Dec 15, 2017

முஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்கள் அமைப்பு, தமது பிடிவாதத்தை கைவிடுவது சிறந்தது
முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என குறித்த சில பெண்கள் அமைப்புகள் முஸ்லிம் அமைச்சர்கள், சட்டத்தரணிகள் உட்பட நீதி அமைச்சரையும் சந்தித்து முஸ்லிம் தனியார் சட்டத்தில்    பெண்களுக்கு அநீதியான சில விடயங்கள் இடம்பெற்றுள்ளதாக   முறைப்பாடு செய்கிறார்கள்  என ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளிவந்ததையிட்டு  பெரும் கவலை அடைகிறேன். 

எமது நாட்டில் முஸ்லிம்களாகிய எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள மாபெரும் சொத்து, வரப்பிரசாதம் தான் இந்த முஸ்லிம் தனியார் சட்டமாகும். இது எமது மூதாதையர்களான அறிஞர் பெருமக்களால் பல நன்னோக்கத்தோடும், தூரநோக்கோடும், அல்லாஹ்வைப் பயந்தும் அமானிதமான முறையில் தயாரிக்கப்பட்டு 1956 ஆம் ஆண்டு முதல் அமுல் நடாத்தப்பட்டு வருகின்ற ஒன்றாகும். அதுதான் இன்று நமது கையில் தவழ்ந்து கொண்டிருக்கின்றது.  

என்றாலும், கவலைக்குரிய விடயம் என்னவென்றால் சில பெண்கள் அமைப்புகள் முஸ்லிம் தனியார் சட்டத்தில்   இடம் பெற்றுள்ள மார்க்க விடயங்களில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற பிடிவாதப் போக்கில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையாகும்.   இவர்கள் ஒரு விடயத்தை விளங்க வேண்டும்.

மார்க்கத்தில் உள்ள சட்டங்கள் என்பது  மனிதனாலோ வேறு அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. இது அல்லாஹு தஆலா மற்றும் அவனது இறுதித் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினால் ஷரீஅத்தாக்கப்பட்டவைகள். எனவே இந்த மார்க்க சட்டத்தில் எந்தவொரு தனி நபருக்கோ, எந்தவொரு இயக்கத்துக்கோ, அமைப்புக்கோ, நிறுவனத்திற்கோ தலையீடு செய்ய முடியாது. அது அனுமதிக்கப்படவுமில்லை. முஸ்லிம் சமூகத்தால் அதை அனுமதிக்கவும் முடியாது.  

எனவே, எமது முன்னோர்கள் இந்த தனியார் சட்டத்தை மார்க்கத்துக்கு முரணில்லாத அமைப்பில் குறைபாடுகளின்றி அழகான முறையில் இந்நாட்டு முஸ்லிம் உம்மத்தினருக்கு வடிவமைத்து உருவாக்கித் தந்துள்ளார்கள். இதனை பாதுகாத்து எதிர்கால முஸ்லிம் சமூகத்தினருக்கு விட்டுச் செல்வது இந்நாட்டில் உள்ள அனைத்து ஆண், பெண் முஸ்லிம்களுக்கும் கடமையாகும். 

மேலும் இந்நாட்டில் அறிவிலும், அனுபவத்திலும் நிறைந்த நீதியரசர்களான எம்.எம். அமீன், எம்.எஸ்.எம். ஹுஸைன், எம்.எம். அப்துல் காதர் போன்ற உயர் நீதிமன்ற நீதியரசர்கள் கூட முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்கவில்லை. மாறாக அதனை பாதுகாப்பதிலும் அதனடிப்படையில் கருமமாற்ற வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாய் இருந்து வந்தார்கள்.

எமது முஸ்லிம் சமூகத்தின் ஒரு வரப்பிரசாதம்   தற்போது ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஸுப் அவர்களும் முஸ்லிம் தனியார் சட்ட திருத்த ஆலோசனை குழுவின் தலைவராக இருந்து வருவதாகும். அவர்களும் முன்னைய நீதியரசர்கள் போன்று தம் அறிக்கையை தயாரித்து சகல முஸ்லிம் மக்களதும் துஆவை பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்.  

எனவே, தயவு செய்து முஸ்லிம் தனியார் சட்டத்தில் தங்களது பிடிவாதப் போக்கிற்காக அதில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சி செய்து தாங்கள் அதில் வெற்றி பெற்றால் கியாமத் நாள் வரை இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் சாபத்திற்கு தாங்களும் தங்களது குடும்பத்தினரும் ஆளாகிவிடுவீர்கள் என்பதனை குறித்த பெண்கள் அமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.  

என்றாலும், இந்த குறிப்பிட்ட பெண்கள் அமைப்புக்களின் ஆதங்கங்கள், முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவைகளாக இருந்தால் அது இதில் உள்ள நிர்வாக கட்டமைப்பில் உள்ள குறைபாடாகத் தான் இருக்குமே தவிர அல்லாஹ் ரசூலுடைய சட்டத்தில் எந்த குறைபாடும் இருக்க முடியாது. எனவே, மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டுமெனின் அந்த நிர்வாக கட்டமைப்பிலேயே கொண்டு வர ஆலோசனை செய்யலாம். (அதுவும் தேவை என்றிருப்பின்.)

தகுதியான காழி மார்களை நியமித்தல், தகுதியான சம்பளம், பொலிஸ் அதிகாரத்தை அதிகரிக்கச் செய்தல், பாதுகாப்பான இடம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு முகாமைத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே ஆண் தரப்பால் நடைபெறும் அநியாயங்களை இல்லாது ஒழிக்கலாம்.

இவ்வாறு நிர்வாக கட்டமைப்பின் மேம்பாட்டின் பக்கம் சற்றும் திரும்பி பார்க்காமல் அதை விட்டு விட்டு அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் ஷரீஅத் ஆக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் மார்க்க விடயத்தில் கைவைப்பதையும் தலையீடு செய்வதையும் இந்த நாட்டில் உள்ள எந்தவொரு முஸ்லிம் பிரஜையும் சகித்துக் கொள்ள மாட்டார் என்பதை ஆணித்தரமாக சொல்கின்றேன். 

எனவே, குறிப்பிட்ட அமைப்பினரின் நடவடிக்;கைகளை பார்க்கின்ற பொழுது இது ஒருவகையில்  மேற்கத்தேய வாதிகளின் தொண்டு நிறுவனங்களால் பெற்றுக் கொள்ளும்  பிச்சைகள், சுகபோக வாழ்க்கை போன்றவற்றிற்கு அடிபணிந்து விட்டார்களோ, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற துடிக்கின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, இவ்விடயத்தில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் பயந்து வாழுமாறு மிக அன்பாக வேண்டிக் கொள்கிறேன். 

குறிப்பாக புத்தளத்தைச் சேர்ந்த குறித்த பெண்கள் குழு இவ்விடயத்தில் மும்முறமாக ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது. அநியாயம் புரிகின்ற கணவன்மார்கள், காழிமார்கள், விவாகப் பதிவாளர்கள் போன்றவர்களுக்கு கடுமையான தண்டனைகளை உருவாக்க முயற்சி செய்யுங்கள். அதற்குரிய ஆலோசனைகளை வழங்குங்கள்.

தல்துவை பவாஸ்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post