Dec 21, 2017

பதவிப் போராட்டங்களாலும் சுயநல அரசியல் சிந்தனையுமே தற்போதுள்ள கட்சிகளில் உள்ளது(எஸ். அஷ்ரப்கான்)

முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கத்தின் ஊடாக அரசியல் ரீதியான முஸ்லிம் சமூகத்தின்  சாதனை, வெற்றி என்பன இன்று அரசியல் ரீதியாக ஏனையவர்களால் எள்ளி நகையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையானது பெரும் தலைகுனிவை எமக்கு தருகிறது. அன்று மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் காட்டிய அரசியல் சாணக்கியம் மிக்க பாதை இன்று அவரின் சிஷ்யர்களாலேயே குழி தோண்டி புதைக்கப்படுகிறது.

அரசியல், பொருளாதாரம், கல்வி, நாகரீகம், சித்தாந்தம் என்பவற்றை இவ் உலகிற்கு கற்றுக்கொடுத்த முஸ்லிம்கள், அதனை மற்றவர்களிடமிருந்து கற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது துரதிஷ்டவசமானதே. இந்நாட்டில் முஸ்லிம்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி உருவாக்கப்பட்டது. அதன் ஸ்தாபகத் தலைவரின் மரணத்தின் பின் பதவிப் போராட்டங்களாலும் சுயநல அரசியல் சிந்தனையாலும் பிராந்தியக் கட்சிகள் தோற்றம் பெற்றது.

தற்போதைய முஸ்லிம் காங்கிரஸிலும் சரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலும் சரி, தேசிய காங்கிரஸிலும் சரி பதவிகளுக்கான போராட்டங்களே அதிகமாக உள்ளன. ஆனால் அதிகாரங்களை வைத்து ஆனபலன் ஒன்றும் முஸ்லிம் சமூகத்திற்கு இல்லை எனும்போது மிகவும் வேதனையளிக்கிறது.

சிறுபான்மை கட்சிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே இன்றுவரை பூரணமாக, சலுகைகளுக்கு விலை போகாமல் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.  எந்தளவுக்கென்றால் சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொண்டு இன்று தங்களுக்கான உரிமைப்போராட்டத்தில் ஓரளவு நாட்டின் தலைமையை தம்பக்க நியாயங்களை பேச வைக்கின்ற அளவுக்கு தமிழ் தலைமைகள் முன்னின்று உழைத்து வருகின்றனர்.

 தமிழ் மக்கள் யுத்தத்தில் சந்தித்த இழப்புக்கள் ஏராளம். அதுபோல் முஸ்லிம்களும்   பாரிய இழப்புக்களை சந்தித்திருக்கின்றார்கள். இதனை யாராலும்  மறுக்க முடியாது. என்றாலும் தமிழ் அரசியல் தலைமைகள் நினைத்திருந்தால் சலுகைகளுக்கு விலைபோய் சுகபோகங்களை அனுபவித்திருக்கலாம். அவர்களின் ஒட்டுமொத்த பலமும் இன்று அவர்களை தலைநிமிர்ந்து வாழ்வதற்கான வழியைத் திறந்திருக்கின்றது. இது அவர்களின் பல்வேறு தியாகங்கங்களின் அடிப்படையில் கிடைக்கப்பெற்றதாகும்.

