Dec 11, 2017

தாருன் நுஸ்ரா சிறுமிகளுக்கு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!கொழும்பு களுபோவிலவில் இயங்கிவருகின்ற தாருன் நுஸ்ரா அநாதைகள் காப்பகத்தில் இருந்த 18 முஸ்லிம் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவம் கடந்த வியாழனன்று நுகேகொடை கங்கொடவில மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து  சிவில் சமூக பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு அமைதி ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தினர். 

அமைதி ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சிறுமிகள் மீதான சம்பவம் முஸ்லிம் சமூகத்தை தாண்டி, நாடளாவிய பேசுபொருளாக மாறியுள்ளது. வடக்கில் வித்யா, கம்பஹாவில் சேயா, கொழும்பில் இச்சிறுமிகளா? பர்தாவுக்கு உரிமைக் குரல் கொடுக்கும் முஸ்லிம் சமூகம் 18 இஸ்லாமிய சிறுமிகள் மீதான துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன்? போன்ற கோஷங்களும் ஏனைய சமூகங்களில் இருந்து மேலெழுந்துள்ளன. 

இவ்விடயத்தை முஸ்லிம் ஊடகங்கள் மூடி மறைத்து, சந்தேகநபர்களை பாதுகாக்க முனைவதாக சமூக ஊடகங்களில் போலிப் பிரசாரங்கள் பரவின. முஸ்லிம் சமூகத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை என்ற வகையில் நவமணியும், சகோதர ஊடகங்களும் சிறுமியர் மீதான சம்பவ தினத்திலிருந்து செய்திகளை வெளியிட்டு வந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  

 வழக்கில் மேலும் ஒருவரின் சாட்சியினை பொலிஸார் பதிவுசெய்துகொள்ள வேண்டுமென்றும், மேலதிக விசாரணைகளுக்காகவும் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

வழக்கிற்கான சட்ட மருத்துவ அறிக்கைகள் மற்றும் சான்றுகளை சமர்ப்பிப்பதில் அரச அதிகார நிறுவனங்கள் பக்கத்தில் இயல்புக்கு மாறான தாமதம் காணப்படுகின்றதாகவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார  சபை, புலனாய்வுத் துறையினர், மகளிர் மற்றும்  சிறுவர் காப்பகம், கொஹுவலை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு, வைத்தியசாலையின் ரி.என்.ஏ அறிக்கை ஆகியன உள்ளடங்களாக அரச அதிகார நிறுவனங்கள் இவ்வழக்கு தொடர்பான நடவடிக்கைகளின்போது, ஆதரவற்ற பாதிக்கப்பட்ட சிறுமிகளின் நலனை கருத்திலெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் கேட்டுக்கொள்கின்றனர். 

18 சிறுமிகளுக்காக ஆஜராகியுள்ள சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன் மற்றும் சைனாஸ் முஹம்மத் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நாம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அக்கறையில் மாத்திரமே கருத்திற்கொண்டு இவ்விடயத்திற்கு ஆஜராகியுள்ளோம். குற்றவாளிகள் தராதரம் பார்க்காது தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் சட்டத்தரணிகள் உறுதியாக இருக்கின்றனர்.  

குழந்தைகளின் உடல், உள ரீதியான நலம், எதிர்காலம் போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு, இவ்விடயத்தில் சாணக்கியமாக நடந்துகொள்ளுமாறு குழந்தைகளுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று அக்கறைகொண்ட சமூக ஆர்வலர்களிடம் விநயமாக கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

தாருன் நுஸ்ராவில் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த வயதுடைய சிறார்கள். அவர்களுக்கென்று ஓர் எதிர்காலம் உண்டு. அவர்களின் அடையாளம், தனிநபர் விபரங்கள் மறைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு  சிறந்த கல்வியும் எதிர்காலமும் அமைத்துக்கொடுப்பது சமூகத்தின் பொறுப்பாகும். 

இஸ்லாம் அநாதைகள் விடயத்தில் அதிக அக்கறை கொண்ட மார்க்கமாகும். அநாதைகளை பராமரிப்போர் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறான அநீதிகளுக்கு தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டுமென்பதோடு, போராடுபவர்கள் எவ்வித கடின சூழ்நிலையிலும் மட்டமான விமர்சனங்கள், போலி செய்திகளை வெளியிட்டு நிதானமிழக்கக் கூடாது. 

சம்பவம் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட  வேண்டும். சிறுவர், பெண்களுக்கெதிரான துஷ்பிரயோகம் நடக்காவண்ணம் தண்டனைகள் தாக்கம் செலுத்த வேண்டும். விடயத்தின் பாரதூரம் உணர்த்தப்பட வேண்டும். இனியோரு வித்யாவோ,  சேயாவோ, நுஸ்ராவோ பாதிக்கப்படாதிருக்க உரிய நடவடிக்கைகளை எடுப்போம்.

(நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்) 
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post