Dec 3, 2017

கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டிய வட்டமடு காணி பிரச்சினை!விவசாயம், மாடு வளர்ப்பு ஆகியவற்றை அம்பாறை மாவட்டத்தின் பொருளாதார வளம் அடிப்படையாக கொண்டு உள்ளது. இதே போல இம்மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்களுடைய பொருளாதார வளத்தின் பலம் விவசாயம், மாடு வளர்ப்பு ஆகியவற்றிலேயே தங்கி உள்ளது. உண்மையில் வட்டமடு காணி பிரச்சினை என்பது தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான பிரச்சினையாக படம் பிடித்து காட்டப்படுகின்றபோதிலும் இது விவசாயிகளுக்கும், மாட்டு பண்ணையாளர்களுக்கும் இடையிலான பிரச்சினையே ஆகும். தீர்க்க கூடிய இப்பிரச்சினை இனத்துவ அரசியல் சாயம் கொடுக்கப்பட்டு சுயநல அரசியல்வாதிகளால் தீராத பிரச்சினையாக நீட்டிக்கப்பட்டு வருகின்றது.

கல்முனையை நான்காக பிரிப்பது குறித்த கலந்துரையாடலும், பேச்சுவார்த்தையும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பம் ஆனபோது தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லா அவருடைய உரையை தொடங்கியபோது தமிழ், முஸ்லிம் தரப்பினர் இவ்வாறு கூடி பேசுவதன் மூலம் வட்டமடு காணி பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று வலியுறுத்தினார். 

மேலும் இதற்கு பிந்திய சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தேசிய காங்கிரஸ் சந்தித்து பேசியபோதும் வட்டமடு காணி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தமிழ் பேசும் மக்கள் தீர்வை எட்ட தயாராகி விட்டனர், இதே போல நாட்டின் அரசியல் பிரச்சினையையும் அனைத்து தரப்பினரும் கூடி பேசி கலந்தாலோசித்து தீர்க்க முடியும் என்று எடுத்து சொல்லி இருக்கின்றார். ஜனாதிபதியை சந்திக்க தேசிய காங்கிரஸ் பிரமுகர்கள் தயாராக இருந்தபோது அதே நேரத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பிரமுகர்களும் ஜனாதிபதியை சந்திக்க வந்திருந்தனர். 

அந்நேரத்தில் வட்டமடு காணி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை டக்ளஸ் தேவானந்தாவுக்கு அதாவுல்லா எடுத்து சொல்லினார். இதை தொடர்ந்தே பாராளுமன்ற அமர்வில் வட்டமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா பேசினார்.

வட்டமடு காணி பிரச்சினையின் பூர்வீகத்தை இவ்விடத்தில் நாம் பார்க்க வேண்டி உள்ளது. அம்பாறை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் முன்பெல்லாம் அம்பாறை மாவட்ட எல்லையில் உள்ள நவகிரிகுள பிரதேசத்துக்கே மாடுகளை கொண்டு சென்று வளர்த்தனர். ஆனால் 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன கலவரத்தையும், கல்லோயா படுகொலைகளையும் தொடர்ந்து உடுத்த உடையுடன் மாத்திரம் இவர்கள் திரும்பி வர நேர்ந்தது.

 இதற்கு பிற்பாடு நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, 11 ஆம் கிராமம், கல்முனை, காரைதீவு போன்ற இடங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைகுளம் பகுதிக்கு மாடுகளை கொண்டு சென்றனர். ஆயினும் அங்கு போதிய பாதுகாப்பு இருக்கவில்லை என்கிற காரணத்தாலும், இவர்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இடங்களிலேயே மாடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றிய அரசாங்க அதிகாரிகள் கெடுபிடி பண்ணியதாலும் இவர்கள் திரும்பி வர நேர்ந்து விட்டது.

இந்நிலையில்தான் அம்பாறை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதார பிரச்சினையின் தார்ப்பரியத்தை உணர்ந்தவராக அக்கரைப்பற்று பெரும்பாக இறைவரி உத்தியோகத்தர் பகுதியில் சாகாமம், ரூபஸ்குளம், வம்மியடிக்குளம் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்து உள்ள 3850 ஏக்கர் அரசாங்க நிலத்தை மேய்ச்சல் தரைக்கு அவருக்கு சட்டப்படி உரித்தான அதிகாரம் மூலமாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி. ஜெயசிங்க ஒதுக்கியதோடு இத்தரையை ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும், நல்ல ரக புல்லினங்களை செய்கை பண்ணுவதற்கும், கால்நடைகளின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கும், மேலும் இவற்றோடு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்தார். 

