Dec 21, 2017

இரவுநேர வகுப்புக்களும், 
வெட்கப்பட வேண்டிய விடயங்களும்..!!
சில விடயங்களை செய்தியாக பிரசுரிக்க வேண்டாம் என்றும் மானம் போய்விடும் என்றும் என் போன்ற ஊடகவியலாளா்களுக்கு சொல்லப்படுவதுண்டு.

அவ்வாறான விடயங்களுள் ஒன்றுதான் மாணவா்கள் சார், பாடசாலைகள்சார் வெட்கக்கேடான சம்பவங்கள்.

நாங்கள் ஒழுக்கமாக இருக்கின்றோம் – கலாசாரத்தை கடைப்பிடிக்கின்றோம் என்று போலியாக காண்பித்துக் கொண்டு, நம்மை நாமே நம்ப வைத்துக் கொண்டு, சீரழிந்து ஏமாந்து கொண்டிருக்கின்றோமா என்ற நியாயமான சந்தேகத்தை இவ்வாறான செய்திகள் தோற்றுவிப்பதுண்டு.

இதில் ஒன்றுதான் – இராக்கால வகுப்புக்கள் !

ஒருகாலத்தில் இருந்த மேலதிக வகுப்பு என்பது, மாலைநேர வகுப்பாகி இன்று இரவுநேர வகுப்புக் கலாசாரமாக மாறியிருக்கின்றது. முன்னொரு காலத்தில் பெண்பிள்ளைகளை மாலை ஆறு மணிக்குப் பிறகு வாசலுக்கே அனுப்பாத சமூகம் இன்று இரவு 10 – 11 மணி வரையும் பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றது.

மார்க்கம் பேசுகின்றவர்களும் ஏகப்பட்ட அமைப்புக்களும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற பொறுப்பு வாய்ந்தவா்களும் இரவுநேர வகுப்புக்களால் ஏற்படும் சாத்தியமுள்ள கலாசார சீர்கேடுகள் பற்றி வாழாவிருக்கின்றன அல்லது தங்களது வீட்டில் நடக்கும் வரை அலட்டிக் கொள்ளாதிருக்கின்றன.

ஆசிரியா்கள் மீதும் ஆசிரியம் மீதும் எனக்கும் உங்களுக்கும் மிகுந்த மரியாதையும் மதிப்பும் இருந்தது – இருக்கின்றது. நம்மை அறிந்த ஆசிரியா்கள் அதை அறிவார்கள். ஆனால் இங்கு நாம் பேச விளைவது – கற்பித்தலை வியாபாரமாக மாற்றியிருக்கின்ற ஆசிரியா்கள் பற்றியும் இராக்கால வகுப்புக் கலாசாரம் பற்றியுமே. (அளவானவர்கள் தொப்பியை போட்டுக் கொள்ளலாம்)

முன்னொரு காலத்தில் வகுப்பில் சற்று மந்தமாக செயற்படுகின்ற மாணவர்களை ரகசியமாக வீட்டுக்கு அழைத்து, படிப்பித்து முன்னேற்றிய எத்தனையோ ஆசிரியா்கள் இருந்தார்கள். பிறகு சற்று பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு விஷேட வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் இவை நடாத்தப்பட்டன.

பின்னர் 1990களில் இருந்து டியுட்டரி வியாபாரம் களைகட்டியது. இன்று டியுட்ரிகளில் மாலைநேர வகுப்புக்களும் பின்-மாலைநேர வகுப்புக்களும் நடைபெறுகின்றன. இதற்கு புறம்பாக பாடசாலைகளில் கூட இரவுநேர வகுப்புக்கள் இடம்பெறுகின்றன. தரம் 1 படிக்கின்ற பிள்ளை முதல் உயர்தரம் கற்கின்ற மாணவன் வரை எல்லோருக்குமான விதவிதமான வகுப்புக்கள் டிசைன் டிசைனாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹபாயா போட்டுக் கொண்டு நமது பிள்ளைகளும் போய் வருகின்றார்கள்

இதற்காக பெருமளவு பணம் அறவிடப்படுவதுடன் அதற்காகவே வடிவமைக்கப்பட்ட பல புத்தகங்களையும் அச்சடித்து ஆசிரியா்கள் பணம் உழைத்துக் கொள்கின்றனா். ஹபாயா போல - இதுவும் ஒரு பெஷனாக மாறியிருக்கின்றது.

