Dec 15, 2017

தாய் நாட்டிலிருந்து பலஸ்தீன் பிரச்சினையை எப்படிப் பார்ப்பது? – ஒரு வரலாற்று நோக்குமுஸ்லிம்களுக்கு மூன்று புனிதஸ்தலங்கள் உள்ளன. இம்மூன்றும் மூன்று பிரதான சமூகவியல் அடிப்படைகளைப் பிரதிபலிக்கும் சின்னங்களாக அமைந்துள்ளன. அவை வருமாறு,
1. கஃபா: முஜாஹதா எனும் ஆன்மீக செயற்பாடுகள்
2. மஸ்ஜிதுன் நபவி: இஜ்திஹாத் எனும் அறிவியற் பணிகள்
3. அல் அக்ஸா: ஜிஹாத் எனும் அரசியற் போராட்டங்கள்
தொழுகை, ஹஜ் போன்ற பிரதான ஆன்மிக அம்சங்களுடன் தொடர்பான செயற்பாடுகள் அனைத்தும் கஃபாவுடன் பின்னப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. நபியவர்களினதும் குலபாஉர் ராஷிதூன்களினதும் அதிகமான இஜ்திகாத் செயற்பாடுகள் மஸ்ஜிதுன் நபவியையும் மதீனாவையும் மையப்படுத்தியே பதியப்பட்டுள்ளன. வரலாற்றுக் காலம் முதல் மஸ்ஜிதுல் அக்ஸா போராட்டத்தின் மையமாக இருந்து வருவதை தெளிவாகக் கண்டுகொள்ள முடிகிறது.
இம்மூன்று தலங்கள் உட்பட அவற்றைச் சூழ உள்ள பகுதிகளிலும் அமைதி நிலவ வேண்டும். அவை இஸ்லாமிய அரசுகளால் பாதுகாக்கப்பட வேண்டும் போசிக்கப்பட வேண்டும். அவற்றின் உரிமைகளும் அவற்றுடன் பின்னிப் பிணைக்கப்பட்ட மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இம்மூன்று தலங்களும் மனித உடலில் உள்ள இதயம், சுவாசப்பை, சிறுநீரகம் ஆகிய மூன்று பிரதான உருப்புக்களைப் போன்றன. உடலுக்குத்; தேவையான அமுக்கத்தையும் பிராணவாயுவையும் சுத்தீகரிப்பையும் குருதியூடாக இவ்வுருப்புக்களே வழங்குகின்றன. இதுபோலதான் மூன்று புனித்தலங்களும் முஸ்லிம் உம்மத்தில் பங்காற்றுகின்றன.
இன்று பாலஸ்தீனம் அமைதியின்றி கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வினதும் முஹம்மத்(ஸல்) அவர்களினதும் முஸ்லிம் உம்மத்தினதும் எதிரியாகிய ஸியோனிஸ வாதிகளால் பலஸ்தீனம் சூரையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்று முஸ்லிம்கள் சிறுவர், பெண்கள், வயோதிபர் என்ற வேறுபாடின்றி உலகின் பல இடங்களிலும் அநியாயமாகக் கொலை செய்யப்படுகின்றனர். தாக்கப்படுகின்றனர். இந்நிலையில் இருந்து முஸ்லிம் உம்மத் விடுதலை பெற வேண்டுமாயின் பலஸ்தீனத்தை மையப்படுத்தியுள்ள அரசியல் போராட்டத்தில் முஸ்லிம்கள் வெற்றி பெற வேண்டும்.
“அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைவார்கள்” என்பது அல்குர்ஆன் குறிப்பிடும் நியதியாகும். இந்நியதி பற்றிக் குறிப்பிடும் அந்நஸ்ர் என்ற அத்தியாயம் பொதுவாக மக்கா வெற்றியுடன் மாத்திரமே தொடர்பு படுத்தி நோக்கப்படுகிறது. உண்மையில் நபியவர்களது காலத்தில் மக்கா வெற்றியைத் தொடர்ந்து அரபுத் தீபகற்ப மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்தார்கள். என்றாலும் குறித்த அத்தியாயத்தை மக்கா வெற்றிக்குப் பின் இன்று வரை உள்ள வரலாற்று நிகழ்வுகளோடு நோக்கும் போது அல்குர்ஆன் குறிப்பிடும் அல்லாஹ்வின் உதிவியையும் வெற்றியையும் இன்னொறு பரிமாணத்தில் விளங்க முடியுமாக உள்ளது.
இஸ்லாத்தின் மூன்று புனிதத் தலங்கள் பற்றி வந்துள்ள சில ஹதீஸ்கள் மக்கா மதீனா ஆகிய இரண்டும் அந்நிய படையெடுப்புக்களில் இருந்து பாதுகாக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் மஸ்ஜிதுல் அக்ஸா அவ்வாறானதல்ல. அது ஜிஹாதின் சின்னம். ஜிஹாத் மூலமே அது பாதுகாக்கப்பட வேண்டும். முஸ்லிம் உம்மத்தின் வலிமையையும் போராட்டத் திறனையும் பரிசீலிக்கும் தலமாகவே அது காணப்படுகிறது. ஆகவேதான் முஸ்லிம் உம்மத் பலவீனப்படும் போது மஸ்ஜிதுல் அக்ஸா பரிபோகிறது. பலம் பெறும் போது மீண்டும் வெற்றி கொள்ளப்படுகிறது.
