சிரியாவின் இறையாண்மையை பாதுகாக்க துணை நிற்போம்: புதின் உத்தரவாதம்சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது. அரசுக்கு ஆதரவான குர்த் படைகளும் இந்த போரில் குதித்தன.

இதுதவிர, சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை அகற்ற நடைபெற்று வரும் ஆயுதப் புரட்சி மற்றும் அங்குள்ள போராளி குழுக்களுக்கு இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். அங்கு போராளிகள் பிடியில் இருக்கும் முக்கிய பகுதிகளை கைப்பற்றவும் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கிடையில், ரஷியாவில் முகாமிட்டுள்ள படைகளை நாட்டுக்கு திரும்புமாறு ரஷிய அதிபர் புதின் சமீபத்தில் உத்தரவிட்டார். எனினும், சிரியாவின் லட்டிகா மாகாணத்தில் ரஷியா அமைத்துள்ள மெய்மிம் விமானத்தளம் மற்றும் டார்டோஸ் கடற்படைத்தளம் அங்கு நிரந்தரமாக இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு புத்தாண்டு வாழ்த்து அனுப்பியுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சிரியா நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க எப்போதும் துணையாக இருப்போம் என உறுதி அளித்துள்ளார்.