 இதனை ஒரு பாடமாகக் கொண்டு முஸ்லிம் சமூகமும் கையாலாகாத முஸ்லிம் சமூக அரசியல்வாதிகளும் பாடம் கற்க வேண்டும். உரிமைகளை பெறுவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற்றும் வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகள், நகர அபிவிருத்தி என்ற போர்வையில் சுவீகரிக்கப்பட்ட நிலங்கள், வேளாண்மை செய்ய தடுக்கப்பட்ட காணிகள், ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்காக அரசாங்கத்தால் பெறப்பட்ட காணிகளுக்கான நஷ்டஈடு முழுமையாக வழங்கப்படாமை, கரையோர நிருவாக மாவட்டக்கோரிக்கை, சுதந்திரமான மத உரிமை என்பவற்றை பெறவேண்டிய நிலையில் கதிரைப் போராட்டம் நடாத்துவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பது வேடிக்கையானது. இதனால்தான் முஸ்லிம்கள் சார் அரசியல்வாதிகள் பலரை எதிர்வரும் தேர்தல்களில் வாக்களித்து அதிகாரத்திற்கு அனுப்புவதில்லை என்ற மக்கள் கிளர்ச்சி அண்மைய சாய்ந்தமருது உள்ளுராட்சி போராட்ட வடிவில்  பிரதேச அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடத்தை வழங்கும் என்பது அம்மக்களுடைய கருத்தாகும். இந்த செயற்பாடு முஸ்லிம்களால் நடந்தேறியே ஆக வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகள் பாடம் படிப்பர்.

த.தே.கூ இனால் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க முடியுமான வியூகங்களை செய்ய முடியுமெனில் ஏன் முஸ்லிம் அரசியல்வாதிகளால் முடியாது? குறிப்பாக மு.கா இனால் ஏன் முடியாது? இங்கு அ.இ.ம.கா, தே.கா இனை விமர்சிக்க முடியாது. ஏனெனில், இவர்கள் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்றவாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் தங்களை ஏகபோக கட்சி என்று லேபல் ஒட்டியுள்ளனர். அதனால் அவர்களே முழுப்பொறுப்பையும் ஏற்றாக வேண்டும்.

அரசியல்வாதிகளை மக்கள் பிரதிநிதிகளாக ஆக்கி அலங்கரித்தவர்கள் மக்களாகும். அம்மக்களின் குரல்களுக்கு மதிப்பளிக்காது தான்தோன்றித்தனமாக செயற்படும் நிலை  இன்று காணப்படுகிறது. மக்களின் தேவையறிந்து செயற்பட வேண்டிய அரசியல்வாதிகள் மக்கள் மனங்களிலிருந்து துாரப்போகின்றவர்களாகவே தற்போதும் இருந்து வருகின்றார்கள்.

எனவேதான் அரசியலில் பழம்பெரும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அரசியல் வியூகங்களை தன்னகத்தே உள்வாங்கி முஸ்லிம் கட்சிகள் சிறந்த பாடம் கற்க வேண்டும். அத்துடன் தலை நிமிர்ந்து எமது சமூகத்தின் இருப்பினையும், உரிமைகளையும் வென்றெடுக்க பாடுபட வேண்டும். இல்லையெனில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான அம்பாரை மாவட்டத்தின் சாய்ந்தமருது மக்களின் தனி உள்ளுராட்சி மன்ற கோரிக்கையும் அதனோடிணைந்த போராட்டங்களும் மேலும் விஸ்வரூபம் எடுத்து நாட்டின் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பாரிய சவாலாக எதிர்காலத்தில் மாறலாம்.

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற பிரச்சினை வெறும் பிரதேச பிரச்சினை ஒன்றாகும். ஆனால் அதுபோன்ற பல்வேறு தேவைகளும் பிரச்சினையும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இன்று இருக்கின்றது. எனவேதான் இப்போராட்டத்தின் தொடர் இலங்கை பூராகவுள்ள முஸ்லிம்களையும் அரசியல் ரீதியாக சிந்திக்கத் துாண்டியுள்ளது. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லாத முறையில் கல்முனை விடயம் கையாளப்பட்டு சாய்ந்தமருது மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். 

அதுபோல் இலங்கையின் சிறுபாண்மை இனம் என்ற வகையில் பெரும்பாண்மையினரால் எதிர்கொள்கின்ற மற்றும் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தி தமிழ் அரசியல் தலைவர்கள் போன்று ஒரு குடையின் கீழ் ஒருமித்து குரல் கொடுக்க முனைவது காலத்தின் கட்டாயமாகும். இல்லையேல் வாக்குப்பலத்தை வைத்து மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடத்தை எதிர்காலங்களில் புகட்டுவார்கள் என்பது வெளிப்படையாக விளங்குகின்றது. 
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post