மாறி மாறி வரும் இப்பலஸ்தீன வெற்றிகள் அவற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாத்தினுள் நுழைவதற்கு வாயில்களை உருவாக்கியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. உமர் (ரழி) அவர்கள் காலத்தில் முதன் முறையாக வெற்றி கொள்ளப்பட்டபோது ரோமர்களும் எகிப்தியர்களும் பாரசீகர்களும் சாரி சாரியாக இஸ்லாத்தில் நுழைவதற்கு வாயிலாக அமைந்தது.
ஸுல்தான் ஸலாஹுதீன் அய்யூபியால் வெற்றி கொள்ளப்பட்டபோது ஐரோப்பியர்கள் இஸலாத்தில் நுழைவதற்கு வாயிலாக அமைந்தது. ஸுல்தான் முலப்பரினால் வெற்றி கொள்ளப்பட்டபோது மங்கோலியர்கள் இஸ்லாத்தில் நுழைவதற்கு வாயிலாக அமைந்தது.
எனவே அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைவார்கள் என்ற அல்குர்ஆனிய நியதி மக்கா வெற்றிக்குப் பின் பலஸ்தீன வெற்றிகளுக்குப் பின்னால் தொழிற்படுவதை அவதானிக்க முடிகிறது.
இன்று பலஸ்தீனத்தைப் பறிகொடுத்துள்ள முஸ்லிம் உம்மத் மீண்டும் அதை வெற்றி கொண்டால் அது எத்தகைய சுப செய்தியைக் கொண்டுவரலாம் என்பதை அடுத்த சிந்தனையில் நோக்குவோம்.
ஒலி படுமிடங்களில் இருந்தெல்லாம் எதிரொலி விளைகிறது. அலை எட்டும் தூரத்திலெல்லாம் பிரதிபலிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறுதான் ஒவ்வொரு விவகாரமும். அவை பரவும் அகலத்திலிருந்தம் நீளத்திலிருந்தும் அவற்றுக்கான பிரதிபலன்கள் உருவாகின்றன.
மேலுள்ள சித்தாந்தத்தின் அடிப்படையில் பலஸ்தீன விவகாரத்தை நோக்கும் போது கிலாபத்துடைய காலத்தில் அது ரோம பாரசீகத்தோடு எல்லைப் படுத்தப்பட்டிருந்தது. ஸலாஹுத்தீன் ஐயூபியின் காலத்தில் அது ஐரோப்பா வரை விரிவடைந்திருந்தது. ஸுல்தான் முழப்பரின் காலத்தில் அது மொங்கோலியர்களையும் இணைத்திருந்தது.
இவ்விவகாரத்தில் முஸ்லிம்கள்வெற்றியடையும் போது அதன் நீள அகலத்திற்கேற்ப இஸ்லாம் பரவிச் சென்றது. இன்று பலஸ்தீன விவகாரம் புதியதோர் பரிமாணத்தை அடைந்துள்ளது. தொலை தொடர்பு சாதனங்களின் புரட்சிகரமான முன்னேற்றம் காரணமாக சுருங்கிக் கொண்டிருக்கும் பூகோளத்தில் பலஸ்தீன விவகாரம் நாளுக்கு நாள் சர்வதேச விவகாரமாக, இன்னொரு வகையில் சொல்வதானால் ஒவ்வொறு நாட்டினதும் தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் ஒன்றாக மாறி வருவதைப் பார்க்கிறோம்.
பலஸ்தீனப் பிரச்சினையின் பூகோளமயமாதல் இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு சுபசெய்தியாகும். ஏனெனில், அதன் அர்த்தம் இஸ்லாம் பூகோளமயமாகப் போகின்றது என்பதாகும். என்றாலும், அது தானாக உருவாகும் ஒன்றல்ல. இரு தரப்பினர்அதற்காக பங்காற்ற வேண்டும். முதல் தரப்பினர் பலஸ்தீனர்கள். இவர்கள் தமது தாய்நாட்டின் எந்த ஒரு சாணையும் விட்டுக் கொடுக்காமல் பொறுமையுடன் போராடவேண்டும்.
அடுத்த தரப்பினர் ஏனைய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள். இவர்கள், தாம் வாழும் நாட்டின் அரசியல் நிலைகளைப் புரிந்து பலஸ்தீனப் பிரச்சினையை ஹிக்மத்தான முறையில் தேசிய மட்டத்திற்குக் கொண்டு செல்லல் வேண்டும்.
அத்துடன் தம்மால் முடியுமான உதவிகளை பலஸ்தீனர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வகையில் ஒவ்வொரு முஸ்லிமும் தான் வாழும் நாட்டில் அந்நாட்டின் இறைமைக்கு விசுவாசமாக இருப்பதுடன் பலஸ்தீனத்தின் முகவராக செயல்பட வேண்டும். நிச்சியமாக பலஸ்தீனம்; வெற்றி கொள்ளப்படும் போது உலகெங்கிலும் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக, சாரி சாரியாக இஸ்லாத்தில் நுழையும் கண்கொள்ளாக் காட்சியை காண முடியும் இன்ஷா அல்லாஹ். 

அஷ்ஷெய்க் பஸ்லுர்ரஹ்மான் (நளீமி) B.A., Dip in Edu., SLTS
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post