இந்தளவுக்கு இராப் பகலாக பிள்ளைகளை படிக்க வைக்கின்றோமே அந்தளவுக்கு சிறந்த பெறுபேறுகள் நமக்கு கிடைக்கின்றதா ? எத்தனை வைத்தியர்கள், பொறியியலாளா்கள், கல்வியியலாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள் என்று எப்போதாவது அதிபர்கள், கற்ற சமூகம், பெற்றோர்கள் சிந்தித்தது உண்டா? ஒழுக்கமும் கலாசாரமும் எங்கு போயிருக்கின்றது என்று எண்ணிப் பார்த்ததுண்டா?

இதில் சில முக்கிய விடயங்களை கவனிக்க வேண்டியுள்ளது:

01. பெரும்பாலும் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியா்கள்தான் பின்னேர, இரவுநேர வகுப்புக்களையும் நடத்துகின்றார்கள். இவா்களுள் அநேகர் பாடசாலையில் படிப்பிப்பது குறைவு. ”படிக்க வேண்டுமென்றால் பிரத்தியேக வகுப்புக்கு வாருங்கள்” என்று கட்டளையிடுகின்றார்கள். இப்படியானவா்களுக்கு எதிராக கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

02. பாடசாலையில் மட்டும் கற்பதால் ஒரு பரீட்சையில் ஒரு பிள்ளையால் சித்தியடைய முடியாது என்றால், அதாவது – பிரத்தியேக வகுப்புக்களை நம்பியே பாடத்திட்டம் தயாரிக்கப்படுகின்றது என்றால், பாடசாலைக் கட்டமைப்பை கலைத்துவிட்டு அரசாங்கமே பிரத்தியேக வகுப்புக் கடைகளை திறக்கலாமே என்ற கேள்விக்கு பதில் தர வேண்டும்.

03. ராத்திாி வரை நடக்கும் டியுசன் வகுப்புக்களை நம்பித்தான் இலங்கையின் கல்வித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றால், இலங்கையின் அரச கல்வித் திட்டம் தோல்வி என்றுதானே அர்த்தமாகின்றது?

04. பிள்ளைகள் – பகலில் பாடசாலையில் படித்து, பின்னேரம் டியுஷனில் படித்து, பின்னிரவில் வீட்டில் படித்தும் போதாது - இரவுநேர வகுப்பிற்கும் சென்று கற்கவேண்டிய அளவுக்கு பாடத்திட்டம் இருக்கின்றதா என்பது குறித்து கல்வி அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும். அல்லது இப்போது பிறக்கின்ற பிள்ளைகள் அந்தளவுக்கு மக்குகளா என்பதை நிரூபிக்க வேண்டியிருக்கும்.

05. இப்போதும் நல்ல ஆசிரியர்கள் பெருமளவானோர் இருக்கின்றனா். ஆசிரியத்துக்கு பொருத்தமற்ற சில ஜீவன்களும் இருக்கின்றன. குறிப்பாக மாணவா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறைவடைந்துள்ளது. இந்தப் பின்னணியில் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற பல பாடசாலைகளில் குறைந்தது ஒரு சமூக சீர்கேட்டு சம்பவமாவது நடந்திருக்கின்றது.

இதையெல்லாம், வெளியில் சொன்னால் வெட்கம் என்றும் பத்திரிகையில் போட்டு விட வேண்டாம் என்றும் கெஞ்சிக் கேட்கும் பாடசாலை சமூகம், உலமாக்கள், சீர்திருத்தவாதிகள் இதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஒவ்வொரு சம்பவமாக வெளியில் வந்து நாறும் வரைக்கும் காத்திருக்கின்றார்களா?

குறிப்பாக, 
படிப்புச் சுமைக்கும் நீண்டநேர கற்றலால் ஏற்படும் மனஅழுத்தத்திற்கும் மேலதிகமாக முறையற்ற காதல்கள், ஆசிரிய – மாணவ அத்துமீறல்கள், சீண்டல்கள் அதன் தொடரான பின்விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் சாத்தியமுள்ள பிந்திய-மாலைநேர மற்றும் இரவு நேர வகுப்புக்களை முஸ்லிம் பிரதேசங்களில் தடைசெய்வதற்கு அல்லது கட்டுப்பாடுகளை விதிக்க அனைவரும் பாடுபட வேண்டும்.

#பிற்குறிப்பு –
இது குறித்து கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருடன் நான்
தனிப்பட்ட முறையில் உரையாடினேன். விரைவில் ஒரு பொறிமுறை உருவாக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லியுள்ளார்.

ஏ.எல்.நிப்றாஸ்


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network