Dec 20, 2017

பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் சிந்தித்த பல விடயங்கள் இன்றும் நிறைவேறாமல் இருக்கின்றது(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மர்ஹும் எம்.எச். எம். அஷ்ரப் தூரநோக்குடன் செய்ய எண்ணிய பல விடயங்கள் இன்றும் நிறைவேறாதிருக்கின்றது. அதில் ஒன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் போதனை ஆங்கில மொழியில் நடத்தப்பட வேண்டும் என்பதாகும் என்று புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஏ.எம். நஹியா தெரிவித்தார்.

கொழும்பு தெமட்டகொட வை.எம்.எம். ஏ. மண்டபத்தில் (16) சனிக்கிழமை இடம்பெற்ற மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவாக 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 5ஆம்தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் அதிவிசேட சித்திபெற்ற இலங்கை துறைமுக அதிகாரசபையின் முஸ்லிம் மஜ்லிஸ் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை துறைமுக அதிகாரசபை முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் பொறியியலாளர் இஸட். எம். தௌபீக் தலைமையில் இடம்பெற்ற 
இந்நிகழ்வில்அவர் மேலும் தெரிவித்ததாவது,

1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் இரவோடு இரவாக தங்கள் இருப்பிடங்களை விட்டு முஸ்லிம்கள் துரத்தப்பட்டுஇருப்பிடங்கள் இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார்கள். அவர்களுக்கு புத்தளத்தில் உடனடியாக நலன் புரி நிலையங்களை அமைத்தார். நான் புனர்வாழ்வு பணிப்பாளர் நாயகமாக இருந்ததினால் அவரது சகல பணிகளிலும் எனக்கும் பங்கு இருக்கின்றது.

அந்த காலகட்டத்தில் புத்தளத்தில் உள்ள பாடசாலைகளை இரு நேர பாடசாலையாக நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டு புத்தளம் பிரதேச மாணவர்களுக்கு காலையிலும் இடம்பெயர்ந்து வந்த மாணவர்களுக்கு மாலையிலும் பாடசாலைகள் இடம்பெற்றன. 

புத்தளத்தில் 34பாடசாலைகள் 5 மாதங்களுக்குள் கட்டிமுடிக்கப்பட்டு புத்தளம் ஸாஹிராவில் இடம்பெற்ற பெருவிழாவிலே ஒரே நாளில் 29பாடசாலைகளும் மற்ற 6 பாடசாலைகள் பின்னரும் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் திறந்து வைத்தார். வேறு எந்த ஓர் அமைச்சரும் இவ்வேலையைச் செய்திருக்க முடியாது.

அது மட்டுமல்லபொலன்னறுவையில் பல பாடசாலைகள்அடுக்கு மாடிகள் கொண்ட பாடசாலைகள் மலசல கூட வசதிகள் என்று இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு இரவு பகல் பாராது மர்ஹும் அஷ்ரப் பாடுபட்டார். இரு நேர பாடசாலைகளாக இருந்த பாடசாலைகள் ஒரே நேரத்தில் அனைவரும் கற்க வேண்டும் என்பதற்காக முழு மூச்சாக நின்று பாடுபட்டு ஒரு நேர பாடசாலைகளாக மாற்றினார்.
அன்று புனர்வாழ்வு அமைச்சராக வேறு யாராவது ஒருவர் இருந்திருந்தால் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு இவ்வாறான சேவைகள் இடம்பெற்றிருக்குமாஎன்று சிந்தித்துப் பாருங்கள்.

இடம்பெயர்ந்து பாடசாலையை விட்டு தூர இடங்களிருந்து வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது. அவர்களுக்கு மாதம் 500 ரூபா வீதம் புலமைப்பரிசில் கொடுத்து உதவினார். இதனை இடம்பெயர்ந்தவர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.

இடம்பெயர்ந்த மாணவர்கள் ஒரு விசேட குழுவாக கருதி அவர்களது வெட்டுப்புள்ளிகளை மிகவும் குறைந்த அளவில் அமைச்சரவையில்  தீர்மானிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கு அவர் கடைசியாக சரி பார்த்த அமைச்சரவை பத்திரம் இப்போதும் என்னிடம் இருக்கின்றது. அவர் மரணத்தின் பிறகு அதனை அமுல் செய்ய முடியாமல் போய்விட்டது. பிறகு ஒரு முக்கியமான அமைச்சரிடம் அவ்விடயம் பற்றி தெரிவித்தேன். அவர்கள் அது பற்றி எதுவும் செய்யவில்லை.