மேலும் மேற்கூறப்பட்ட தேவைகளை விடுத்து காடு வெட்டி துப்புரவு செய்தல், விவசாய நடவடிக்கைகளுக்காக நிலத்தை பயன்படுத்துதல், விவசாயம் செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு இந்நிலத்தை பயன்படுத்த முடியாது என்றும் ஏற்கனவே இங்கு ஆரம்பிக்கப்பட்டு உள்ள காடுகளை வெளியாக்குதல், விவசாயம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இவ்வுத்தரவுக்கு கட்டுப்படாதவர்கள் மீது சட்டம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரகடனப்படுத்தினார். 

தொடர்ந்து 1976 சாகாமக்குளம், ரூபஸ்குளம், வம்மியடிக்குளம் ஆகியவற்றை உள்ளடக்கி வரையறுக்கப்பட்ட எல்லைகளை கொண்டதாக 4000 ஏக்கர் நிலம் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக அரசாங்க அதிபரால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதில் ஜனாதிபதி வில்லியம் கொப்பல்லாவ ஒப்புதல் கையொப்பம் இட்டு உள்ளார். கால்நடை அமைச்சராக சௌமியமூர்த்தி தொண்டமான் பதவி வகித்தபோது பிரத்தியேக வாகனத்தில் உயர்ந்த ரக புல்லினங்களை மேய்ச்சல் தரையில் வளர்க்க அனுப்பி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அரசாங்க அதிபரால் மேய்ச்சல் தரையாக அந்த இடம் ஒதுக்கப்படுவதற்கு முன்னர் அங்கு ஒரு பகுதியில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது, மேலும் வளமான நிலம் மற்றும் குளம் ஆகியவற்றை கண்டவுடன் மாடுகளை கொண்டு சென்றவர்கள்கூட அங்கு விவசாயத்தில் ஈடுபட தொடங்கினர் என்பது இயல்பான விடயம்தான் என்கின்றார் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா.

ஆனால் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஆலையடிவேம்பு  கால்நடை. பால் பண்ணையாளர் விவசாய கூட்டுறவு சங்கத்தின் தலைவருமான சோமசுந்தரம் புஷ்பராசாவின் கருத்து பெரிய அளவில் வித்தியாசமானதாக உள்ளது. 1983 ஆம் ஆண்டு தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் உக்கிரமாக நிலவிய யுத்த சூழல் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்களால் குறிப்பாக தமிழர்களால் வட்டமடு மேய்ச்சல் தரைக்கு செல்ல முடியாமல் நேர்ந்தது,

 இந்நிலையில் விவசாயிகள் குறிப்பாக முஸ்லிம்கள் மேய்ச்சல் தரையில் விவசாயம் செய்ய தொடங்கி விட்டனர், அத்துடன் கால போக்கில் காணி சட்டத்துக்கு முரணான வகையில் அரசாங்க அதிகாரிகள் சிலரின் உதவியுடன் காணி அனுமதி பத்திரங்களை பெற்று மேய்ச்சல் தரைக்கு உட்பட்ட காணிகளை அடாத்தாக பிடித்து வைத்து உரிமம் கொண்டாடுகின்றனர் என்கின்றார். விவசாயிகள் காலத்துக்கு காலம் மேய்ச்சல் தரையில் விவசாயம் செய்ய முடியாதபடி சட்ட நடவடிக்கைகள் மூலமாக தடுக்கப்பட்டபோதிலும் நீதிமன்றங்களின் மனிதாபிமான கண்ணோட்டத்தை விவசாயிகள் அவர்களுக்கு சாதகமாக திட்டமிட்டு பயன்படுத்தினர் என்றும் கூறுகின்றார்.

