய குழுவினர் சாய்ந்தமருதிலுள்ள தனது வீடு உட்பட தன்னுடன் இணைந்து வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் வீடுகள்மீதும் தாக்குதல் நடாத்தி சேதப்படுத்தியுள்ளனர்.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான தாக்கதல்கள் மூலம் அவர்கள் எதிர்பார்ப்பது நிறைவேறப்போவதில்லை. இத்தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் கல்முனை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் ஜனநாயகமான தேர்தலை எதிர்கொள்ளக்கூடிய சூழலை பொலிசார் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


இதேவேளை மற்றுமொரு வேட்பாளர் ஏ.எம்.பிர்தௌஸ் குறிப்பிடும்போது, நேற்று (24) மதியம் 1.30 மணியளவில் நான் வீட்டில் இல்லாதவேளையில் எனது வீட்டினை சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் களமிறங்கியுள்ள சுயேட்சை குழுவின் ஆதரவாளர்கள், குண்டர்கள் சேர்ந்து உடைத்துள்ளார்கள். அதுபோல் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதத்திற்குள்ளாகியிருக்கின்றது . அதுபோல் வீட்டிற்குள் இருந்த 30 பவுண் தங்க நகைகளும் கொள்களையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்முனை பொலிசில் நான் முறைப்பாடு செய்துள்ளேன்.

இப்படியான ஜனநாயக விரோதமான செயலை அகில இலங்கை மக்கள் காங்கிஸின் லேபல் ஒட்டிய சுயேட்சை வேட்பாளர்களும் ஆதரவாளர்களுமே செய்திருக்கின்றார்கள் என்ற சந்தேகம் எனக்குண்டு. இவர்களுக்கும் பள்ளிவாயல் தலைமை உட்பட அனைவருக்கும் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன், உங்களுடைய எந்த அடாவடித்தனத்தாலும் எமது உரிமையை தட்டிப்பறிக்க  முடியாது. அதுபோல் எந்த சவாலையும் நான் எதிர் கொள்ள தயாராகவே இருக்கின்றேன். எனவே கீழ்த்தரமான இந்த நடவடிக்கைகளை விட்டுவிட்டு ஜனநாயக செயற்பாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். இல்லையேல் நாங்கள் இவர்களுக்கு சிறந்த பாடம் புகட்டுவோம் என்றார்.


இச்சம்பவங்கள் தொடர்பாக  கல்முனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரதேசமெங்கும் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post