அவர் தனது சேவைகளை முஸ்லிம்களுக்கு மட்டும் செய்யவில்லை. மற்ற இனங்களையும் தன்னுடைய இனமாக தன்னுடைய சகோரர்களாகத்தான் அவர் பார்த்தார்.

கல்முனையிலே பெரிய வைத்தியசாலைஉவெஸ்லி என்ற பாடசாலைகாரைதீவிலே உள்ள தமிழ் பாடசாலைகள் என்று பாடசாலைகளை அமைத்து பல சேவைகளைச் செய்தார்.

தமிழர்களைப் பார்த்து இங்கே இருக்கின்ற எந்த தமிழர்களுக்கும் நான் ஏதும் அநியாயம் செய்திருக்கிறேனா?, இங்கே இருக்கின்ற தமிழர்கள் யாரும் என்னிடம் கேட்ட போது நான் இல்லை என்று சொல்லி இருக்கிறேனா?  என்று பகிரங்கமாக கூட்டத்திலே தமிழ் மக்களைப் பார்த்து கேட்டு பேசி இருக்கின்றார்.  அந்த அளவுக்கு மற்ற இனமும் திருப்திப்படக் கூடிய வகையில் தன்னுடைய இனத்தை வழிநடத்திய ஒரு புத்திசாலியான தலைவராக அவர் வாழ்ந்திருக்கின்றார்.

எஸ். ஜே. வி. செல்வநாயகம் விட்ட இடத்திலே இருந்து தனது அரசியல் பயணத்தை தொடருகிறேன் என்று அவர் அடிக்கடி மேடைப்பேச்சுகளில் கூறுவார். தமிழ் அரசியலுக்குள்ளே ஒரு மிதவாத போக்குள்ள எஸ். ஜே.வி. செல்வநாயகத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவகையிலே செயற்பட்டு அவரை மதித்தவர் அஷ்ரப்.

கிழக்கிலே ஒரு பல்கலைக்கழகம் தேவை தமிழர்களும் முஸ்லிம்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நிலை இருந்த போது அது வந்தாறுமுல்லையிலே அமைக்கப்பட்டது. இருந்தும் யுத்த காலத்தில் முஸ்லிம் மாணவர்கள் படிக்க முடியாத பயங்கரமான நிலை காணப்பட்டதால் தென் கிழக்கிலே ஒரு பல்கலைக்கழகத்தை  அமைப்பதற்கு மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் முன்னின்று உழைத்தார். 

இது மிகவும் பெரிய சாதனை இதனை வேறு யாராலும் சாதிக்க முடியாது.
 தென் கிழக்கு பல்கலைக்கழகம் 4, 5 வருடங்களில் ஆங்கில மொழியிலே கற்பிக்கக் கூடிய பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஏனெனில் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்படுகின்ற பல்கலைக்கழகத்தில்தான் இனங்களுக்கிடையே பிரிவினை இல்லாது ஐக்கியமான நிலையில் இருக்க முடியும்

அவர்கள் தேசிய ஐக்கியத்தினுடைய களமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் திகழும் என்ற எண்ணத்தை வெளியிட்டிருந்தார். அது கூட செயற்படுத்த முடியாமல் போய்விட்டது. இப்படி அஷ்ரப் சிந்தித்த பல விடயங்கள் செயற்படுத்த முடியாமல் போய்விட்டன. என்று கவலையோடு தெரிவித்தார்.

நிகழ்வில் ஜப்பார் மௌலவியால் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபுக்காக துஆப் பிராத்தனை செய்யப்பட்டது. விழாவை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளரும் துறைமுக நிர்வாக அதிகாரியுமான கலீலுர் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் செரண்டிப் பிளவர் மில் பிரைவட் லிமிட்டட்  பிரதம நிறைவேற்று அதிகாரிமுகம்மட் றியால் விசேட அதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியதோடுமஜ்லிஸ் பிரதிநிதிகள்மஜ்லிஸ் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post