ஆனால் விவசாயமும், மாடு வளர்ப்பும் அம்பாறை மாவட்ட பொருளாதாரத்தின் இரு கண்களும் ஆகும், ஒன்றை மற்றொன்று குருடாக்குகின்ற செயற்பாட்டில் ஈடுபட கூடாது, தமிழர்களை காட்டிலும் மாடு வளர்ப்பு முஸ்லிம்களுக்கு மிக மிக முக்கியமானது, எனவே மாடு வளர்ப்புக்கு முஸ்லிம்கள் எதிரானவர்கள் அல்லர், ஆனால் விவசாயம் செய்யப்பட்ட பூமியில் மாடுகளை வளர்க்க முடியாது என்பதுடன் விவசாயம் செய்யப்பட்ட பூமியில் மாடுகளை வளர்க்கின்றபோது அவை இறந்து விட அதிக வாய்ப்புகள் உள்ளன, 

எனவே இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட தரப்பினர் கூடி கலந்தாலோசித்து பேசி பொருத்தமான சுமூக தீர்வை எவருக்கும் பாதிப்பு இல்லாத விதத்தில் எடுக்க வேண்டும் என்று பதிலுக்கு கூறுகின்ற அதாவுல்லா இன்னொரு குண்டை வீசினார். அது என்னவென்றால் மேய்ச்சல் தரை ஒதுக்கீடு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் பிழை உள்ளது, வடக்கும், தெற்கும் எல்லைகளாக குறிப்பிடப்பட்டு உள்ள நிலையில் ஒதுக்கப்பட்டு உள்ள இடத்தை அடையாளம் கண்டு அளக்கவோ, அதற்கான வரைபடத்தை வரையவோ முடியாத நிலைமைதான் யதார்த்தத்தில் உள்ளது என்று சொல்லினார்.

ஆனால் மேய்ச்சல் தரை விடயத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கு இடம் இல்லை, கீழ்நிலை நீதிமன்றங்கள், உயர்நிலை நீதிமன்றங்கள் ஆகியவற்றில் இவை தொடர்பான வழக்குகள் இடம்பெற்று வருகின்றன, அதே போல ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சு செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள், சமய குருமார் ஆகியோரின் மேலான கவனத்துக்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு அவர்கள் உரிய் அக்கறையுடன் விடயங்களை கையாள்கின்றனர்,, மாடு வளர்ப்பாளர்களுக்கு விரைவில் உரிய நீதி கிடைக்கும் என்று விசுவாசிப்பதாக கூறினார் புஷ்பராசா.

ஆனால் அதாவுல்லா கருத்து கூறுகையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மாற்றம் பெற்று உள்ள வட்டமடு விவகாரத்தில் புத்த பிக்குகளுக்கு என்ன வேலை? தமிழ் பேசும் மக்கள் அவர்களுக்குள் பேசி தீர்வு காண்பதுதான் உசிதமானது, அண்மையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் மத்தியஸ்தத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றபோது பிக்குகளும், சிங்களவர்களும் மாடு வளர்ப்பவர்களுக்கு ஆதரவாக வந்திருந்து முஸ்லிம் இன விரோதத்தை கக்கினர், இதனால் மற்ற தரப்பினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ய நேர்ந்தது என்கிறார். 

ஆனால் மேய்ச்சல் நிலம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு சொந்தமானது தானே? என்று புஷ்பராசா பதிலுக்கு சொல்ல அதாவுல்லாவோ சிங்களவர்கள் குறித்த மேய்ச்சல் நிலத்துக்கு மாடுகளை ஒருபோதும் கொண்டு வர போவதில்லையே? என்கின்றார்.

வட்டமடு காணி பிரச்சினைக்கு தீர்வு காண மாடு வளர்ப்பாளர்கள் கடந்த வருடம் இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தனர், ஆனால் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த தவம் சுய நல அரசியலுக்காக தலையிட்டு அவர்களை குழப்பி விட்டார் என்று கூறுகின்றார் அதாவுல்லா.

ஆயினும் வட்டமடு பிரச்சினை இனி மேலும் தொடர்ந்து நீடிக்கப்படுகின்ற பட்சத்தில் பூனைக் குட்டிகளுக்கு அப்பத்தை குரங்கு பங்கிட்டு கொடுத்த கதைதான் நடந்து முடிந்து விடும் என்கிற விடயத்தில் தமிழ் பேசும் சமூகங்கள் அவதானமாக இருக்க வேண்டி உள்ளது. SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network