மஹிந்தவுடன் இணையும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள்விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் எதிர்வரும் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவு கட்சியான பொதுஜன பெரமுணவின் வட மாகாண பொறுப்பாளர் ரஞ்சித் சமரகோன் இத்தகவலை அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து அங்குள்ள மக்கள் இன்றும் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் எதிர்வரும் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுண கட்சியுடன் இணைந்து போட்டியிட முன்வந்துள்ளனர்.

வடக்கில் மட்டுமன்றி, தெற்கிலும் தமிழ் மக்கள் மஹிந்த மீது நல்லபிப்பிராயம் கொண்டுள்ளனர். சிங்கள மக்களிலும் கனிசமான ஆதரவாளர்கள் உள்ளனர்.

அவர்கள் ஒருபோதும் ஆளுந்தரப்பில் உள்ள சுதந்திரக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் ரஞ்சித் சமரகோன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.